கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், அப்போது முதல் அந்த நாட்டில் ஏராளமான பிற்போக்குத்தனமான கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளால் அங்கு பெண்களின் நிலை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த மோசமான கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் இந்த மோசமான கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக் கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு, பாரதம், அமெரிக்கா, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறையாக ஹிஜாப் அணிவதில்லை என ஏராளமான புகார்கள் எழுந்ததாக தலிபான்கள் தெரிவிக்கின்றனர்.