நாட்டின் காகித இறக்குமதி நடப்பாண்டில் 43 சதவீதம் உயர்வு

இந்தியாவின் காகித இறக்குமதி, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், 43 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குனரக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2023 ஏப்ரல் – செப்டம்பரில், இந்தியாவின் காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதி, 9.59 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மதிப்பீடு காலத்தில், 6.72 லட்சம் டன்னாக இருந்தது. மதிப்பின் அடிப்படையில் மொத்த காகித இறக்குமதி, 5,897 கோடி ரூபாயில் இருந்து, 6,481 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி, கடந்த நிதியாண்டின் முதல் பாதியில், 81,000 டன்னாக இருந்தது. தற்போது, 2.88 லட்சம் டன் என்ற அளவில், இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, மதிப்பின் அடிப்படையில், 715 கோடியில் இருந்து, 1,509 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காகிதத்தின் மதிப்பு, 1,919 கோடியில் இருந்து, 1,629 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது குறித்து, இந்திய காகித உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பவன் அகர் வால் தெரிவித்துள்ளதாவது:

மூலப்பொருள் மற்றும் உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, காகிதம் மற்றும் காகித அட்டையை, மிதமான செலவில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் வகையில் ஈடுபட்டு இருந்தாலும், அதன் இறக்குமதிக்காக கடந்த காலத்தில் கையெழுத்திட்ட பல்வேறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், சீனாவின் பொருளாதார நிலை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி வரிகள் உள்ளிட்டவற்றால், இந்தியாவுக்கான இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது