இன்று பாரெங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்புகள் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் ஹிந்து மக்களின் உரிமைக் குரலாக அவை ஒலிக்கின்றன. அதேசமயம், உள்நாட்டிலும் பல துறைகளிலும் சங்கத்தின் குடும்ப அமைப்புகள் முன்னிலையில் இருக்கின்றன. இந்த மாபெரும் அமைப்பின் அந்த நிறுவனர் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது. மிக பிரமாண்டமாக விழுதுகள் பரப்பி நிற்கும் ஆல மரம், ஒரு சிறு விதையில் தானே தோன்றியது!
அந்த சிறு விதையின் பெயர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார். அவர் 1889 ல் நாகபுரியில் யுகாதி நன்னாளில் பிறந்தார். அது விடுதலைப் போராட்ட காலம். சிறு வயதிலேயே சிறுவன் கேசவனுக்கு நெஞ்சில் தேசபக்திக் கனல் கன்று கொண்டிருந்தது. தான் படித்த நீல் சிடி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலேய அதிகாரி வந்தபோது, ‘வந்தேமாதரம்’ கோஷம் எழுப்பியதற்காக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டவர் கேசவன். அதன் பிறகு வேறு பள்ளியில் பயின்ற கேசவனின் தேசபக்தியை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் மூஞ்சே (பின்னாளில் அகில பாரத ஹிந்து மகாசபை அமைத்தவர்), அவரை மருத்துவம் படிக்க கொல்கத்தா அனுப்பினார். அங்கு சென்று அக்கால மருத்துவப் படிப்பான எல்.எம்.எஸ். படித்த இளைஞன் கேசவனுக்கு, அங்கிருந்த அனுசீலன் சமிதி என்ற புரட்சிகர அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ஆயினும், ஆங்கிலேய அரசின் கொடூர நடவடிக்கைகளால் புரட்சிகர அமைப்பு சிதறுண்டதை அவர் கண்முன்னே பார்த்தார். சிறு குழுவினர் நடத்தும் ஆயுதப் போராட்டம் மூலமாக நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்காது என்பது மட்டுமல்ல, ஆயுதப் போராட்டம் அதில் ஈடுபடுவோரை அழித்துவிடும் என்பதையும் உணர்ந்தார் அவர்.
நாகபுரி திரும்பிய கேசவன் மக்களின் நோய் நீக்கும் மருத்துவப் பணியில் இருந்தவாறே, அன்று பிரபலமாக இருந்த காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணிபுரிந்தார். அப்போது நாகபுரி வட்டார காங்கிரஸ் தொண்டர் படையில் துணைத் தலைவராக கேசவன் செயல்பட்டார். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே, ‘மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மகாராணிக்கு’ காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விண்ணப்ப மனு எழுதும் முறை அவருக்கு அலுத்துவிட்டது. தீவிர தேசியவாதியான பாலகங்காதர திலகரின் அடியொற்றிச் செயல்பட்ட கேசவனுக்கு, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய பூசல்களும், அதன் தலைவர்களிடம் காணப்பட்ட சுயநலமும் மெத்தனமும் அதிருப்தியை ஏற்படுத்தின. அவருக்கு மிகவும் நெருக்கமான தலைவரான திலகரும் 1920 ல் காலமாகிவிட்டார்.
இவ்வாறாக நாட்டு விடுதலைப் போரில் அன்றிருந்த இரு வழிமுறைகளின் போதாமையையும் நேரில் அறிந்த கேசவன், இதற்கு என்ன தீர்வு என்று சிந்தித்தார். முதலில் நாம் ஏன் அடிமைப்பட்டோம் என்று ஆராய்ந்த கேசவனுக்கு, பாரதியர்களின் ஒற்றுமையின்மையும் பலமின்மையும் தான் அடிமைத் தளையின் காரணம் என்பது தெளிவாகப் புலப்பட்டது.
