ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.தேவிப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ., ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார், தேவிப்பட்டினம் புஹாரியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த 4 பேரை பிடிக்க முயன்றனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். மூவரை கைது செய்தனர்.அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கும்பிடுமதுரை, பெரியபாளையம் தெருவைசேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி 45, கடலுார் மாவட்டம் கோண்டூர் காலனி முகமது அலி என்ற மணிகண்டன் 28, விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் முகமது அமீர் என்ற அருண்குமார் 31, என்பதும் தப்பி ஓடியவர் தேவிபட்டினம் சேக்தாவூது என்பதும் தெரிய வந்தது.
சிக்கியவர்களிடம் விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ., வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமிற்கு பண பரிமாற்றம் செய்தது குறித்தும், அதற்கு கீழக்கரையை சேர்ந்த இலங்கை நபர் முகமது ரிபாஸ் உதவியதும் தெரிய வந்தது.தேவிபட்டினம் பகுதி இளைஞர்களை ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வைக்கவும், அவர்களுக்கு தேவிப்பட்டினம், கீழதில்லையேந்தல் மதரசாக்களில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் ஜிகாத், ஜனநாயகம் ஒரு குப்பர் என்ற புத்தகங்கள் இருந்தன.
அவர்களிடமிருந்த 3 அலைபேசிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முகமது அலி அலைபேசியில் சில அமைப்புகளை திட்டி பதிவு செய்துள்ளனர். அரசியல் தலைவர்கள் பற்றி அவதுாறாக வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவு செய்துள்ளனர்.இளைஞர்களுக்கு பயிற்சியளித்து ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் உறுப்பினராக சேர்ப்பது. பண உதவி செய்வது. நாங்கள் சாக வேண்டும் என நினைத்தால் பல பேரை சாகடிப்போம். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. இளைஞர்களையும், சிறார்களையும் மூளைச்சலவை செய்து தேசத்திற்கு எதிரான குற்றங்களை செய்வதற்காக தயார் செய்வது குறித்த எஸ்.எம்.எஸ்.,கள் இருந்தன.ஜிகாத்திற்கு எதிரானவர்களை கூலிப்படைகள் மூலம் கொலை செய்வது போன்ற திட்டங்களை தீட்டியுள்ளதும், தெரிய வந்தது.