தமிழக தேர்தல் களம் கூட்டணி பேச்சு வார்த்தைகளால் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி, அதிமுக −- தேசிய ஜனநாயக கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக கட்சி, சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றி பெறப் போகும் அணி எது என்பதை இந்த தேர்தல் முடிவு சொல்லும். மே இறுதிக்குள் புதிய சட்டசபை
அமைந்தாக வேண்டும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்கள் கோலோச்சிய மூத்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 2021 சட்டசபைத் தேர்தலில், 159 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்கொள்ள முடியவில்லை. அக்கூட்டணிக்கு 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிட்டியது. அதுவும் கொங்கு மண்டலமும், மேற்கு மாவட்டங்களும் தான் அதிமுகவைத் தாங்கிப் பிடித்தன.
2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு காலத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும், ஜெயலலிதா இல்லாத தலைமை வெற்றிடத்தையும் திமுக சாதுரியமாகப் பயன்படுத்தி கொண்டது. அதனால்தான் திமுக வென்றது. ஊடக பலம், கூட்டணி பலம், சிறுபான்மையினர் ஆதரவு ஆகியவற்றால், அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார் ஸ்டாலின். திமுக மட்டுமே அப்போது 37.70% வாக்குகளைப் பெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி 45.38% வாக்குகளைப் பெற்றது.
அதேசமயம், அதிமுகவால் 33.29% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது; அதிமுக தலைமையிலான கூட்டணி 39.71% வாக்குகளையும் பெற்றது. அமமுக தலைமையிலான கூட்டணி 2.85% வாக்குகளையும், நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் தலைமையிலான கூட்டணி 2.73% வாக்குகளையும் பெற்றன. நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றது. சென்ற தேர்தலில் ஐந்துமுனைப் போட்டி என்று சொல்லப்பட்டாலும் திமுக- அதிமுக அணிகளிடையே தான் பிரதானப் போட்டி நிலவியது. இரு அணிகளிடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 6%.
தற்போது 5 ஆண்டுகள் ஆட்சியின் நிறைவில் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற மு.க.ஸ்டாலின் தீவிரமாகப் பணியாற்றுகிறார். அவரது ஆட்சி மீதான அதிருப்தி அலை மாநிலம் முழுவதும் பரவலாக இருப்பதை அவர் உணர்ந்திருக்கிறார். எனவேதான் யாரும் எதிர்பார்க்காத வகையில், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி, மகளிர் உதவித்தொகை பெற்றுவரும் 1.30 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 தொகை செலுத்தப்பட்டு விட்டதாக ஸ்டாலின் அறிவித்தார். அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத்தொகை தலா ரூ. 1000த்துடன், கோடைக்கால சிறப்பு உதவித்தொகை ரூ. 2000 வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். தேர்தல் அறிவித்துவிட்டால் இந்த உதவித்தொகையை வழங்க முடியாது என்பதால், இந்த அதிரடியை அவர் நிகழ்த்தினார். இதனை ஒரு சாதனையாக திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பறைசாற்றி வருகின்றன.
சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்குப் பிறகு, தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது. 2021ல் இது 6.29 கோடியாக இருந்தது. புதிய விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு வாக்காளர் எண்ணிக்கை சற்று உயரக் கூடும். எது எப்படி இருப்பினும், இப்போதைக்கு மொத்த வாக்காளர்களில் கால்வாசிப் பேருக்கு மேல் மகளிர் உரிமைத்தொகை சென்றுவிட்டது. மேலும், 29.29 லட்சம் முதியோர் சுமார் 8.5 லட்சம் மாற்றுத்திறனாளிகளின் கணக்கில் தலா ரூ.2,000 நலத்தொகையை கடந்த மார்ச் 3ல் வரவு வைத்திருக்கிறது தமிழக அரசு. இதுவும் ஓர் அதிகாரப்பூர்வமான லஞ்சமே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
மகளிர் விடியல் இலவச பேருந்துப் பயணம், 2.72 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கும் புதுமைப்பெண் திட்டம், சிறுபான்மையினருக்கு உதவும் திட்டங்கள் போன்றவையும் சமூகநலம் என்ற பெயரில் வாக்குகளைக் குவிக்கும் திட்டங்களே. ஆனால், கடந்த ஐந்தாண்டுகால மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல பாதிப்புகள் நேரிட்டிருப்பது தான் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை பெருக காரணமாக உள்ளது. குறிப்பாக, ‘திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மதுக்கடைகள் ஒழிக்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அது மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது, டாஸ்மாக் கடைகளில் நிலவிவரும் ஊழலும், மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகளிருக்கு வழங்கும் உதவித்தொகை டாஸ்மாக் வாயிலாக அரசுக்கே திரும்பிவிட்டது என்பதும் பல இடங்களில் உண்மை.
மதுக்கடைகள் மட்டுமல்லாது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகமெங்கும் பெருகிவிட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதுடன் பள்ளிகளிலேயே ஜாதிய வன்மத்துடன் அடிதடி சண்டைகள் நடைபெறுகிறது.