எனவே இதற்கு மாற்றுவழி காண்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் தொண்டர் படையான ஹிந்துஸ்தானி சேவாதளத்தின் நிர்வாகியாகப் பணியாற்றிய அவர், சுய ஒழுக்கம் இல்லாத, கட்டுப்பாடற்ற தொண்டர்களால் சாதனை புரிய முடியாது என்பதையும் உணர்ந்தார்.
கேசவன் வாழ்ந்த மகாராஷ்ட்ரம் ஏற்கெனவே மாவீரர் சிவாஜியின் வீரத்தால் பெருமை பெற்ற மண். சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸர் வீரம் மிகுந்த இளைஞர் படையை உருவாக்குவதில் நாட்டம் கொண்டவர். அனுமன் பக்தரான அவர் ‘வலிமையே வாழ்வு’ என்று உணர்ந்தவர். அந்த அடிப்படையில் வலிமையான இளைஞர் குழுக்களை உருவாக்கி, அதன்மூலம் பக்தியைப் பெருக்கியவர்; அவரது வழிகாட்டுதலில்தான் மாவீரர் சிவாஜி சுதந்திர ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். அத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட பூமியில் வாழ்ந்த கேசவனுக்கும், வலிமையின் தேவை புரிந்தது. தனிமனிதனின் வலிமையே சமுதாய வலிமையாகவும் தேச வலிமையாகவும் மாறும் என்பதே டாக்டர் கேசவனை வழிநடத்திய உள்ளுணர்வு.
மோசமான நாட்டு நடப்புகளால் மனம் நொந்திருந்த அவர், நாடு சுதந்திரம் அடையப் போராடுவதை விட, பெறப்போகும் சுதந்திரத்தைப் பேணிக் காக்கக் கூடிய வீரம் மிகுந்த இளைஞர் படையை உருவாக்க வேண்டியதன் தேவை அதிகம் என உணர்ந்தார். எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர், புதிய அமைப்பு ஒன்றை நிறுவத் துணிந்தார். அவ்வாறு அவர் 1925 விஜயதசமி நன்னாளில் எளிமையாக நிறுவிய அமைப்பே, இன்று உலகம் முழுவதிலும் விரிந்து படர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.
இன்று உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ்ஸில் ஊக்கம் பெற்று. அரசியல் பணிக்களத்தில் இயங்குகிறது. அதுபோலவே பாரதத்தின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கமும் (பி.எம்.எஸ்.), மிகப் பெரிய மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தும் (ஏ.பி.வி.பி.), பெண்கள் அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சமிதியும் சங்க பரிவார் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். இன்று நாட்டில் செயல்படும் பாரதிய கிசான் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி, சேவாபாரதி, வித்யாபாரதி, சம்ஸ்கிருத பாரதி, சமஸ்கார் பாரதி, விஞ்ஞான் பாரதி, க்ரீடா பாரதி போன்ற பல அமைப்புகளும் அதனதன் துறைகளில் முதன்மை வகிக்கின்றன. ஆனால், இவை அனைத்திற்கும் வேரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரை நிறையப் பேருக்குத் தெரியாது.
கம்யூனிஸ்டுகளின் வேத நூலான கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ (டாஸ் கேபிடல்) குறித்து பலருக்கும் தெரியும். அந்த மூலதனம் நூலின் பல கருத்துகள் இன்று காலாவதியாகிவிட்டன. ஆயினும் அதையே தான் கம்யூனிஸ்டுகள் இன்றும் எந்த விமர்சனமும் இன்றிப் போற்றுகின்றனர். அது ஒரு செமிட்டிக் மத மனநிலை. எனவேதான் அந்தக் கட்சி காலாவதியாவிட்டது.
நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிறுவப்பட்ட அதே ஆண்டு தான் பாரதத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியும் கான்பூரில் நிறுவப்பட்டது. அதற்கு முன்னதாகவே 1885 ல் காங்கிரஸ் கட்சி மும்பையில் நிறுவப்பட்டது. இந்த மூன்று அமைப்புகளின் தற்போதைய நிலையை ஒப்பிட்டாலே, வரலாறு தெரிவிக்கும் உண்மை புரியும்.
காங்கிரஸ் கட்சி இன்று மக்களின் பேராதரவை இழந்தது மட்டுமல்ல, சிறுபான்மையினரின் ஆதரவுக் கட்சியாக மட்டுமே மாறிவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியோ பல கூறுகளாகச் சிதறி, தனது அரசியல் அடையாளத்தையும் துறந்து செல்வாக்கிழந்துவிட்டது. மாறாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உறுப்பினர்களுடன், புத்திளமையுடன் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட தலைவர்களை சார்ந்து இருந்ததால் காலாவதியானது. செல்லுபடியாகாத சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த கம்யூனிஸ்டு கட்சி கரைந்துவிட்டது. ஆனால், நிறுவியவர் யாரென்றே பலரும் அறியாத, தமக்கென எந்த ஒரு சித்தாந்த அடிப்படை நூலும் கொண்டிராத ஆர்.எஸ்.எஸ் தான் இன்றும் வளர்கிறது. நூற்றாண்டு காணும் இந்த இயக்கத்தின் (1925-−2025) சகோதர இயக்கங்களின் எண்ணிக்கையே நூறைத் தாண்டும்.
இதனை அந்த டாக்டர் கேசவன் எப்படி சாதித்தார்? இந்தக் கேள்விக்கு ஒரே பதில், சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திய துறவும் தொண்டும் தான். கேசவரின் இயக்கச் செயல்முறை எளிமையானது மட்டுமல்ல, அலாதியானது.
- ஒவ்வொரு கிராமத்திலும் நகரின் பகுதிகளிலும் இளைஞர்கள் ஒன்றுகூடி ஒருமணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- அவர்கள் சான்றோரின் அமுதமொழிகளை நினைவுகூர்ந்து, தேசபக்திப் பாடல்களைப்பாட வேண்டும்.
- தற்காப்புக் கலைகள், யோகா, ராணுவ நடைப் பயிற்சி ஆகியவற்றைக் கற்பதால் இளைஞர்களின் வலிமையும் கட்டுப்பாடும் ஆரோக்கியமும் பெருகும்.
- ஒவ்வொரு ஊரிலும் இவ்வாறு பயிற்சி பெற்ற இளைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இதே செயல்முறையைப் பரப்ப வேண்டும்.
- இந்தப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தங்கள் வாழ்வை நாட்டிற்காக சமர்ப்பணம் செய்வது இயல்பாக நடந்தேறும்.
- பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று சங்க செயல்முறையைப் பரப்பினார்கள். அவர்கள் அதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரிகளாக தங்கள் வாழ்வை மாற்றி அமைத்தனர்.
- இவர்கள் அனைவருக்கும் முன்னுதாரண நாயகராக டாக்டர் கேசவன் இருந்தார். அவரது அடியொற்றி, நாட்டிற்காகவே வாழும் மாபெரும் தொண்டர்படை உருவானது. இது இறைவனின் சித்தம் போல, நாடு முழுவதும் பரவியது.
1940ல் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் காலமானார். அப்போது அவருக்கு வயது 51 மட்டுமே. அவர் எளிமையாக நிறுவிய சங்கத்தின் வயது அப்போது 15 மட்டுமே. அப்போதே ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதிலும் இருந்த அனைத்து மாகாணங்களிலும் பரவி இருந்தது.
