தே.ஜ.கூட்டணி வெற்றி முகம் சாதகமான அலை, சாசுவதமான நல்லாட்சி

லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, நரேந்திர மோடி மீதான அபிமானம் பெருகுவது காலைக் கதிரவனின் பொற்கிரணங்கள் பரவுவது போல தெளிவாகவே தெரிகிறது. திசை தெரியாமல் தடுமாறும் எதிர்க்கட்சிகளின் வசைகளும் கூட ஆளும் பாஜகவுக்கே சாதகமாகி வருகின்றன. பிரதமர் மோடியின் தலைமைக்கு முன்னே எதிர்க்கட்சிகளின் ஜாலங்கள் எடுபடாது போவது வியப்பில்லை.

காங்கிரஸ் கட்சி அதலபாதாளம் நோக்கி சரிந்துகொண்டிருப்பதை உணர்ந்துவிட்டது. அதனால் தான் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களைக் குழப்ப முயற்சிக்கிறது. ஏழை மக்களுக்கு மாதந்தோறும் ரூ. 6,000 வழங்குவதாக ராகுல் காந்தி அறிவித்த திட்டம் அப்படிப்பட்டதுதான். கல்யாணமே ஆகவில்லை; அதற்கு ‘நியாய்’ என்று பெயரும் சூட்டி மகிழ்ந்திருக்கிறார் இளவரசர். நாட்டின் பொருளாதாரம் உயர்ந்திருப்பதால் ராகுலின் திட்டம் சாத்தியமே என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ‘ரீகவுன்டிங் மந்திரி’ ப.சிதம்பரம். போன வாரம் வரை இந்தியப் பொருளாதாரம் மோடியின் ஆட்சியில் நாசமாகிவிட்டதாக புலம்பிக் கொண்டிருந்தவர் இவர்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தீவிர முயற்சியால் நாட்டின் அன்னியச் செலாவணி உயர்ந்திருக்கிறது. நாட்டின் கடன் தொகையும் குறைந்திருக்கிறது. வெளிநாட்டு நேரடி முத்லீடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரமும், உள்நாட்டு உற்பத்தி விகிதமும் (ஜிடிபி) உயர்ந்திருக்கின்றன. இந்தத் தகவல்களை சர்வதேச அமைப்புகள் பலவும் கூறியபோது, அவற்றை கேலி செய்தவர் ப.சி. இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக வளர்வதால் அனைவருக்கும் ரூ, 72,000 அளிப்பது சாத்தியமே என்கிறார்.

ராகுல் படை : அரிப்பு

ராகுலும் அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள சுயநலவாதிகளும் என்னதான் கூடிக் கும்மி அடித்தாலும், அவர்களை நம்ப நாடு தயாராக இல்லை. தவிர, நாட்டில் சில மாநிலங்கள் தவிர்த்து காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை; அக்கட்சி அமைத்துள்ள கூட்டணிகளும் நம்பகமாக இல்லை. கேரளத்தில் இடதுசாரிக் கட்சிகளை எதிர்க்கும் காங்கிரஸ் தமிழகத்தில் உறவாடுகிறது.

ஒரே மேடையில் பொம்மைக் கத்திகளைத் தூக்கிப் பிடித்தபடி புகைப்படத்துக்கு தரிசனம் தந்த ராகுலும் சந்திரபாபு நாயுடுவும் இப்போது தனித்தனியே ஆந்திரத்தில் போட்டியிடுகிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதாக  உச்சக்கட்ட விளம்பரம் செய்யப்பட்ட உ.பியில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்கவே சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் தயங்கும் நிலை. பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இழுபறி கூட்டணி அமைப்பதற்குள் காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மானமும் போய்விட்டது. தமிழகத்தில் கருணாந்தியால் “கூடாநட்பு கேடாய் முடியும்’’ என்று வாழ்த்துப் பெற்ற பின்னரும் அதே கட்சியுடன் சரசமாடுகிறது காங்கிரஸ்.

தெலுங்கானா, ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைக் கண்டாலே பிற கட்சிகள் கூட்டணிக்கு அழைத்துவிடுமோ என்று தலைதெறிக்க ஓட்டம் எடுக்கும் பரிதாப நிலை. காஷ்மீரிலும் அஸ்ஸாமிலும் கேரளத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திருப்தி அடைய வேண்டிய நிலையில் காங்கிரஸ் தத்தளிக்கிறது. தாங்கள் ஆளும் கர்நாடகா, பாண்டிச்சேரி, பஞ்சாப், ம.பி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நிலைமை அவ்வளவு சாதகமாக இல்லை. பிறகு எப்படி ராகுல் பிரதமர் ஆகப் போகிறார்?

மோடி பட்டாளம் : வீறுநடை!

