பங்களாதேஷில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் ஹிந்துக்கள்

பங்களாதேஷில் 2026, பிப்ரவரி 12 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மை ஹிந்துக்களின் நிலைப்பாடு மற்றும் தற்போதைய சூழல் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது.

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்படும் முதல் தேர்தல் என்பதால், ஹிந்துக்கள் ஒரு “நிச்சயமற்ற” நிலையில் உள்ளனர். தங்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட போராடும் அதேவேளையில், அதிகரித்து வரும் மதவாத சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதே அவர்களின் தற்போதைய மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

2026 தேர்தலில், 300 தொகுதிளில், சுமார் 60 முதல் 70 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஹிந்துக்களின் வாக்குகள் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

குறிப்பாக மேற்கு மற்றும் வடக்கு எல்லை மாவட்டங்களில் இவர்களின்
வாக்கு வங்கி மிக முக்கியமானது. அதேவேளையில் ஹிந்துக்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

பங்களாதேஷில் ஹிந்துக்களுக்காகவே பிரத்யேகமாகச் செயல்படும் அரசியல் கட்சிகள் மிகக் குறைவு. பெரும்பாலான ஹிந்துக்கள் பாரம்பரியமாக பெரிய கட்சிகளையே ஆதரித்து வந்துள்ளனர். இருப்பினும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகப் போராடும் சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் 2026 தேர்தலை ஒட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தற்போது ஹிந்துக்களுக்காக வாதாடும் அரசியல் கட்சியான அவாமி லீக் தடை செய்யப்பட்ட காரணத்தால், ஹிந்து சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகின்றனர்.

‘பங்களாதேஷ் ஜாதியோ ஹிந்து மகாஜோட்’ அமைப்பின் பொதுச் செயலாளர் கோவிந்த சந்திர பிரமாணிக் போன்ற முக்கிய ஹிந்து தலைவர்களின் வேட்புமனுக்கள் தொழில்நுட்ப காரணங்களைக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளன. துலால் பிஸ்வாஸின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

இவர்களின் மனு நிராகரிக்கப்படுவதற்கு, ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் நெருக்குதல் காரணம் எனக் கூறப்படுகிறது. நிராகரிக்கப்பட்ட மனுக்கள், ஹிந்துக்கள் நிறைந்த நாடாளுமன்ற தொகுதியாகும்.

2017-ல் சிறுபான்மையினரின் நலனுக்காக தொடங்கப்பட்ட பங்களாதேஷ் மைனாரிட்டி ஜனதா கட்சிக்கு, 2025 ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தான், தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

இக்கட்சிக்கு ஆதரவாக, பங்களாதேஷ் ஜாதியோ ஹிந்து மகாஜோட்டும், பங்களாதேஷ் ஹிந்து, பௌத்த, கிறிஸ்தவ ஒக்கிய பரிஷத் ஆகிய இரண்டும் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கட்சி பிப்ரவரி தேர்தலுக்கு முன்னதாக வங்கதேசத்தில் ஹிந்து மற்றும் பிற சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைக்க முயல்கிறது. தேசிய நாடாளுமன்றமான ஜாதியா பரிஷத்தில் உள்ள 300 இடங்களில் 91 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது, சுமார் 40 முதல் 45 தொகுதிகளில் வெற்றியைப் பெறும் நோக்கத்துடன் செயல்படுவதாக கூறப்படுகிறது.

மதச்சார்பற்ற வங்காளதேசத்தை கட்டியெழுப்புதல், நாட்டை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து கூட்டாட்சி முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்தல் ஆகியவை இக்கட்சியின் தேர்தல் நோக்கமாக உள்ளது.