அவர் இல்லாவிட்டால் அன்று ராமசந்திரன் படங்கள் இல்லை, அவர் வசூல் சக்கரவர்தியுமில்லை, பின்னாளில் முதலமைச்சருமில்லை ராமசந்திரனை மிக சிறந்த மக்கள் திலகமாக உருவாக்கியதில் அந்த எம்.என் நம்பியாருக்கு மகா முக்கிய பங்கு உண்டு
தான் குத்து வாங்கி மிக சிறந்த குத்து சண்டை சாம்பியனை உருவாக்கும் மணல் மூட்டை போன்ற சினிமா வாழ்க்கை நம்பியாருடையது அவர் பெயர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார், 13 வயதிலே நடிக்க வந்தவர். நவாப் ராசமாணிக்கம் நாடக குழுவில் நடித்தவர் பின் எங்கெல்லாமோ சுற்றி சினிமா நடிகரனார்.கிட்டதட்ட ராமசந்திரனுக்கும் அவருக்கும் தொடக்க காலம் ஒன்றே, அவ்வளவு போராட்டம் போராடினார்கள் இருவரும் ராமசந்திரனின் முதல் படம் ஹிட்டாகும் பொழுது அவருக்கு வயது 40ஐ தாண்டியிருந்தது, நம்பியாரும் அப்படியே, முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் அறியபட்டது பிற்காலத்திலேதான், அந்த ஆசை தெரிக்கும் கண்களும், முகத்தில் அவர் காட்டும் வில்லத்தனாம உணர்ச்சியும் அவர் சிறிய உருவமாயினும் பெரும் பெயரை பெற்றுகொடுத்தன எம்ஜிஆர் படங்களுக்கு அவரை வில்லனாக அமர்த்த ராமசந்திரனே சிபாரிசு செய்த காலங்களும் இருந்தன. தொடக்கத்தில் குணசித்திர நடிகராகவும், பின் ஆச்சரியமாக ராமசந்திரன் திரையுலகில் இருக்குமட்டும் வில்லனாக இருந்த நம்பியார் அதன் பின் குணசித்திர நடிகனாக மாறினார். கடைசி வரை நடித்தார், 2008 வரை நடித்து கொண்டேதான் இருந்தார்.
கிட்டதட்ட ஆயிரம் படங்களை கடந்தவர் நம்பியார், மனோராமாவின் சாதனையினை செய்த ஒரே நடிகர் அவர்தான் திகம்பர சாமியார் எனும் படத்தில் 11 வேடத்தில் அசத்திய காலமும் உண்டு, இந்தியில் பிரான் எனும் நடிகரை போல இங்கு பெரும் அடையாளமிட்டவர் நம்பியார். இத்தனைக்கும் அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர் வந்தார்கள். ஆயினும் தனி அடையாளமிட்டவர் நம்பியார், அவர் முன் அவர்களால் நிற்க முடியவில்லை. எவ்வளவு அற்புதமான வில்லன் நடிகர் என்றால், திரையில் அவர் ராமசந்திரனை மிரட்டும்பொழுது ராமசந்திர பக்தர்கள் திரையினையே வெட்டிய காலமெல்லாம் உண்டு அது நம்பியார் எவ்வளவு பெரும் நடிகன் என்பதை பிற்காலத்தில் உணர்த்தியது.
70 ஆண்டுகளாக இங்கு ஒரு நடிகன் நடித்தான் என்றால் அந்த பெருமை நம்பியாரை தவிர யாருக்குமில்லை. தமிழ்நாட்டு பெண்கள் சாபமிட்டே பலரை கொன்றார்கள், உதாரணமாக பாசமலர் பி.எஸ் ஞானத்தை சொல்லலாம். அந்த படத்தின் வில்லி அவர், படம் பார்த்த பெண்கள் எல்லாம் அவரை கரித்து கொட்டி சாபமிட திருதங்கல் பக்கம் கொடூரமாக மரித்தார் பி.எஸ் ஞானம். அது தற்செயல் என்றாலும் தமிழக பெண்கள் கொடுத்த சாபமாகவே கருதபட்டது, இன்றும் ராமசந்திரனை அதுவும் செத்து 31 வருடம் கழிந்தும் இன்றும் மோடி பாராட்டும் ராமசந்திரனை வாழ்த்தும் பெண்கள் உண்டு.
ராமசந்திரன் பெற்ற புகழுக்கெல்லாம் பெண்கள் ஆசிதான் காரணம். அப்படிபட்ட தாய்குலம் நம்பியாரை கரித்து கொட்டியது கொஞ்சமல்ல, அவர்களின் சாபத்தில் இருந்து நம்பியாரை காப்பாற்றியது சபரிமலை அய்யப்பன். 60 ஆண்டுகளாக சபரிமலை சென்ற பெரும் பக்தர் அவர். அதுவும், ராமசந்திரன் அரசியல் காலத்தில் நம்பியார் நிஜத்தில் நல்லவர், ராமசந்திரன் நிஜத்தில் மோசம் என எதிர்தரப்பு புகையினை கிளப்ப நம்பியாரின் இமேஜ் உயர்ந்தது.
சினிமாக்காரர்களுக்குரிய எல்லா பழக்கமும் நம்பியாருக்கு இருந்தாலும், ராமசந்திரனை சரிக்க அவர் பெரும் உத்தமராக கொண்டாடபட்டார் எனினும் ராமசந்திரன் கொடி இறங்கவில்லை. இருவரும் உண்மை வாழ்வில் எதிரிகளில்லை எனினும் பெரும் நண்பர்களுமில்லை.
