தமிழகத்தின் மிகப் பெரிய தேர்களில் ஒன்றான நெல்லையப்பர் தேர், தற்காலத்தில் ஒரே நாளில் நிலைக்கு வந்து சேர்கிறது. ஆனால், முன்னர் தேரோட்ட உத்ஸவம் என்பது ஒரு வாரம் பத்து நாட்கள் என ஒவ்வொரு நாளும் சிறிது தொலைவுக்கு என தேர் இழுத்து அப்படியே விட்டு விடுவார்கள். இந்த நிலையை மாற்றியவர்கள் நெல்லை ஸ்வயம்சேவகர்கள். அது பற்றிய சுவாரஸ்யமான தகவல் இங்கே…
நெல்லை டவுனில் ஒரு வாரம் ஓடிய நெல்லையப்பர் தேரை ஒரே நாளில் நிலையம் சேர்க்க வைத்தவர்கள் ஸ்வயம்சேவகர்கள். ‘அம்மையப்பன் தேரை இன்றே நிலையம் சேர்ப்போம் வாரீர்’ என்ற இன்றைய அழைப்பின் பின்னே உள்ள சரித்திரம் அது.
இறையருளால் மனித சக்தியால் மட்டுமே 517 வருடமாக இழுக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஒரே தேர் நெல்லையப்பரின் திருத்தேர். இந்நாட்களில் காலையில் கிளம்பும் தேர் மாலையில் நிலையம் வந்தடைகிறது. உயரம் 9 தட்டுகளிலிருந்து 5 ஆக குறைந்தும், இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டும்கூட நிலைக்கு வந்தடைய சுமார் 9 மணி நேரம் ஆகிறது. சுமார் 33 வருடங்களுக்கு முன்பு வரை, நெல்லையப்பர் தேர் ஒரு வாரம், பத்து நாள், ஏன் 28 நாட்களாகக் கூட இழுக்கப்பட்டு நிலையம் வந்தடையும். தெற்கு – மேலரதவீதி சந்திப்பில் உள்ள. சந்திப் பிள்ளையார் கோவிலைக் கடக்கவே 4 நாட்கள் ஆகும்.
முதல் நாள் மட்டுமே முழுநாள் இழுப்பார்கள். அடுத்தடுத்த நாட்களில் மாலை 5 மணிக்கு மேல் தான் இழுப்பார்கள். ரதவீதியில் கடை முதலாளிகள் சிலர், தேருக்கு சக்கை போடும் பணியாளர்க்கு காசு கொடுத்து தங்கள் கடை முன் தேரை ஒரு நாள் நிறுத்தி வைப்பர். தேர் முன்பு ஆனந்தத்தில் சிலர் செருப்பை மேலே தூக்கி வீசி பறக்கவிடுவர். தகராறு நடக்கும். உடனே வடத்தைப் போட்டு விட்டு சென்று விடுவர். வெகுசிலரே பக்தியோடு தேர் இழுப்பர். பொதுமக்கள் பலர் சாலை ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, இனிப்பு மிட்டாய் வாங்கி வீட்டுக்குச் செல்வர். இதையெல்லாம் மாற்றிக் காட்டியவர்கள் ஸ்வயம்சேவகர்கள்.
1982ல் இந்துமுன்னணி அமைப்பு, நெல்லை நகரில் தொடங்கப்பட்ட போது, நெல்லை நகர முதல் அமைப்பாளரானார் காந்திமதிநாதன். 1984ல் வாகையடி முனையில் காயல்பட்டினம் முஸ்லீம் வணிக வளாகம் கட்ட அங்கிருந்த அருந்ததியர் சமுதாயத்தினர் வணங்கி வந்த சப்பானிமாடன் கோவிலை அகற்றிய போது இந்துமுன்னணி மிகப்பெரிய போராட்டம் செய்து சப்பானி மாடன் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. அதன் பின் நெல்லை மாநகரில் இந்து முன்னணி வேகமாக வளர்ந்தது. இளைஞர்கள் பலர் இந்துமுன்னணியில் இணைந்தனர்.
