பிரதமர் மோடி வருகை தந்த காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் வாயிலாக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேகம் சூடு பிடித்திருக் கிறது. ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயர் சூட்டப்படும்’ என்று அந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தது பலத்த கரகோஷத்தைப் பெற்றது. திராவிட அரசியலின் சூட்சும நாடியை தமிழக பாஜக பிடித்துவிட்டது என்பது அந்த அறிவிப் பிலிருந்து தெரியவந்தது.
தவிர, சென்னையிலிருந்து செல்லும் விமானங் களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதியும், மொழி ரீதியாக அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகளை வாயடைக்கச் செய்திருக்கிறது.
மோடியுடன் மேடையில் அதிமுக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கரம் உயர்த்தி கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றினர்.
உண்மையில் பாஜக முன்னின்று அமைத்திருந் தால் கூட இத்தனை கட்சிகளுடன் கூட்டணியை அமைத்திருக்க முடியாது. தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி அமைக்கும் பொறுப்பை அதிமுக வசம் ஒப்படைத்ததும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி இயங்குவது என்று பாஜக முடிவெடுத்ததும் மிகச்சிறந்த முடிவுகள் என்பது இப்போது புரிந்திருக்கும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டு வலுவான, வாக்குச் சிதறலைத் தடுக்கக் கூடிய பிரம்மாண்டமான கூட்டணியை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் மிகவும் புத்திசாலி பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அரசியல் காற்று வீசும் திசையை அனுபவித்து அரசியல் நடத்துவதில் தான் ஓர் அனுபவசாலி என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். தேர்தல்களில் வெற்றி, தோல்வியே அரசியல் கட்சிகளின் வாழ்நாளைத் தீர்மானிக்கும் நிலையில் அவரது நிலைப்பாடு யதார்த்தமானதாக உள்ளது. அதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். கொள்கைகளை கட்சி விட்டுக் கொடுக்காது. ஆயினும் கூட்டணி என்பது சமரச முறையே என்ற அவரது கருத்து பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவில் கொள்கை என்ற கோணத்தை மட்டுமே அளித்த கட்சி என்று எந்தக்கட்சியும் இன்றில்லை என்பதும் நிதர்சனம்.
இந்தத் தேர்தல் களத்தின் புத்திசாலி ராமதாஸ் என்றவுடன், தேர்தல் களத்தின் முட்டாளாக மதிமுக தலைவர் வைகோ மாறியிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலின்போதும் தான் நிகழ்த்திய குட்டிகரண வித்தைகள் காரணமாக, நம்பகத் தன்மையை முற்றிலும் இழந்த நிலைக்கு வைகோ தள்ளப்பட்டிருக்கிறார்.
1990களில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து புரட்சி செய்த கொள்கைப் புலய் வைகோவின் மதிமுக ஆரம்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நிஜம்.
ஆனால் இன்று காலத்தின் கோலத்தால், திமுக கூட்டணியில் ஓரிடத்துடன் திருப்திப்பட வேண்டிய நிலைமை. அதுவும் திமுகவின் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்! அனேக மாக இத்தேர்தலே வைகோவின் மதிமுகவுக்கு கடைசித் தேர்தலாக இருக்கும்.
அதிமுக அணியில் இப்போதைக்கு அதிமுக 25, பாமக 7, பாஜக 5, புதிய தமிழகம் 1, என்.ஆர்.காங்கிரஸ் – 1, புதிய நீதிக்கட்சி 1 ஆகியவை இடம்பெற்றுள்ளன. தனியரசு, பூவை மூர்த்தி, ஜான் பாண்டியன் ஆகியோரின் கட்சிகளும், கொமுக வும் அதிமுகவை ஆதரிக்கின்றன. தேமுதிகவும், த.மா.கவும் கடைசி நேரத்தில் இந்த அணியில் சேர வாய்ப்புகள் அதிகம்.
திமுக அணியிலோ திமுக – 20, காங்கிரஸ் – 10, மார்க்சிஸ்டு – 2, இந்திய கம்யூனிஸ்டு – 2, விடுதலைச் சிறுத்தைகள் – 2, மதிமுக – 1, முஸ்லிம் லீக் 1, கொமமீதக – 1, ஜ.ஜே.கே – 1, ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வாக்கு வங்கிகளை அதிகமாகக் கொண்ட வலிமையான பாஜகவும், பாமகவும் அதிமுக அணியில் இருப்பது அக்கூட்டணிக்கு அனுகூலம். மாநிலம் முழுவதும் பரவலாக வாக்குபலம் கொண்ட இடது சாரிகளும், முஸ்லிம் கட்சிகளும் ஆதரிப்பது திமுக அணிக்கு அனுகூலம்.
இருப்பினும் தராசில் அதிமுக அணியின் தட்டே கீழ்நோக்கி இருக்கிறது. இரு அணிகளின் முந்தைய தேர்தல் கள நிலவரங்களைப் பரிசீலித்ததில் அதிமுக அணி பெறும் வாக்குகளின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடும்.
தவிர மோடியின் பிரபல்யமும், அதிமுகவின் தேர்ந்த பணிகளும் ஒப்பிட இயலாதவை. திமுக அணிக்கு 40 சதவீத வாக்குகள் தேறுவதே கடினம்தான்.
போதாக்குறைக்கு, அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகளை தினகரனின் அமமுகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் பிரித்துவிடும் ஆபத்து உள்ளது.
தவிர துரைமுருகனின் அடாவடியால் தேமுதிகவையும் திமுக பகைத்துக் கொண்டு விட்டது. விஜயகாந்த் அதிமுக அணியில் இடம் பெற்றாலும், பெறாவிட்டாலும், அவரது கட்சியினர் திமுகவுக்கு எதிராகவே இருப்பார்கள்.