விஜயபாரதத்தின் முன்னோடியான தியாகபூமி வார இதழ் 1975-77 நெருக்கடி நிலவர இருண்ட காலத்தில் நின்றுபோய் மறுபடியும் வெளிவரத் துவங்கியபோது வெறும் 200 பிரதிகள் 4 பக்க அளவில் விநியோகம் ஆயிற்று. ஜூன் 5 அன்று நடைபெற்ற விஜயபாரதம் புதிய அலுவலக திறப்பு விழாவில் ஆசிரியர் விஜயபாரதம் வாரா வாரம் 23,000 பேருக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்தார்.
நிச்சயமாக இது வளர்ச்சி. ஆனால் இந்த வளர்ச்சி எதனால்? ஹிந்துத்துவம், தேசபக்தி, வந்தேமாதரம், பாரத மாதா, தேசிய ஒருமைப்பாடு சமுதாய நல்லிணக்கம், ஹிந்து ஒருங்கிணைப்பு… போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் வாராவாரம் அர்த்தமுள்ள சம்பவங்களைத் தொகுத்து வழங்கும் ஒரே பணி புரிகிற இந்த வார இதழை வாங்கிப் படிக்க இத்தனை ஆயிரம் பேர் முன்வந்திருப்பது எதனால்? விஜயபாரதம் எடுத்துக்கூறும் கருத்துக்கள் வாரத்துக்கு வாரம் அதிகமான பேரை ஈர்க்கிறது என்பதுதான் விஷயம். புதிய அலுவலக திறப்பு விழாவில் விரைவில் 50,000 இலக்கை எட்டுவோம் என்று விஜயபாரத நிர்வாகம் ஆணித்தரமாக அறிவித்தது அதிகரிக்கும் ஆதரவின் அடிப்படையில்தான்.
எனவே விஜயபாரதம் புதிய அலுவலகத்திலிருந்தும் எப்போதும் போல தனது லட்சியப் பயணத்தில் தொடர்ந்து நடைபோடும்.
நமது விஜயபாரதம் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா ஜூன் 5 அன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ‘சேவா’ பல மாடிக் கட்டிடத்தில் நடைபெற்றது. யோக சாந்தி குருகுலத்தின் தலைவர் ஸ்வாமி ஸ்ரீ பிரம்ம யோகானந்தா, ஆசியுரை வழங்கினார். சங்கத்தின் மூத்த பிரசாரகர் சூர்யநாராயண ராவ், ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் சுபஸ்ரீ ஸ்ரீராம், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புதல்வரும் கண்ணதாசன் பதிப்பக நிர்வாகியுமான காந்தி கண்ணதாசன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
ஸ்வாமி ஸ்ரீ பிரம்ம யோகானந்தா: இந்தியா அகண்ட பாரதமாக உள்ளது. நமது நாடு பல்வேறு விஷயங்களில் தனித்து விளங்குகிறது. அதன்படி மகான்கள், ரிஷிகள், புனித நதிகள், புனிதத் தலங்கள் ஆகியவை இந்தியாவை இணைத்துள்ளன. இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தியாவின் புனிதத்துவத்தை ஒற்றுமை, உற்சாகம் ஆகியவற்றின் மூலம் காப்பாற்றுவது அவசியமாகிறது.