நம்பியார் அரசியலுக்கு வருவாரா எனும் காலமும் இருந்தது, மிக மிக பின்னாளில் பாஜக அனுதாபி ஆனார். எம்ஜிஆரை பற்றி அவர் சொன்ன வாக்கியம் குறிப்பிடதக்கது. “எம்ஜிஆருக்கு நண்பனாய் இருப்பது கஷ்டம், சதா சந்தேகபட்டே இருப்பார், ஆனா எதிரியா இருக்குறது சுலபம் அப்படின்னா சந்தேகபடவே மாட்டார். ராமசந்திரனின் நாடிதுடிப்பினை நன்றாகவே புரிந்து வைத்திருந்தார் நம்பியார். இன்று அந்த மாபெரும் நடிகனின் நினைவு நாள். எந்த துறையானாலும் எதிரியின்றி வளரமுடியாது, எதிரியே ஒருவன் வெற்றிக்கு பிரதானம்.
ஏன் தெய்வமே சாத்தான் முன்னால்தான் தன் சக்தி என்ன என்பதை நிரூபிக்கும், சர்வ வல்லமை வாய்ந்த தெய்வத்திற்கே ஒரு எதிரி தேவைபடுகின்றது. நாடு, நிறுவனம், நடிகன், அரசன் என எல்லோருக்கும் ஒரு எதிரி தேவை, அங்குதான் ஒருவன் தன்னை நிரூபிக்க முடியும். அப்படியாக ராமசந்திரன் தன்னை நிரூபிக்க அவருக்கு மாபெரும் சவால் கொடுத்த நடிகன் நம்பியார்.
எம்ஜி ராமசந்திரன் எனும் மாபெரும் சக்தி இங்கு உருவானதில் நம்பியாரின் பங்கும் உண்டு. அதிமுகவினர் நன்றியுள்ளவர்கள் தர்மம் அறிந்தவர்கள் என்றால் நம்பியாருக்கும் சிலை வைக்க வேண்டும். எம்.ராதா போல தான் நடிக்கும் வேடங்களில் எல்லாம் உடனிருப்பவரை தூக்கிவிழுங்கும் நடிகர் அவர். சிவாஜியுடன் அவர் நடித்த படங்களை பாசமலரிலிருந்து, பாகபிரிவினை முதல் பின்னாளைய திரிசூலம் வரை மறக்க முடியுமா?.
பண்பட்ட நடிப்பு, பாசபட்ட நடிப்பு, பணக்கார நடிப்பு, டானுக்குரிய நடிப்பு என பின்னியிருந்தார் நம்பியார். அது பாச மலரானாலும், பாகபிரிவினையானாலும் சரி, ராஜராஜ சோழனானாலும் சரி, நம்பியாரின் நடிப்பு பிரமாதமாயிருந்தது.
அந்த மாபெரும் நடிகனான , தமிழகம் கண்ட மாபெரும் கலைஞனுக்கு இன்று நினைவுநாள். “மதிமாறா… டேய் ராமு….ஹ்ஹ்ஹ்ம்ம் உன்னை என்ன செய்ய போகின்றேன் தெரியுமா?” என தன் கண்களை உருட்டி கையினை அழுத்தி கத்தி கொண்டிருந்த அந்த நம்பியாரை எப்படி மறக்க முடியும்?
இன்றும் சபரிமலையில் அவர் கட்டி கொடுத்த மண்டபம் உண்டு, தமிழக சினிமா உலகில் ஐயப்ப பக்தியினை கொண்டுவந்து ஏராளமானோர் சபரிமலைக்கு செல்ல அவர் காரணமாயிருந்தார். அதை மறுக்க முடியாது, ஐயப்ப பக்தர்களில் எக்காலமும் அவருக்கு தனி இடம் இருந்தது, தன் மேல் தீரா பக்தி கொண்ட ஒருவனுக்கு சபரிமலை நாதன் அந்த பெரும் வாய்ப்பினை கொடுத்திருந்தான்.
சபரிமலை அய்யபனை நினைத்து உருகி வாழ்ந்த அந்த அய்யப்ப பக்தன், அந்த கார்த்திகை மாத காலத்திலே உயிரையும் விட்டான். இதைவிட அவரின் பக்திக்கு என்ன அத்தாட்சி வேண்டும்? அந்த பெரும் நடிகனின் பிறந்தநாளில் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி, அந்த வில்லதனமான ஆசை தெறிகும் குரலும். பேராசையும் கர்வமும் மின்னு கண்ணும், வெறுப்பு முகபாவமும் இன்னொரு நடிகனுக்கு சாத்தியமே இல்லை.
1978ல் ரஜினி ஒரு பேட்டியில் சொல்கின்றார், பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சு, அவர்கள் போன்ற வில்லன் ரஜினி வந்த காலமது. “என் வாழ்க்கையில ஒரு லட்சியம்ணா எம்.என் நம்பியாருக்கு அப்புறமா நல்ல வில்லன்னு ஜனங்க ஏத்துகிட்டா போதும். ஆம் ரஜினியின் ஆதர்ச பிம்பமாக அவர்தான் இருந்திருக்கின்றார், அதில்தான் இன்றளவும் ரஜினியினை நாயகனை விட வில்லனாக பாருங்கள், அவரின் நடிப்பு ஒருபடி மேலே இருக்கும்.
ரஜினி நம்பியாரை மிகவும் ரசித்திருக்கின்றார், இன்றும் கூர்ந்து பார்த்தால் ரஜினியின் சில பாவனைகளில் அது தெரியும், ஆனால் கண்களில் மட்டும் தெரியாது. ஆம் அந்த கண்கள் நம்பியார் ஒருவருக்கே உரித்தான கண்கள்.