இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டு தினத்தில் கோயில்களில் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் ஆன்மீக அலை பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த பக்தியை காசாக்கும் கேவலமான நடவடிக்கைகளில் ஹிந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிறப்பு நாட்களில் நிறைய பக்தர்கள் கோவிலுக்கு வந்தாலும் அவர்கள் மனநிறைவோடு சுலபமாக இறைவனை தரிசித்து செல்ல ஹிந்து அறநிலையத்துறை இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருக்கல்யாணத்திற்கு கட்டணம் வைத்து வசூல் வேட்டை நடத்த முன்பதிவு அறிவிப்பு ரூ.500, ரூ.200 என வெளியிடப்பட்டுள்ளது.இணைய சுட்டியும் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே வி.ஐ.பி தரிசனம் என்ற பெயரில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்களின் அதிகார பலத்தைபிரயோகித்து வி.ஐ.பி வரிசையில் தரிசனம் செய்ய செல்வதால், பாமர பக்தர்கள் இறைவனை தரிசிக்க முடியாமல் நெடுநேரம் கால் எடுக்க நின்று அவதிப்படுகிறார்கள். சிறப்பு தரிசனம், அதி விரைவு தரிசனம் என்றெல்லாம் கட்டண தரிசனம் அறிவிக்கப்பட்டு, சாதாரண மக்கள் இறைவனை நிம்மதியாகக் காண முடியாத அளவு சிக்கலை அறநிலையத்துறை ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு நெடுநேரம் நிற்பவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அத்யாவசிய தேவைகளை கூட ஹிந்து சமய அறநிலை துறை செய்வதில்லை.இதனால் வயதான மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பக்தர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள்.ஆனால் அறநிலையத்துறையோ எந்தெந்த வகையில் எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வியாபார தலமாக ஆலயங்களை மாற்றிவிட்டது. மண்டல பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்கும் அளவுக்கு விரைவாக தரிசனம் செய்ய தேவசம் போர்ட் ஏற்பாடுகளை செய்கிறது. அதுபோல, இங்கும் விசேஷ நாட்களில் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய உரிய ஆய்வு நடத்தி ஏற்பாடுகளை செய்யாமல் கட்டணம் வசூலிப்பதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு ஹிந்து அறநிலை துறை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பணம் படைத்தோர் போன்றவர்களுக்கு விரைவு தரிசனம், பாமர பக்தர்களுக்கு நீண்ட நெடும் நேரம் காத்திருந்து தரிசனம் என்றும் மோசமான நடைமுறையை ஏற்படுத்தி, பக்தர்களை பொருளாதார அடிப்படையில் பிரித்து பொருளாதார தீண்டாமையை திணிக்கிறது. ஹிந்து சமய அறநிலைத்துறை, ஆலயங்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பொருளாதார அடிப்படையில் பக்தர்களை பிரிக்கக்கூடாது என்று நீண்ட காலமாக இந்து முன்னணி போராடி வருகிறது.அந்த வகையில் உடனடியாக அனைத்து தரிசன கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.