சுபஸ்ரீ ஸ்ரீராம்: கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது நம் அனைவருள்ளும் இருக்கும் மனிதாபிமானம் மேலோங்கிய சேவை வெளிப்பட்டது. விஜயபாரதம் போன்ற நல்ல பத்திரிகை இளைஞர் முதல் முதியோர் வரை சமூகத்தின் அனைத்துப் பிரிவினைரையும் சென்றடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கானத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
காந்தி கண்ணதாசன்: விஜயபாரதத்திற்கும் எனக்கும் நெடுநாளையத் தொடர்பு உண்டு. எனது தந்தையார் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் படைப்புக்களை மின்னணு முறையில் சேமித்து இணையவழியில் தரவிறக்கம் செதுகொள்ளும் வழிமுறைகளை ஏற்படுத்தியதால் நவீன யுக்திகளைக் கையாள்வதில் எங்களுக்கு மிகுந்த அனுபவம் இருக்கிறது. விஜயபாரதம் இதழும் காலத்திற்கேற்ற வடிவில் புதிய அவதாரங்களை எடுக்க வேண்டும். அதற்கான எல்லாவிதமான ஒத்துழைப்பையும் நல்கிட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சூர்யநாராயண ராவ்: சங்கம் 1925-இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், நமக்கெனப் பத்திரிகைகள் தேவை என 1947-இல் தான் முடிவெடுத்தது. ஆங்கிலத்தில் ஆர்கனைஸர், ஹிந்தியில் பாஞ்சஜன்யா, தமிழில் தியாகபூமி என அநேக மொழிகளில் நமது பதிப்புகள் வெளிவரத் துவங்கின. இந்த தேசத்தின் பெயர் ஹிந்து. ஹிந்துத்வம் என்பது மதமல்ல; வாழ்வியல் நெறிமுறை என்று உச்ச நீதிமன்றம் கூடத் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. நாடெங்கிலும் வியாபித்திருக்கும் ஹிந்து அடையாளங்கள் இன்று தனிநபர் மத்தியில் தட்டுப்பாடாக இருக்கிறது. ஸ்வாமி விவேகானந்தர் சோன்னது போல ஹிந்து எனச் சோல்வதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும். அமெரிக்கர்களில் 40% பேர் நமது ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பதாக வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகான் ராமானுஜர் குறித்த விஜயபாரதம் சிறப்பிதழ் வெளியாகி இருக்கிறது. அவர் ஆற்றிய சமூகத் தொண்டு மகத்தானது. குருவால் தனக்கு ரகசியமாக உபதேசிக்கப்பட்ட அஷ்டாக்ஷர மந்திரத்தைப் பிறருக்கு உபதேசிப்பது கூடாது என எச்சரிக்கப்பட்டிருந்த போதும் கூட, தான் நரகம் சேர்ந்தாலும் பரவாயில்லை, ஆயிரம் மக்கள் சோர்க்கத்தை அடையட்டும் என்ற நல்லெண்ணத்தில் கோபுரத்தின் மீதேறி ஊரிலுள்ள குடியானவர்கள் அனைவருக்கும் உபதேசித்தார். பிறர் துன்பம் நீங்கத் தன்னை வருத்திக் கொள்வது தான் யோகம். ஹிந்து தர்மம் அதைத் தான் போதிக்கிறது. இப்படிப்பட்ட ஹிந்து தர்மம் எப்படி பிற்போக்கானதாக, மதவாதமாக, மனித குலத்திற்கு எதிரானதாக இருக்க முடியும்? ஹிந்து தர்மத்தைக் காக்கக் கடவுள் நமக்களித்த அரிய வாப்பு இது. நல்ல விஷயங்களைப் பரப்புவதற்கு நமது பத்திரிகைகள் உதவி வருகின்றன.
விழா நிறைவும், மன நிறைவும்: விஜயபாரதம் வார இதழின் வெற்றிக்குக் காரணமான வாசகப் பெருமக்கள், சங்க கார்யகர்த்தர்கள், சகோதர அமைப்பினர் என மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக புதிய அலுவலகத்தின் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர், விஜயபாரதம் வார இதழின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர்கள், கேலிச் சித்திரம் வரையும் கருத்தோவியர், விஜயபாரதம் இதழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிவருகின்ற விளம்பரம் மற்றும் சந்தா சேகரிக்கும் முகவர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்வாமி ஸ்ரீ பிரம்மயோகானந்தா ‘விஜயபாரதம்’ வளர்ச்சிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார். வந்தேமாதர கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.