ஹிமாச்சல பிரதேசம் மாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பல ஆண்டுகளாக பாரதத்தில் கூட்டணி ஆட்சி இருந்தது. அப்போது அரசு செயல்படுமா இல்லையா என்ற நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நமது நாடு மீது பல நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், 2014ல் நிலையான அரசு தேர்வு செய்யப்பட்ட பின்னர், கொள்கை முடிவு மற்றும் நிர்வாகத்தில் நிலைத்தன்மையை கொண்டு வந்தது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்டில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அரசு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது. தற்போது நிலையான அரசின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு பா.ஜ.க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மாநில சுற்றுலா துறையை கொரோனா இடர்பாட்டில் இருந்து மீட்டு கொண்டு வந்துள்ளது. தற்போது பாரதம் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அவை நமது நாட்டுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன” என தெரிவித்தார்.