ஆனால், மோடி தலைமையிலான பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஒவ்வொரு நாளும் வலுவடைந்தவாறு உள்ளன. சென்ற 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வென்ற அதன் கூட்டணிக் கட்சிகள் 54 இடங்களில் வென்றன. (மொத்தம் 336/ 543)

இம்முறை சென்ற இடங்களில் சிறிய அளவில் வென்ற மாநிலங்களான தமிழகம் (2/39), மேற்கு வங்கம் (2/-42), ஒடிஸா (1/21), தெலுங்கானா (1/17) ஆகியவற்றிலும், ஓரளவு வென்ற கர்நாடகா (17/28), ஆந்திரா (17/25), மாநிலங்களிலும் பாஜக அதிக வெற்றிகளைக் குவிக்க இருக்கிறது. சென்ற தேர்தலில் 40 தொகுதிகள் தே.ஜ.கூட்டணிக்கு இம்மாநிலங்களில் கிடைத்தன. இம்முறை ஆந்திராவில் தெலுங்குதேசம் கூட்டணி மாறியபோதும், பாஜக 10 இடங்களில் வெல்ல இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழகம் இம்முறை 100 சதவீத வெற்றியத் தரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. கர்நாடகம், தெலுங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் மாநிலங்களிலும் பாஜகவின் எம்.பிக்கள் எண்ணிக்கை இம்முறை அதிகரிக்கவே வாய்ப்பு.

2014ல் 15 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றபோதும் ஒரு தொகுதியிலும்  வெல்ல முடியாத கேரளாவில் இம்முறை 4 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் 10 இடங்களில் வென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை 20 இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடை போடுங்கள் வாக்காளரே!

சென்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி அளித்த குஜராத் (26), ராஜஸ்தான் (25), இமாச்சல் (4), தில்லி (7), கோவா (2), 70 சதவீதத்துக்கு மேல் பெரும் வெற்றி பெற்ற உ.பி (73/80), ம.பி (27/29), சத்தீஸ்கர் (10/11), ஹரியாணா (7/10), ஜார்க்கண்ட் (12/14), பிகார் (31/40), யூனியன் பிரதேச தொகுதிகள் (5/6), மகாராஷ்டிரா
(42/-48) ஆகிய மாநிலங்களில் மீண்டும் மோடி அலை வீசத் துவங்கிவிட்டது. இங்குள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 293. பெரும்பான்மைக்குத் தேவை 272 மட்டுமே.

மோடியின் பொதுக்கூட்டங்களுக்குத் திரளும் மக்கள் திரளைக் காண்கையில் 2014 லோக்சபா தேர்தல் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அதேபோன்ற தேசியப் பெருமிதத்துடன் கூடிய எழுச்சியை இப்போதும் காண முடிகிறது. இலக்கின்றி அலையும் எதிர்க்கட்சிகளுடன் உலகத் தலைவராக உயர்ந்துள்ள மோடியை ஒப்பிட இயலாது. இதனை சரத் பவார், முலாயம் சிங் யாதவ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

7 கட்டமாக நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கும் தினம் நெருங்குவதற்குள் நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் மோடி சூறாவளிப் பிரசாரம் செய்து முடித்திருப்பார். யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக முதல்வர்கள், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்ற மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டணித் தலைவர்கள் ஆகியோரும் பிரசாரத்தைத் துவங்கிவிட்டனர். இனிமேல் தான் இருக்கிறது கச்சேரி.

ஊழலற்ற நேர்மையான ஆட்சியால் உலக அளவில் வளரும் பொருளாதாரத்தை நனவாக்கிய பாஜகவா, பதவிப்பித்தர்களின் கவர்ச்சி கோஷமா என்பதை நாடு எடைபோடுவதற்கான தருணம் நெருங்குகிறது. கண்ணுக்கு எட்டும் தொலைவில் பாஜகவுக்கு சவாலான காட்சிகளைக் காண முடியவில்லை. தவிர, சாதகமான அலையையே காண முடிகிறது. ஆயினும், இத்துடன் தேசநலன் விளைவோர் திருப்தி அடையக்கூடாது.

மண்டல வாரியாக ஆராய்ந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இப்போது 405 ஆக உள்ளது. இந்த இறுதி இலக்கு 450 ஆக இருக்க வேண்டும். பாஜக மட்டுமே 300 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இதனை நிறைவேற்ற மோடி ஆதரவாளர்களும், தேசபக்தர்களும் தேர்தல் களமாட வேண்டிய நேரம் இது.

தே.ஜ. கூட்டணி வெற்றி வாய்ப்பு

மண்டலம் மொத்த

தொகுதிகள்

2014ல்

வென்றவை

2019ல்

எதிர்பார்ப்பு

வடபாரதம் 66 53 55
தென்பாரதம் 132 39 70
மத்திய பாரதம் 125 115 115
மேற்கு பாரதம் 78 72 75
கிழக்கு பாரதம் 117 47 70
வடகிழக்கு பாரதம் 25 10 20
மொத்தம் 543 336 405