தமிழக தொலைக்காட்சி ஊடகங்களில் தினசரி அன்றாடப் பிரச்சினைகளை மையமாக வைத்து விவாதங்களை நடத்தி வருகிறார்கள். சில நேரங்களில் அர்த்தமற்ற தலைப்புகளை எடுத்துக் கொண்டு தேவையில்லாத புதிய சர்ச்சைகளை உருவாக்கி விடுகிறார்கள். இப்படித்தான் ‘பெண்களுக்குத் தாலி தேவையா?’ ‘தீபாவளி பண்டிகையில் பட்டாசு தேவையா?’ என்ற தலைப்புகளில் விவாதங்களை நடத்தி பெரும்பான்மையினர் மனதைப் புண்படுத்தினார்கள்.
ஜூன் 21 அன்று உலக யோகா தினமாக உலகமே ஏற்றுக் கொண்ட வேளையில் அதனை கொச்சைப்படுத்தும் விதமாக நியூஸ் 7 சேனல் ஆரோக்கிய இந்தியாவை யோகாவே உருவாக்கும் என்றால் இந்திய மருத்துவத் துறையின் பணி என்ன? என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை நடத்தியது.
விவாதத்தில் கலந்துகொண்ட திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மதிமாறன் யோகா என்பது பார்ப்பனர்களின் திணிப்பு என்பதாகக் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். தெரிவித்த பிறகும் கூட மதிமாறன் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துக் கொண்டேயிருந்தார். நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர், மதிமாறன் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்க வேண்டும். இதே மதிமாறன் தி.க. பெயரில் ஹிந்துக்களை இழிவு படுத்தி வருகிறார். இவர் ஒரு கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்துகொண்ட போட்டோ சமூக ஊடகங்களில் வலம் வருவதைப் பார்த்தால் இவரின் இத்தகைய செயல்களுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் பின்னணியில் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.
நாராயணன் திருப்பதியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இனியாவது நெறியாளர்கள் நடுநிலையோடு நடத்துவார்களா?