நியமிப்பவரால் நீக்கவும் முடியும்; சொல்கிறது சுப்ரீம் கோர்ட்

அரசியலமைப்பு சட்டத்தின்படி, நியமன அதிகாரியாக இருக்கும் கவர்னர், நீக்குவதற்கான அதிகாரியாகவும் உள்ளார்’ என, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது. அமைச்சரை நீக்குவதற்கு, கவர்னருக்கு அதிகாரம் இல்லை எனவும், அரசை அது கட்டுப்படுத்தாது எனவும், தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரை நியமிப்பது போல், அவரை நீக்கவும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக, எதிர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், 1979ல் பிறப்பித்த உத்தரவில், ‘அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல்வரை கவர்னர் நியமிக்கிறார். நியமன அதிகாரியாக இருக்கும் அவர், நீக்குவதற்கான அதிகாரியாகவும் உள்ளார்’ என கருத்து தெரிவித்திருந்தது.

அது பற்றிய விபரம்: கடந்த, 1971 – 76ல், தமிழக முதல்வராக கருணாநிதி பதவி வகித்தார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோதுமை கொள்முதல் செய்ததில், 5 லட்சம் ரூபாய் வரை ஆதாயம் அடைந்ததாக, கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி, கருணாநிதி தொடர்ந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கருணாநிதி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அரசியலமைப்பு சட்டப்படியான பதவியை வகித்ததால், பொது ஊழியர் என்ற வரையறைக்குள் தன் பதவி வராது என்றும்,அதனால் இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும், கருணாநிதி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை, அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ‘அரசு கருவூலத்தில் இருந்து சம்பளம் பெறுவதால், முதல்வரும் பொது ஊழியர் தான்’ என தீர்ப்பளித்தது. இந்த உத்தரவில், ‘அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல்வரை கவர்னர் நியமிக்கிறார்; நியமன அதிகாரியாக இருக்கும் அவர், நீக்குவதற்கான அதிகாரியாகவும் உள்ளார்’ என, கூறப்பட்டுள்ளது.