மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அவ்வப்போது தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாடு முழுவதும் நீதிநீர் பிரச்னைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்க புதிய மசோதா வழி செய்கிறது.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், ஒரே தீர்ப்பாயம் வரும் பட்சத்தில் நீண்ட காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார். இதுபோலவே வேறு பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நதிநீர் பிரச்னைகளை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்றார். இந்த தீர்ப்பாயத்தில் பல மாநிலங்களின் பிரதிநிதிகளாக அதிகாரிகளுடன் விவசாயிகளும் இடம் பெறுவார்கள் என்றார்.
பின்னர் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.