திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகுமிகுந்த மலைப்பகுதி மாஞ்சோலை. 7,347 ஹெக்டேர் அளவுக்கு பறந்து விரிந்து கிடக்கும் மலைப்பகுதி முழுதும் தேயிலை தோட்டம் தான்.
சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமாக இருந்த அந்த மலைப்பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன், காபி, தேயிலை, ஏலக்காய், கொய்னா, சின்கோனா உள்ளிட்டவற்றை விளைவிப்பதற்காக, ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என, ஐந்து எஸ்டேட்களை உள்ளடக்கிய, அந்தப் பகுதியில், தேயிலை தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டன. இந்த எஸ்டேட்களில் வேலை பார்க்க, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் மாஞ்சோலைக்கு வந்தனர். கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
சரியான அளவில், காபி, ஏலக்காய், சின்கோனா, கொய்னா விளைச்சல் இல்லாததால், கொஞ்சம் கொஞ்சமாக அவை பயிரிடப்படுவது நிறுத்தப்பட்டது. மாஞ்சோலை மலை முழுதும் தேயிலை மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் தேயிலை விளைச்சலும் குறைய, மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தற்போது நாலுமுக்கு பகுதியில் மட்டுமே தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அந்த தேயிலை தொழிற்சாலையும், சில மாதங்களில் மூடப்பட உள்ளது. எனவே, ஒட்டுமொத்த மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டையும் மூடி, அதை வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
இதற்காக, தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கத் தினர், பணிக் குழுவினருட னும் நிறுவனத்தினர் பேசி யுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில், தங்களின் முடிவு குறித்த பொது அறிவிப்பு வெளியிட உள்ளனர். காலம் காலமாக மாஞ்சோலை மலையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்த, 7,000 பேர் அடுத்து என்ன செய்வது என, புரியாமல் தத்தளித்து வருகின்றனர்.