நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் நாடோடிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் குமந்து பற்றி அறிவோம்…
உப்பு விற்பவர்கள், கோணி ஊசி தயாரிப்பவர்கள், மூட்டுவலிக்கு மருந்து தயாரிப்பவர்கள், மிளகு, சீரகம் விற்பவர்கள், விலங்குகளை வேட்டையாடி அதன் கொம்புகளை, தொலைதூர மக்களுக்கு விற்பவர்கள், பாம்பு, குரங்கு, கரடி போன்ற விலங்குகளை வைத்து வித்தை காண்பிப்பவர்கள், ஆடு,மாடு மேய்ப்பதை தொழிலாகக் கொண்டவர்கள், மருத்துவ வைத்தியம் செய்தவர்கள், போர் கருவிகள் தயாரித்து போரில் ஈடுபட்டவர்கள், பாசிமணி மாலை தயார் செய்து விற்றவர்கள், இப்படி பாரதம் முழுவதும் 1,526 வகையான ஜாதியினர் நாடோடிகள் பட்டியலில் இருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் மட்டுமே, 139 ஜாதியினர் உள்ளனர்.

இவர்கள் ஏன் நாடோடிகளாக உள்ளனர்?
நாடோடிகள் இவ்வாறு வாழக் காரணம் பல உண்டு. ஒன்று, அவர்கள் செய்த தொழிலின் காரணமாக நாடோடிகள் ஆனார்கள். உப்பு, மிளகு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. அதனை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்கும் மக்கள், நாடோடிகள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பின்னணியில் சரித்திரக் காரணங்களும் உள்ளன.
சரித்திரப் பின்னணி:
காடுகள், மலைகளில் கால்நடைகளை பராமரித்து வந்த கிராமத்து மக்கள், வெளிநாட்டினரின் படையெடுப்பின்போது, நம் நாட்டு அரசர்களுக்கு ஆதரவாகப் பணியாற்றினார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற வடமேற்கு பகுதிகளை சார்ந்தவர்கள்தான் ஆக்கிரமிப்பாளர்களின் தாக்குதல்களை முதலில் எதிர்கொண்டவர்கள். சிலர் வெற்றி பெற்றனர், பலர் போரில் வீர மரணம் எய்தினர் மற்றும் சிலர் இடம் பெயர்ந்து சென்றனர். இவ்வாறு ஓடரித்தில் தங்கி வாழ்ந்தவர்கள், போரின் காரணத்தினாலும், சூழ்ச்சியின் காரணத்தினாலும் நாடோடிகளாக மாறினர்.
அக்பரின் படையெடுப்பில், ராஜஸ்தான் மகாராணா பிரதாபசிம்மன் கோட்டையை முற்றுகையிட்ட போது, “காடியா லோஹார்” என்ற இனத்தவர் மகாராணா பிரதாபுக்கு ஆயுதங்கள் தயார் செய்து கொடுத்தனர். இரும்பு கருவிகளை தயார் செய்வதில் நிபுணர்கள்.
சித்தோடு கோட்டை அன்னியர் வசம் வீழ்ந்த போது, கோட்டையிலிருந்து இறங்கி வெளியேறினார்கள். அப்போது அந்த கோட்டை வாசலில் ஒரு உறுதிமொழி சபதம் செய்தார்கள். மீண்டும் இந்தக் கோட்டைக்கு வந்தால், அது வெற்றிவாகை சூடிய நுழைவாகத்தான் இருக்கும் என்றார்கள். அதுவரை நிலத்தில் உறங்க மாட்டோம் என்றும், காலணிகள் அணிய மாட்டோம் என்றும், பல சபதங்கள் செய்தனர். கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், தலைமுறை தலைமுறையாக இந்த சபதத்தை நடைமுறைப்படுத்தி வாழ்ந்தார்கள்.
