நன்றி, திரு. ரவி!

தமிழக ஆளுநராக தனது நான்கு ஆண்டு பணிக்காலம் நெடுக மேதகு ஆர். என். ரவி, மாநிலத்தின் பொது வாழ்வில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருந்த தேசிய சிந்தனையை நடுநாயகம் ஆக்குவதில் பரிபூரண வெற்றி கண்டார். அவர் தொடக்கி வைத்துள்ள சில நல்ல பழக்கங்கள்:
1857க்கு முன்னரே நடைபெற்ற வேலூர் ராணுவ புரட்சி நினைவு நாளன்று வேலூர் சென்று வீரவணக்கம் செலுத்தி வந்தார். அகில பாரதமும் தமிழகத்தை விடுதலைப் புரட்சிக்கு முன்னோடி என்று மரியாதையுடன் பார்க்கும் பெருமிதத்துக்குரிய சூழல் ஏற்பட்டது.
அரசியல் சாசன ஏற்பாட்டின் படி நவம்பர் 1 அன்று பல மாநிலங்கள் மாநில நாளாக கொண்டாடுகின்றன. தமிழகத்தில் உள்ள சில சக்திகள் வேறு ஒரு தேதியில் தான் மாநில நாள் கொண்டாடுவோம் என்று முறுக்கிக் கொண்டு நின்றன. பார்த்தார் ரவி. கன்னியாகுமரி மாவட்டம் அமைந்த நவம்பர் 1 அன்று மக்கள் கொண்டாடும்போது அங்கே சென்று அவர்களுடன் கொண்டாட்டத்தில் இணைந்தார். அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்படிக் கூட மக்கள் மனதில் ஏற்படுத்த முடியும் என்று காட்டினார்.
‘மொழி மோதலுக்கான கருவி, மொழி பிரிவினைக்கான உத்தி’ என்ற வாய்ப்பாடுகளின் படி நடந்து வந்த தமிழக அரசியல் மோசடிகளை தகர்க்கும் விதத்தில், மொழி தேசத்தை அழகாக இணைக்கும் மாட்சியை மக்கள் மனதில் பதியச் செய்து விட்டார் ஆளுநர் ரவி. மகாகவி பாரதி பிறந்த நாளான தேசிய மொழிகள் தினத்தன்று, தமிழிலிருந்து பிற பாரத மொழிக்கு அல்லது பிற பாரத மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கத்தின் மூலம் ஒருமைப்பாட்டுப் பாலம் போடும் இலக்கிய அன்பர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து ஆண்டு தோறும் கௌரவிக்கும் அற்புதமான நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
அதுபோல போலி மதசார்பின்மை பேசி ஹிந்து கலாச்சாரத்தை புறக்கணிக்கும் தீமையை முடிவுக்கு கொண்டு வர ஆளுநர் மாளிகையிலேயே ஆண்டு தோறும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்கும் மங்கல மரபை தொடங்கினார். உண்மையில் ராஜ் பவன் மக்கள் பவனமாக உரு மாற்றம் பெற்றது இதுபோன்ற ஊக்குவிப்புகளால் தான். மாநிலத்தை ஆளும் அரசியல் சக்திகள் அரசியல் சாசனப் பாதையை விட்டு விலகிப் போகாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் ஆளுநருக்கே உரிய அடிப்படைக் கடமையை விவரம் கெட்டவர்களின் அவமதிப்புகளுக்கு நடுவில் ஆளுநர் ரவி கறாராக நிறைவேற்றியதே அவரது பணிக்கால வெற்றிகளுக்கு சிகரம்.