நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 10 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 93 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதன்படி அசாமில் 4, பிஹாரில் 5, சத்தீஸ்கரில் 7, டாமன்-டையூவில் 2, கோவாவில் 2, குஜராத்தில் 25, கர்நாடகாவில் 14, மத்திய பிரதேசத்தில் 9, மகாராஷ்டிராவில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
பின்னர் அவர் கூறியபோது, ‘‘தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக, வழிநெடுகிலும் திரளான மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.
உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய உள்துறை அமைச்சரும் காந்தி நகர் தொகுதி வேட்பாளருமான அமித் ஷா, தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது மனைவி பிரீத்தி ஆகியோரும் அகமதாபாத்தில் வாக்களித்தனர். குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் மகன் அனுஜ் படேல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.