உலகின் 100 செல்வாக்குமிக்க, நிதித் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் பெண்களின் பட்டியலை பாரோன்ஸ் (Barron’s) நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாரத வம்சாவளியை சேர்ந்த ஐந்து பெண் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக ஆண்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் சர்வதேச நிதி துறையில்பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இந்த பட்டியலில் பாரத வம்சாவளியைச் சேர்ந்த அனு அய்யங்கார், ரூபால் ஜே.பன்சாலி, சோனல் தேசாய், மீனா ஃபளையன், மற்றும் சவிதா சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அனு அய்யங்கார்: உலகப்புகழ் பெற்ற ஜே.பி மார்கன் நிறுவனத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (Mergers and Acquisitions) பிரிவின் உலகளாவிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். 2020ம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் இணைத் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
ரூபால் ஜே.பன்சாலி: ஏரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உலகளாவிய பங்கு உத்திகளின் தலைமை முதலீட்டு அதிகாரியாகவும் போர்ட்ஃபோலியோ துறை மேலாளராகவும் உள்ளார். மேலும் இவர் நிதித்துறையில் 100 பெண்களின் இயக்குநர்கள் குழு (board of directors of 100 Women in Finance) உறுப்பினராகவும் உள்ளார்.
மீனா ஃபளைன்: இவர் 1999களில் ஜே.பி மார்கன் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் கோல்ட்மென் சாகஸ் நிறுவனத்திற்கு பணிக்கு சென்று, இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவர் தற்போது, கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தில் தனியார் செல்வ மேலாண்மைப் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார்.
சோனல் தேசாய்: 2018ம் ஆண்டு பிராங்க்லின் டெம்பிள்டன் குளோபல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஃபண்ட் நிறுவனத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்று சாதனை படைத்தார். மேலும் இவர் சர்வதேச நாணய நிதியம், தேம்ஸ் ரிவர் கேபிடல் போன்ற பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
சவிதா சுப்பிரமணியன்: இவர் பாங்க் ஆப் அமெரிக்காவின் அமெரிக்க பங்கு மற்றும் அளவு மூலோபாயத்தின் (head of US equity and quantitative strategy) தலைவராக உள்ளார். இவர் அமெரிக்க பங்குகளுக்கான துறை ஒதுக்கீடுகளை பரிந்துரைப்பதற்கும், எஸ்&பி 500 மற்றும் பிற முக்கிய அமெரிக்க குறியீடுகளுக்கான முன்னறிவிப்புகளைத் தீர்மானித்தல் போன்ற முக்கிய பொறுப்புகளில் உள்ளார்.