மாவோயிஸ்டுகள் எனப்படும் நக்சல்களை வேறோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லரசு உறுதியாக உள்ளது. சத்தீஸ்கரில் உள்ள பாஜக அரசும் இதற்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொடி கட்டிப் பறந்தது. குறிப்பாக சத்தீஸ்கரிலும், ஜார்கண்ட்டிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மாவோயிஸ்டுகள் போட்டி சர்க்காரே நடத்தினார்கள். மாவோயிஸ்டுகளை பகைத்துக் கொண்டால் அந்தப் பகுதியிலேயே வாழ முடியாது என்ற அளவுக்கு மக்களை அவர்கள் அச்சுறுத்தி வைத்திருந்தார்கள். இதற்குப் பின்னால் வேறு ஒரு தீய சக்தி தொடர்ந்து முனைப்புடன் இயங்கி வந்தது என்பதை கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது.
காற்று நுழையத் தயங்கும் இடங்களிலும் கூட கிறிஸ்தவ மிஷினரிகள் நுழைந்து மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பதற்கு உலகெங்கும் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. பாரதத்திலும் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் கைவரிசை காட்டி உள்ளனர். இதற்கு கையைச் சின்னமாகக் கொண்ட கட்சியும் உடந்தையாக செயல்பட்டுள்ளது என்பதையும் புறந்தள்ளி விட முடியாது. ஜார்க்கண்டிலும், சத்தீஸ்கரிலும் நக்சல் அமைப்புகளுக்கு கிறிஸ்தவ பாதிரிகள் தங்கு தடையின்றி தாராளமாக நிதியுதவி செய்து வந்தார்கள். இதனால் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன ஆதாயம் என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். நக்சல்களை தங்களது கைப்பாவைகளாக ஆக்கிக் கொள்வதன் மூலம் ரகசிய செயல்திட்டத்தை கிறிஸ்தவ மிஷனரிகளால் எளிதில் செயல்படுத்த முடிந்தது.
வனவாசிகள் கள்ளம் கபடமற்றவர்கள். இயற்கையோடு இணக்கமாக இருப்பவர்கள். அவர்களை நக்சல்களின் துணையோடு கிறிஸ்தவ பாதிரிகள் மதமாற்றம் செய்தார்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டால்தான் மாவோயிஸ்டு ஒழிப்பு அவசியமானது மட்டுமல்ல அவசரமானதும் கூட என்பதை துல்லியமாக உணர்ந்து கொள்ள முடியும்.
நக்சல்கள் ஹிந்துக்களுக்கு எதிரான மனோபாவத்துடன் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் புராதன ராமர் கோயில் இருந்தது. இதை சுமார் 21 ஆண்டுகளுக்கு முன் நக்சல்கள் இழுத்துப் பூட்டி விட்டனர். இதை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீண்டும் திறந்தனர். இப்போது இங்கு வனவாசிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சிவப்பு அபாயம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. 2010 காலகட்டத்தில் இது மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது 2,213 அசாம்பவிதங்கள் நடைபெற்றன. 1,005 பேர் பலியானார்கள். 149 நக்சல்கள் சரணடைந்தனர். 2015ல் 1,089 அசம்பாவிதங்கள் நடைபெற்றன. 230 பேர் பலியானார்கள். 1,686 பேர் சரணடைந்தார்கள். 2020ம் ஆண்டு 665 அசம்பாவிதங்கள் நடைபெற்றன. 183 பேர் பலியானார்கள். 352 பேர் சரணடைந்தார்கள். 2022ல் 531 அசம்பாவிதங்கள் நடந்தன. 98 பேர் உயிரிழந்தனர். 2,855 பேர் சரணடைந்தனர். கடந்த ஆண்டு 161 அசம்பாவிதங்கள் நடந்தன. 80 பேர் உயிரிழந்தனர். 475 பேர் சரணடைந்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நக்சல்களை தேசிய நீரோட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும். அவர்களை மாவோயிஸ்டு பிடியிலிருந்து எப்படியும் விடுவித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. நக்சல் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்காக ரூ.30,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 13,243 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. 2,343 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. 927 வங்கி கிளைகள் அமைக்கப்பட்டன. திறன் மேம்பாட்டு மையங்கள் 38 இடங்களில் அமைக்கப்பட்டன. 43 இடங்களில் தொழில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. 125 இடங்களில் ஏகலைவா உண்டுறை பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன.
சுக்மா, பஸ்தார் ஆகிய பகுதிகள் மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து ஏறத்தாழ நழுவி விட்டன. சரணடைந்த நக்சல்களின் மறுவாழ்வுக்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் 62 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் சரணடைந்தார்கள். 2025ல் அடுத்தடுத்து நக்சல்கள் வேட்டை நடைபெற்றுள்ளது. ஜனவரி 26, பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் வெவ்வேறு நிகழ்வுகளில் 3 பேர் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 4ம் தேதியும், 6ம் தேதியும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொடூர நிகழ்வுகளில் இருவர் பலியானார்கள்.
நக்சல்களிடையே வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தளபதிகள் பெரும்பாலும் தீர்த்துக் கட்டப்பட்டு விட்டனர். ஒருசிலர் சரணடைந்து விட்டனர். குறிப்பாக கடகம் சுதர்சன், ராமகிருஷ்ணா என்ற அக்கி ராஜு கர்கோபால், எப்பா நாராயண் என்ற ஹரிபூசன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர். நக்சல்கள் பகுதிகளில் உள் கட்டமைப்பு சார்ந்த வசதிகள் போர்க்கால அவசரத்துடன் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கரில் மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதன் வாயிலாக மாவோயிஸ்டுகளின் கொட்டம் ஒடுக்கப்பட்டு விட்டது. நக்சல்களின் கோட்டை தூள்தூளாகி வருகிறது. இனிமேலும் நக்சலாக இருக்க முடியாது என்ற நிலைக்கு பெரும்பாலானோர் வந்து விட்டனர்.
அடர்ந்த காட்டுப்பகுதிகளில் உள்ள மக்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை சாதாரணமானது என எடுத்துக் கொள்ள முடியாது. இது உண்மையிலேயே திருப்புமுனைதான்.
முன்னாள் நக்சல்களின் மனோபாவம் எந்த அளவுக்கு சரியான திசையில் நகர்ந்து வருகிறது என்பதை அண்மையில் நடைபெற்ற நிகழ்வு துல்லியமாக பிரதிபலிக்கிறது. பஸ்தாரில் நக்சல்களாக வாழ்ந்து வந்த 50க்கும் மேற்பட்டோர் மனந்திருந்தி விட்டனர். அவர்கள் டெல்லிக்குச் சென்றார்கள். பஸ்தார் சாந்தி சமிதி என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்தது. அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள். தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்கள். ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவர்கள் சந்தித்தார்கள். நக்சல்கள் அற்ற பஸ்தாரை உருவாக்க தேவையான எல்லா நடவடிக்கைளையும் எடுங்கள் என்று திரெளபதி முர்முவுடன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கட்டுரையாளர்: ஆய்வாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து
தமிழில் : அடவி வணங்கி