1986ல், ஒரே நாளில் நெல்லையப்பர் தேரை நிலையம் சேர்க்க இந்துமுன்னணி முடிவு செய்தது. இந்துமுன்னணி நிர்வாகிகள் தென்காசி சுப்பிரமணிய ஐயர், பா.ரெங்கதுரை, மாருதி நாராயணன், சேதுராமலிங்கம், சுந்தரமகாலிங்கம்பிள்ளை, சிதம்பரம், கோமதிமுருகன், கண்ணன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் களம் இறங்கி வேலை பார்த்தனர். ஆர்எஸ்எஸ்., பொறுப்பாளர்கள் சுந்தர.லெட்சுமணன், பாஸ்கர்ராவ், பரமேஸ்வரன், சுடலையாண்டி, இந்து முன்னணி மாநில பொறுப்பாளர்கள் டாக்டர் அரசுராஜா, வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் வழிகாட்டினர்.
டவுன் குற்றால ரோட்டில் அப்போது இந்து முன்னணி நகர அலுவலகம். இரண்டு மாதம் முன்பே கோபால்ஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒரே நாளில் தேரை நிலையம் சேர்ப்போம் என இந்துமுன்னணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வியாபாரிகள் சங்கத்தில் பேசி அவர்களின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. கூலித் தொழிலாளர் சங்கம், கை வண்டி இழுப்போர் சங்கம், ஆட்டோ ரிக்க்ஷா சங்கம் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து திருவிழா நோட்டீஸ் அடித்து கவர் போட்டுக் கொடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
நகர் எங்கும் காவிப் பொடி கரைத்து சுவர் விளம்பரம். ஓரே நாளில் நிலையம் சேர்க்க வேண்டும் என ஊர் முழுவதும் பரப்பாக பேசப்பட்டது. நன்கொடை யாளர்களிடம் பேசி பெரிய தடி செய்ப்பட்டது. சங்கர் சிமென்ட் நிர்வாகத்திடம் பேசி இரும்பு பிளேட்டுகள் கொண்டு வரப்பட்டன. முன்னாள் சேர்மன் வெங்காச்சி (எ) வெங்கடாச்சலம், வியாபாரி சங்கம் நாராயணன் போன்றவர்கள் ஒத்துழைப்பில் வெளியூர்காரர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதிருந்த கோவில் நிர்வாக அதிகாரி ஒத்துழைப்பு அளித்தார். வள்ளியூர், திருச்செந்தூர், தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் இருந்தும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வந்தனர்.
எல்லோருக்கும் சட்டை பேட்ஜ் வழங்கப்பட்டது. நகர் பொதுமக்களும் ஆர்வத்தில் பேட்ஜ் குத்தி இந்து முன்னணியாக மாறினர். இளைஞர்கள் தலையில் காவி ரிப்பன் கட்ட ஆலோசனை கூறப்பட்டது. காவி வேட்டியை வாங்கிக் கிழித்து ரிப்பனாக நூற்றுக்கணக்கில் தயாரிக்கப்பட, இளைஞர்கள் ஆர்வத்துடன் அதைக் கட்டிக் கொண்டனர்.
ஒழுங்கீனர்களை காவல்துறை உதவியுடன் வெளியூர் காவிப்படை கவனித்தது. தேர் இழுக்காமல் கடை திறந்து வியாபாரம் செய்த சிலருக்கு தனி கவனிப்பு. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேடிக்கை பார்க்கும் மக்களை தேர் இழுக்க வைத்தது. தேருக்கு தடிபோடும் மலையாளமேடு தென்பத்து ஊர் நாட்டாமைகளை சந்தித்து மரியாதை செய்து இந்து முன்னணி நிர்வாகிகள் பேச, அவர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இத்தனை பெரிய முயற்சிக்குப் பின் முதல்முறையாக 1986ல் இரவு 9 மணிக்கு ஒரே நாளில் நெல்லையப்பர் தேர் நிலையம் சேர்ந்தது.