எனது தாத்தா அவரது பிய்ந்து போன ரப்பர் செருப்பை 100 தடவையாவது தைத்துப் போட்டுக் கொள்வார். செருப்பில் பாதி தேய்ந்து போய் கால் வெளியில் தெரியும் வரை வேறு செருப்பு வாங்க மாட்டார். ௧௯80–90-களில் பிறந்தவர்களுக்கு தெரியும் ஒரு சாமானை ஒரு தசாப்தமாவது வைத்துக் கொள்வது என்பது ரொம்ப சாதாரண விஷயம்.
ஒரு பென்சில் பிடிக்கவே முடியாத அளவுக்கு குட்டியாக ஆன பிறகும் அதை பயன் படுத்துவோம். உற்பத்தியாகும் ஒவ்வொரு பொருட்களுக்கும் நாம் கொடுத்த மதிப்பு அப்படி. அது 5 பைசா பொருள் ஆனாலும் சரி 5,000 ரூபாய் பொருள் ஆனாலும் சரி.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது? எல்லோரிடமும் பணம் இருப்பதால் பொருட்களை வாங்கிக் குவிப்பதில் தான் பெருமை இருப்பதாக நினைத்து அதன் ஆயுட்காலம் முடியும் முன்னே வெகு சில தடவை உபயோகித்து விட்டுத் தூக்கி எறிந்து விடுகிறோம்.
ஒரு பேனாவை 5 வருடங்கள் உபயோகித்த காலம் எல்லாம் போய், 5 நாட்கள் உபயோகிப்பதே பெரிய விஷயம் என்று மாறி விட்டது. கறிவேப்பிலை மாதிரி பொருட்களைத் தூக்கி எறிவது தான் சரி என்ற தப்பான நுகர்வோர் கலாச்சாரம் எல்லா மட்டத்திலும் பரவலாகி விட்டது.
நம் தாத்தா பாட்டிகள் தன் வாழ்நாள் முழுவதும் உபயோகித்த பொருட்களை நாம் இப்பொழுது ஒரே மாதத்தில் உபயோகித்து விடுகிறோம். விளைவு – எங்கு பார்த்தாலும் குப்பை. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் வரும் அட்டை குப்பை, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதால் வரும் டப்பா குப்பை, கடைக்கு கையை வீசிக் கொண்டு சென்று ஒரு டஜன் பிளாஸ்டிக்கவர்களை வாங்குவதால் வரும் பிளாஸ்டிக் கவர் குப்பை, தேவை இருக்கிறதோ இல்லயோ அழகான பரிசுப் பொருட்களை பள பள அட்டைகளில் கொடுப்பதால் வரும் பரிசுக்குப்பைகள் – இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இந்த உலகம் குப்பைக் காடாக மாறிக் கொண்டு இருக்கிறது. ஒரு பிளாஸ்டிக் கவரால் ஒரு நீரூற்றையே அடைத்து விட முடியும். அப்படி என்றால் நாம் போடும் எண்ணற்ற பிளாஸ்டிக் குப்பையால் எப்படிப் பட்ட பாதகம் உண்டாகும் என்று சற்று எண்ணிப் பார்ப்போம்.
அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்க்க எல்லோரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். அந்த சொத்தில் அவர்கள் வாழ வேண்டுமென்றால் அங்கு நல்ல காற்று, குடிநீர், உணவு கிடைக்க வேண்டும். இந்த அடிப்படை வசதிகளைத் தேடி அவர்களை ஓட விடும் வேலையை நாம் இப்போது நன்றாக செய்து கொண்டிருக்கிறொம் நம் பொறுப்பில்லாத்தனத்தால்.
தயவு செய்து இந்த கறிவேப்பிலை கலாச்சாரத்தை விட்டு விட்டு பொருட்களை அழகுக்காக பார்க்காமல் அதன் பயனுக்காக பார்க்கும் முறையைக் கடை பிடிப்போம். நாம் அனுபவித்த இயற்கை இன்பத்தை அடுத்த தலைமுறையும் அனுபவிக்க வழி செய்வோம்.