டாக்டர் ஹெட்கேவாரின் மறைவுடன் சங்கம் தனது பணியை நிறுத்தவில்லை. ஏனெனில் சமுதாய அமைப்பு என்பது தனிநபரைச் சார்ந்ததில்லை. ஹெட்கேவாருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களாக பலர் வருகிறார்கள். மாதவ சதாசிவ கோல்வல்கர் / ஸ்ரீ குருஜி (1940-−1973), மதுகர் தத்தாரேய தேவரஸ் (1973-−1994), பேராசிரியர் ராஜேந்திர சிங் (1994-−2000), கு.சி.சுதர்ஸன் (2000 – 2009) ஆகியோரைத் தொடர்ந்து தற்போது டாக்டர் மோகன் பாகவத் (2009 முதல்) இதன் ஆறாவது தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். தலைவர்கள் மாறலாம்; ஆனால், டாக்டர் ஹெட்கேவார் வகுத்த அதே பாதையில், காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் பயணிக்கிறது ஆர்.எஸ்.எஸ் இதுவே சங்கத்தின் சிறப்பு. அவிழ்ந்த நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக் கிடந்த ஹிந்து சமுதாயத்தை ஒன்றுபடுத்தி வலிமைப்படுத்தியது சங்கத்தின் அரும்பெரும் சாதனை.
நாட்டில் பெருவாரியாக உள்ள ஹிந்துக்கள் தங்கள் ஜாதி, மொழி, வர்க்க பேதங்களை மறந்து ஒன்றுபட்டால், அதன் மூலமாக அரசியல் களம் சீர்திருந்தினால், அனைத்து நலன்களும் சாத்தியமாகும் என்பது தற்போது நிதர்சனமாக உணரப்பட்டுவிட்டது. நாகபுரியில் நான்கைந்து சிறுவர்களுடன் தினமும் ஒருமணி நேரம் விளையாடிய டாக்டர் கேசவன், தேசத்தைப் பீடித்த நோய்களுக்குக் கண்ட மகத்தான மருத்துவம் தான் ஆர்.எஸ்.எஸ் ஆனால், அமைப்பை அறிந்த அளவிற்கும் கூட அவரது வாழ்வை பலரும் அறிய மாட்டார்கள். இது வியப்பும் அளிப்பதில்லை. ஏனெனில் நாட்டைக் காக்க விரதம் பூணச் செய்யும் ஊக்கமும், மக்களுக்குத் தொண்டாற்றும் மனப்பான்மையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிநாதம். பெயருக்காகவோ, புகழுக்காகவோ, விளம்பர மோகத்திற்காகவோ இந்த சங்கத்தில் யாரும் பணிபுரிவதில்லை என்பதே இதன் அடித்தளம்.
இன்று நாடு முழுவதிலும் பல துறைகளில் மக்களை இணைக்கும் பணிகள் தொடர்கின்றன. மக்களுக்குத் தொண்டாற்றும் சங்கத்தின் சேவை அமைப்புகளும் புதிது புதிதாகத் தோன்றியபடியே இருக்கின்றன. இதன் தாக்கம் அரசியல் களத்திலும் வெற்றியாக எதிரொலிக்கிறது. ஆயினும் வெற்றி – தோல்வி பற்றிய கவலையின்றி,
ஆர்.எஸ்.எஸ் வழக்கம்போல கடமையாற்றுகிறது.
மகத்தான லட்சியங்கள் விதைக்கப்படும் மனம் ஒவ்வொன்றும் மாபெரும் கானகத்தை உருவாக்க கூடிய விதைப்பந்து ஆகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாக்கப்படும் ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும், “இந்த உலகின் வழிகாட்டியாக பாரதத்தை உயர்த்துவேன்” என்ற பிரதிக்ஞையுடன் செயல்படுகிறார்.
இந்த வழிமுறையை நமக்கு அளித்த மகத்தான மனிதரான டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரை, சங்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இத்தருணத்தில் நினைத்துப் போற்றுவோம். அவர் நினைவே மேலும் பல சாதனைகளுக்கு நம்மை வழிநடத்தும்.
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்
டாக்டர் ஹெட்கேவார் பிறந்த நாள் யுகாதி (இந்த ஆண்டு மார்ச் 30)
கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்