1857ல், முதல் சுதந்திரப்போர் வெள்ளையர்களை எதிர்த்து தொடங்கப்பட்டது. இந்தப் போரில் அதிகமாக பங்கேற்றவர்கள், இந்த காட்டுவாசிகளும் மலைவாசிகளும். இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகக்கடுமையான எதிர்வினையாற்றி, தமது தேசபக்தியை நிலைநாட்டினர்.
ஒருபுறம் கிறிஸ்தவர்கள் மக்களை மதமாற்ற முயற்சித்தது தோல்வியில் முடிந்தது. மறுபுறம், கிறிஸ்தவர்களை எதிர்த்து, அதாவது ஆங்கிலேயர்களை எதிர்த்து, இந்த தேசபக்தர்கள் போரில் ஈடுபட்டது என இரண்டு காரணங்கள். ஆங்கிலேய கிறிஸ்தவ ஆட்சியாளர்கள், இந்த மக்களை பழிவாங்க ஆரம்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இவர்களை திருடர்கள் என்று வகைப்படுத்தி, பிற சமுதாயத்தினரிடமிருந்து பிரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்தனர். நெற்றியில் பழுக்கக் காய்ச்சிய உலோகக் காசை வைத்து சுட்டுப் பொசுக்கி “திருடன்” என்று அடையாளப் படுத்தப்பட்டனர், எனவே மக்கள் கண்களில் படாமல், இவர்கள் நாடோடிகளாக வாழத்தொடங்கினர்.
1857ல் தொடங்கி 1952 வரையும் கூட, Notified Communities பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு இருந்தார்கள். 1952 ஆகஸ்ட் 31ல், சுதந்திரம் பெற்ற 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் “Denotify”, அதாவது இவர்கள் “திருடர்கள் இல்லை” என பாரத அரசாங்கம் அறிவித்தது.

இவர்கள் அனைவரும் திருடர்களா?
திருட்டு தொழில் யாரோ சில தனி நபர்கள் செய்து வந்திருக்கலாம், அதற்காக ஒரு சமுதாயத்தையே மலினப்படுத்துவது எந்தவகையில் நியாயம். 90 வயதில் வாழ்க்கையின் இறுதியில், நோய்வாய்பட்டு படுக்கையில் இருக்கும் கிழவனும் திருடன், பிறந்த சில விநாடிகள் ஆன குழந்தையும் திருடன்.
டாக்டர் கிரிஷ் பிரபுனே என்ற ஆராய்ச்சியாளர், இந்த நாடோடி சமுதாயங்களைப் பற்றி ஆராய்ந்து, பல நூல்கள் வெளியிட்டு வந்துள்ளார். இந்த நாடோடிகள் சுபாவத்தில் தேசபக்தர்கள், தர்ம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள், தன்மானம் நிறைந்தவர்கள், சபதமெடுத்து சமூக கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள், ஆனால் இன்று இவர்களிடம் ஆதார் கார்டு இல்லை, ரேஷன்கார்டு கிடையாது, ஓட்டுப் போடும் உரிமை இல்லை, வீடு இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, கல்வி பயில ஏற்பாடும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் கடந்த 35 ஆண்டுகளாக, இந்த நாடோடிகளின் மேம்பாட்டிற்காக அரும்பணி செய்து வருகிறது. 2018 முதல் அகில பாரத அளவில் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1. நாடோடிகளுக்கான அரசு அடையாள ஆவணம் தயார் செய்தல்,
2. அரசு நலத்திட்டத்தினை பற்றிய போதிய தகவல் இல்லாததால் அதனை நாடோடிகளிடம் எடுத்துச் செல்லுதல்,
3. கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு,
4. கலை, வாழ்வியல், கருவிகள் பற்றிய ஆய்வு,
5. ஆன்மிகப் பணிகள்
என பலவித முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் செய்த சில பணிகள்:
சென்னை அடுத்த ஓரக்காடு பகுதியில் வாழும் நரிக்குறவர் சமூகத்தினருக்கு 60 வீடுகள் உள்ளன. மழையினால் பாதித்த 13 வீடுகளுக்கு, டென்ட் வழங்கப்பட்டது.
