பிரதமர் மோடி சைபர் கிரைம் மோசடி குறித்து அக்டோபர் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று மன் கி பாத் உரையில் தெரிவித்த விழிப்புணர்வு பகுதியிலிருந்து:
மோசடியாளர்கள் பின்பற்றும் முதல் தந்திரம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்கிறார்கள். இரண்டாவது தந்திரம் – அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள், சட்டப் பிரிவுகளைச் சொல்வார்கள், அவர்கள் எந்த அளவுக்கு உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள் என்றால், தொலைபேசியில் உரையாடும் போது நீங்கள் சுயமாக சிந்திக்கும் சக்தியையே இழந்து விடுவீர்கள். பிறகு அவர்களுடைய அடுத்த தந்திரம் தொடங்கும். மூன்றாவது தந்திரம் – நேரக்குறைவு என்ற அழுத்தம்.
“இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்”. என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல் ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். டிஜிட்டல் கைதுக்கு இரையானவர்களில் அனைத்து நிலைகள், அனைத்து வயதினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். அச்சம் காரணமாக மக்கள், தங்களுடைய கடும் உழைப்பின் மூலம் சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை இழந்திருக்கின்றார்கள். இவை போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வாயிலாக இவை போன்று புலனாய்வினை என்றுமே செய்ய மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். ”நிதானியுங்கள் – சிந்தியுங்கள் – செயல்படுங்கள்”. அழைப்பு வந்தால், “நிதானியுங்கள்” – அச்சப்படாதீர்கள், அமைதியாக இருங்கள், அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன்ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள். இதன் பிறகு வருவது அடுத்த கட்டம். முதல் கட்டம் நிதானியுங்கள், அடுத்த கட்டம், ”சிந்தியுங்கள்”.
எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள். முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம். முதல் கட்டத்தில் நான் நிதானியுங்கள் என்றும், இரண்டாம் கட்டத்தில் சிந்தியுங்கள் என்றும் கூறியிருந்தேன், இப்போது மூன்றாவது கட்டத்தில் கூறுகிறேன் – “நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்”.
தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தார் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள், ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
நன்றி: அகில இந்திய வானொலி நிலையம், சென்னை.