சகஹார் பாரதி (கூட்டுறவு) அமைப்பின் 8வது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ரயில்வே மைதானத்தில் டிசம்பர் மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இதன் 2வது நாள் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டுறவின் முக்கியத்துவம்
“கூட்டுறவே நாட்டுயர்வுக்கு அடிப்படை. நமது சமுதாயமே கூட்டுறவு என்ற அடித்தளத்தின் மேல்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. கிராம வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் கூட்டுறவு மேலோங்கி இருப்பதை நன்கு பார்க்கலாம். பொருளாதாரத் துறையில் கூட்டுறவு மிகவும் அவசியமானது. கலாச்சாரத்தின் மீதான பிடிப்பையும் பிணைப்பையும் கூட்டுறவு வலுப்படுத்துகிறது. இது சாத்தியமானால்தான் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். பல்வேறு பிரச்சினைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள பாரதம் தயாராக இருக்கிறது. வெறும் பொருளாதார முன்னேற்றத்துடன் மட்டும் நின்று விடக்கூடாது. சமுதாயமும் விரும்பத்தக்க மாற்றத்தை தழுவ வேண்டும். இதன் வாயிலாகவே நம் தேசம் மேலும் மேலும் எழுச்சி பெறும். சமுதாயத்தில் நல்லிணக்கம் தலைத்தோங்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை சமுதாயத்தில் வலுபடுவதற்கு கூட்டுறவு வழிவகை செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கூட்டுறவு அடிப்படையிலான முன்னெடுப்புகள் வரவேற்கத்தக்கவை. ஒவ்வொருவரும் அவரவர் கடமையை நன்கு நிறைவேற்ற வேண்டும். அத்துடன் சகாக்களுடன் ஒத்துழைப்பு சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை நாம் உள்வாங்கிக் கொண்டு செம்மையாக நடைமுறைப்படுத்தினால் நம் தேசம் மேலும் மேலும் உயர்ந்தோங்கும் என்பது உறுதி’’ என்று தத்தாத்ரேய ஹொசபலே தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இஃப்கோ நிர்வாக இயக்குனர் டாக்டர் உதய்சங்கர் அவஸ்தி கெளரவிக்கப்பட்டார். பாரதத்தின் உர மனிதர் என்ற பொருள்படும், `பெர்ட்டிலைசர் மேன் ஆஃப் இந்தியா’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. உரம் தொடர்பான ஆராய்ச்சியிலும் அதை பரவலாக்கம் செய்ததிலும் அவருக்கு முக்கிய பங்குண்டு. இதனடிப்படையில்தான் அவருக்கு இந்த சிறப்பு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது அவருக்கு முற்றிலும் பொருத்தமானது என நிகழ்ச்சியில் உரையாற்றிய அனைவரும் குறிப்பிட்டனர். தத்தாத்ரேய ஹொசபலே உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கார்யகர்த்தா மார்க்க தர்ஷிக இதழை வெளியிட்டனர்.
சகஹார் பாரதியின் சாதனைகள்
பஞ்சாப் ஆளுநர் குலாப்சந்த் கட்டாரியா, சகஹார் பாரதி ஆற்றிவரும் அரும்பணியை பெரிதும் பாராட்டினார். சேவையும் அர்ப்பணிப்பும் கொண்ட தன்னார்வலர்களை சகஹார் பாரதி உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் பிரதிபலிக்கிறது என்று மனமார பாராட்டிய ஆளுநர் குலாப்சந்த் கட்டாரியா இந்த இயக்கத்தை ஆலமரமாக தழைத்தோங்க வைத்த லட்சுமண் ராவ் இனாம்தார் ஜிக்கு புகழாரம் சூட்டினார்.
கூட்டுறவை சிறப்பான முறையில் அமலாக்கி வரும் மாநிலங்கள் வேகமாக முன்னேறியுள்ளன. கூட்டுறவு சங்கங்கள் சிலவற்றில் ஊழல் ஊடுருவி விட்டது. இதனால் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீட்சி பெற சகஹார் பாரதி உறுதுணையாக செயல்பட்டு வருகிறது என்பதையும் பஞ்சாப் ஆளுநர் குலாப்சந்த் கட்டாரியா குறிப்பிட்டார்.
சகஹார் பாரதியின் முன்னாள் தேசியத் தலைவர் தீனநாத் தாக்கூர், சகாஹார் பாரதியின் தரவு சேகரிப்பு போர்ட்டலை மூன்றாம் நாள் நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார். பரஸ்பர ஒத்துழைப்பு மூலமே பொருளாதாரத் துறையிலும் மற்ற துறைகளிலும் முன்னேற்றம் பெற முடியும். இது சமுதாயத்துக்கும் பொருத்தமானது. எனவே நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தீனநாத் தாக்கூர் குறிப்பிட்டார்.
கிராம முன்னேற்றத்தில் முக்கிய பங்கு
நிறைவு நாள் நிகழ்ச்சியில், மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், கூட்டுறவு இயக்கத்துடன் நான் நெடுங்காலமாக தொடர்பு கொண்டுள்ளேன். இந்த தேசிய அளவிலான மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்கள் சுரண்டலுக்கு ஆளானவர்கள். விளிம்பு நிலையில் அவதிப்படுபவர்கள் போன்றோரெல்லாம் உயர்ந்தோங்க கூட்டுறவே உபாயமாக உள்ளது. கிராமங்களில் உள்ள ஏழைகளையும், தொழிலாளர்களையும் அடிமட்டத்தில் உள்ள விவசாயிகளையும் கை தூக்கி விட கூட்டுறவு சங்கங்களே உறுதுணையாக உள்ளன.
பாரதம் சர்வதேச அளவில் தலைமையேற்க வேண்டும். இதை நாம் சாத்தியப்படுத்த வேண்டுமானால் கூட்டுறவை விட்டால் வேறு மூலாதாரம் இல்லை. எல்லாத் துறைகளிலும் பாரதம் தற்சார்புடன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். இதை கூட்டுறவு வாயிலாகவே நனவாக்க முடியும் என்றும் நிதின் கட்கரி அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார்.
நிர்வாகிகள் தேர்வு
நிறைவு நாளன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். வழக்கம் போல கருத்திணக்கத்தின் அடிப்படையில் சகஹார் பாரதியின் தேசியத் தலைவராக டாக்டர் உதய் ஜோஷியும், பொதுச் செயலாளராக தீபக் செளரஸ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் ஆண்டுகளில் சகஹார் பாரதி மேலும் புதிய உயரங்களை எட்டும். கூட்டுறவுத் துறையில் இதன் சாதனைப் பயணம் வலிவும், பொலிவும் பெரும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கட்டுரையாளர்: ஆர்கனைசர் செய்தியாளர் குழு
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி