தமிழகத்தில் சோழவள நாட்டில் திருக்கடவூர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் உதித்த, சுப்ரமண்யம் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். இந்த திருக்கடவூரில் அருள்பாளிக்கும் தெய்வம் அன்னை அபிராமி. இந்த தெய்வத்திடம் மாறாத பக்தியை கொண்டிருந்தார்.
தான் பார்க்கும் பெண்களை, பெண்ணாக பார்க்காமல் அம்பிகையின் அம்சமாகவே கண்டார். இது அவருக்கு உயர்வான எண்ணமாயிருந்தாலும், ஊரார் கண்களுக்கு பைத்தியக்காரணைப் போல் தோன்றியது.
அப்போது தஞ்சை மண்ணை ஆண்டு வந்த சரபோஜி மகாராஜா அபிராமியை தரிசிக்க வரும்போது, தியானத்திலிருந்த சுப்ரமண்யத்தை, ராஜா வருவதை கூறி எழுந்திருக்குமாறு கூற, தியானத்தின் உச்சியிலிருந்த சுப்ரமண்யத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
அதை அறிந்த அரசர், அவர் தியானத்தில்தான் இருக்கிறாரா? என்பதை சோதிக்க சுப்ரமண்யத்தை இன்று என்ன திதி என்று கேட்க (அன்று தை அமாவாசை திதி), அவர் அன்னையின் தியானத்தில் இருந்ததால், தாயாரின் கோடி சூர்ய பிரகாசமுள்ள அன்னையின் திருமுக மண்டபத்தின் ஒளி கொண்டு, இன்று பௌர்ணமி என்று கூற, மன்னனும் நகைத்து அப்படியானால் இன்று நிலவு வருமா? என்று கேட்க சுப்ரமண்யரும் வரும் என்று கூறி, தியான நிலை கலையாமல் இருந்தார்.
இன்று நிலவு வரவில்லையெனில், உம்மை உரிகட்டி எரித்துவிடுவேன் என்று சொல்லி சென்றுவிட்டார். அன்று மாலை காவலாளிகள் சுப்ரமணியத்தை கொலைக்களத்துக்கு அழைத்து சென்றனர். அங்கும் அரசன் கேட்க, இன்று நிலவு தோன்றும் என்று தெளிவாக கூறினார்.
சாயங்கால பூஜை மணியும் கோயிலில் ஒலிக்கத் துவங்கிய உடன் அரசன் இப்போதாவது தவறு என்று ஒத்துக்கொள், உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறேன் என்று கூற, நான் சொல்லியிருந்தால் அல்லவோ மன்னிப்பு கேட்க, தாய் சொன்னாள், என்று கூறி மறுத்தார்.
உடனே மன்னன் தண்டனையை நிறைவேற்ற சொல்ல, அவரும் அம்பிகையின் பெயரில் பாடல்களை பாட ஆரம்பித்தார். அந்தாதியாக 100 பாடல்களை பாடிய அவர் 79மவது பாடலைப் பாடும் போது, தேவருக்கும் மூவருக்கும் காணக்கிடைக்காத தெய்வநாயகி அவர்களுக்கு காட்சி தந்து, தன் காதிலிருந்த காதணியை கழற்றி, வானில் வீச அது சந்திரனாய் பிரகாசித்தது.
அதைக்கண்ட மன்னனும், மக்களும் அதிர்ச்சியடைந்து சுப்ரமண்யத்துக்கு “அபிராமிபட்டர்” என்று பெயர் சூட்டி, தன் அவையிலேயே தக்க மரியாதையொடு வைத்திருந்தார்.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை இம்மூன்றும் விசேஷமாகும். அமாவாசை பித்ருக்களுக்கு உரித்தானது. அன்று தர்பணம் செய்வது, ஸ்வாமிக்கு படையல் போடுவது மிகவும் சிறப்பு. தர்ப்பணம் செய்வதன் மூலம், நம் முன்னோர்களை திருப்திபடுத்துகிறோம், அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும்.