தணிகைபோளூர் நரிக்குறவர்கள் பகுதியில் நரிக்குறவர்கள் சங்க தலைவர் மன்னன் தலைமையில் பாரத நாட்டின் சுதந்திரதின விழா, தேசிய கொடியேற்றி, ரக்ஷாபந்தன் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சி நரிக்குறவர் மத்தியில் சுதந்திரதினம் பற்றியும், நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் விதமாகவும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்டது.

ஈரோடு ரங்கம்பாளையத்தில், நாடோடி பழங்குடியின சகோதரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அவர்களின் வீடுகள் அனைத்தும் பேனர்கள் மற்றும் தாள்கள் மட்டுமே.
புதுச்சேரி ஜில்லா வில்லியனூர் பகுதியில் உள்ள நாடோடிகள் வாழும் பகுதியில் உள்ள 33 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, சங்க அமைப்புகளை சேர்ந்த 33 கார்யகர்த்தர்கள் குடும்பத்துடன் அவர்கள் வீட்டுக்கே சென்று, நேரடியாக அவர்களுடன் உரையாடி, புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி அவர்களும் நமது ஹிந்து சமுதாயத்தின் ஒரு அங்கம் என்றும், வளர்ந்த சமுதாயம் அவர்களுக்கு சொந்தங்களாக உறுதுணையாக நிற்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், அவர்களுடன் உரையாடி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நமது அமைப்புகளைச் சேர்ந்த கார்யகர்த்தர்கள், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக சென்று பார்த்தனர். அவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் பற்றியும் கேட்டறிந்தனர். அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அவர்களது வீட்டில், கழிவறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் சாட்டையடி நாயக்கர், ஜங்கமர், சுடுகாட்டு சித்தர், நரிக்குறவ நாடோடிகள் இணைந்து வாழும் பகுதியில் ஆலோசனைக் கூட்டம், தேசியக் கொடி வழங்குதல் மற்றும் ரக்ஷாபந்தன் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சியில் தேவராயநேரி மற்றும் புதுக்குடியில் நூற்றுக்கணக்கான நாடோடிகள் கலந்து கொண்ட சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை துடியலூர் பகுதியில் கூரையின்றி வாழும் சாட்டையடி நாயக்க சமுதாயத்திற்கு டென்ட் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அருகே உள்ள கட்டுநாயக்க சமுதாயத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு இலவச ட்யூஷன் வகுப்பு நடைபெற்று வருகிறது.
சேலம் குகை பகுதியில் தீபாவளியை முன்னிட்டு, நாடோடி சமுதாய சிறுமிகளுக்கு கன்யாபூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி கிழக்கு ஜில்லா தோவாளைகண்டாவில், சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், புத்தேரி காட்டுநாயக்கர் சமுதாய கோயில் தலைவர் இசக்கிமுத்து தேசியக் கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து, ரக்ஷாபந்தன் விழாவும் கொண்டாடப்பட்டது.
தேசபக்தர்களான இந்த அபாக்யசாலிகளுக்காக, நாம் தான் தொண்டாற்ற முன்வர வேண்டும்.
அவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். குறைந்தபட்சம் இன்று முதல் அவர்களைப் பார்க்க நேரிட்டால், நமது மனதில் பழைய மோசமான எண்ணங்களிலிருந்து விலகி, அவர்களையும் சகோதரர்களாக எண்ணுவோம்.
தமிழக பொறுப்பாளர்கள் –
சுகுமார் செழியன், சென்னை – 9841748532
செந்தில் ரத்னா, கோவை – 9894830003
கட்டுரையாளர்: அகில பாரத செயற்குழு உறுப்பினர், ஆர்.எஸ்.எஸ் குமந்து
(நாடோடிகள் மேம்பாட்டு மையம்)