அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையும் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன மொழிகள் பள்ளி, மொழிக்கல்வி மற்றும் மொழித் தொழில்நுட்பப் புலமும் இணைந்து வரும் 25 மற்றும் 26 தேதிகளில் இரு நாட்கள் இணையவழியில் தொல்காப்பியம் மற்றும் செம்மொழித் தமிழ், வரலாற்றுடனான அதன் தொடர்பும் எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது. தனித்தன்மை, தாய்மைத்தன்மை, உடன்கால இலக்கியங்களின் மீதான செல்வாக்கு, பிறமொழி இலக்கியங்களை உருவாக்குதல் எனும் செவ்விலக்கியக் கூறுகளைக் கொண்டிலங்கும் தொல்காப்பியத்தின் சிறப்பினையும் வளத்தினையும் உலகெங்கிலும் கொண்டுசேர்க்கும் நோக்கத்தோடு இந்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது. 25.04.2023 அன்று நடைபெறும் தொடக்கவிழாவில், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முகமது குல்ரெஸ் தலைமையுரையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் வாழ்த்துரையும் வழங்கவுள்ளனர். முனைவர் அ. சண்முகதாஸ், மதிப்புறு பேராசிரியர், தமிழ்த்துறை, ஜாஃப்னா பல்கலைக் கழகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளனர். மலேசியா, ஜெர்மனி, தான்சானியா ஆகிய உலக நாடுகளில் இருந்தும், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 12 பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தொல்காப்பியம் மற்றும் செம்மொழித்தமிழ், வரலாற்றுவுடனான அதன் தொடர்புகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த கட்டுரைகளுள் சில பிறமொழிகளில் தொல்காப்பியம் கொண்டுள்ள ஒத்துணர்வு, மொழியாக்கம் செய்யப்பெறும்போது ஏற்பட்ட சிக்கல்கள், தீர்வுகள் குறித்தும், ஒருசில கட்டுரைகள் தொன்மைச் சிறப்புடைய தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலாக மட்டுமின்றி, தொல்சமூகத்தின் பண்பாடு, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் களஞ்சியமாகத் திகழ்வதையும் ஒரு இலக்கியக் கோட்பாடாக இலக்கண நூல் பரிமளிப்பதையும் விளக்குதாக அமைந்துள்ளன. இந்தக் கருத்தரங்க அமர்வுகள் தொல்காப்பிய ஆய்விற்கும் இருமொழி ஒப்பீட்டிற்கும் பல ஆய்வுகளின் முன்னெடுப்பிற்கும் வழிகோலுவதாக அமைக்கப்பெற்றுள்ளன.