மது, போதை கலாச்சாரத்தின் பக்க விளைவாக பெண்கள் பலாத்காரம், ரௌடிகள் ராஜ்ஜியம் போன்றவை அரங்கேறி, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருக்கிறது. காவல் துறையினர் திமுகவின் ஏவல் துறையாக மாற்றப்பட்டுவிட்டதால், திமுகவை வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே காவல் துறைக்கு நேரம் போதவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. அரிவாள் கலாச்சாரமும், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற மனநிலையும் அதிகரித்திருப்பதையே, பெருகிவரும் படுகொலைகளும், பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் காட்டுகின்றன. இந்நிலையில் ஆளுகட்சியினரின் அராஜகப் போக்கும் கனிமவளக் கொள்ளையும் தங்கு தடையின்றி தொடர்கிறது.
சட்டம் – ஒழுங்கு பாதிப்புக்கு அடுத்ததாக, பட்டியல் சமூக மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இது தொடர்கதையாக மாறிவிட்டது. வேங்கைவயல், திருவாரூர், மதுரை அமச்சியாபுரம், திருப்பூர் ஆகிய இடங்களில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த சமூகவிரோதிகளால் தமிழகத்தின் சமூகநீதி சந்தி சிரித்தது.
இந்தப் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டனை வழங்காமல் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே மு.க.ஸ்டாலின் அரசு பிடிவாதமாக இருந்தது. மாநில நிதிநிலைமையைக் கருத்தில் கொள்ளாமல், கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களில் ஆர்வம் காட்டி, மாநில கஜானாவை காலி செய்ததுடன், அதிலிருந்து மக்களை திசை திருப்ப, மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியைத் தரவில்லை என்று பிரசாரம் செய்தது.
2026-–27 நிதியாண்டு வரை தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 10.62 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் (ஜிடிபி) 26.1 % ஆகும். 2021 தேர்தலின்போது, முந்தைய அதிமுக அரசு அதிகபட்சமாக கடன் வாங்கியது என்று குற்றம்சாட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக, அதனை மறந்து அதிமுக ஆட்சியை விட அதிகமாக கடன் வாங்கி இருக்கிறது. 2021 வரையிலான 20 ஆண்டுகளில் தமிழகம் வாங்கிய கடன் தொகை ரூ.4.9 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மேலும் ரூ. 5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இது வரவுக்கு மேல் செலவு செய்ததன் கொடிய விளைவு.
இலவச கவர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் இந்தக் கடன் சுமை, வரப்போகும் புதிய அரசுக்கு சவாலாகவே இருக்கப்போகிறது. தவிர, மின்கட்டண உயர்வு, உள்ளாட்சிகளில் வீட்டுவரி உயர்வு, குடிநீர்வரி உயர்வு போன்றவையும் மக்களின் செலவை அதிகரித்திருக்கின்றன. மாநிலத்தின் பொருளாதாரமே தத்தளிக்கும் நிலையில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாவது வியப்பில்லை.
எதிர்த்தரப்பில் ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாதது மு.க.ஸ்டாலினுக்கு சாதகம். பாஜகவின் முயற்சியால் அதிமுகவுடன் கூட்டணி சிறிய அளவிலேனும் அமைந்திருக்கிறது. மாறாக திமுகவோ, சிறு கட்சியையும் கூட விட்டுவிடத் தயாரில்லை. ஏதாவது ஒரு கட்சிக்கொடியுடன் அறிவாலயம் பக்கம் சென்றாலே இழுத்துக்கொண்டு சென்று கூட்டணியில் சேர்த்து விடுகிறார்கள் என்று கேலி செய்யும் அளவுக்கு திமுக இறங்கி இருக்கிறது. வாங்கப்படும் கட்சிகளுக்கும் பல கோடி லாபம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இப்போதைக்கு (மார்ச் 7 நிலவரம்) திமுக கூட்டணியில் 22 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுதைகள், தேமுதிக, முஸ்லிம் லீக், எஸ்.டிபி.ஐ, மக்கள் நீதி மையம் ஆகியவை முக்கியமானவை. அதிக தொகுதிகள் கேட்டு வீராப்பு காட்டி பத்திரிகைகளுக்கு பரபரப்பு செய்திகளை உருவாக்கிய காங்கிரஸ் தன்னிலை உணர்ந்து அடக்கமாக 28 தொகுதிகளுடன் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது. அதிமுக தரப்பில் இப்போதைக்கு பாஜக, பாமக, அமமுக, த.மா.கா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் மட்டுமே உள்ளன. கூட்டணி அமைப்பதிலும் தொகுதி ஒதுக்கீட்டிலும் விரைந்து செயல்பட வேண்டியுள்ளது. நடிகர் விஜயின் த.வெ.க கட்சியின் அடுத்தகட்ட நகர்வுக்காக அதிமுக காத்திருப்பது போலத் தோன்றுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்.
ஆனால், திமுகவை பின்னணியிலிருந்து இயக்கும் கிறிஸ்தவப் பின்னணி கொண்ட அமைப்புகளும், அதிதீவிர விசுவாசிகளான ஊடக அறிஞர்களும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் எந்த நகர்வையும் நிலைகுலையச் செய்ய தயாராகக் காத்திருக்கிறார்கள்.
திரைப்படப் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தனியே களம் காண்கிறது. அக்கட்சி மத்தியில் பாஜகவையும், மாநிலத்தில் திமுகவையும் எதிர்க்கிறது. அக்கட்சியின் வாக்கு விகிதம் இம்முறை குறையக்கூடும். நடிகர் விஜயையும் ஒரு அதி புத்திசாலிக்
கும்பல் தான் பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கிறது. அவர்கள் காட்டும்
வழியில் தான் விஜய் பயணம் இருக்கும். தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு, தமிழகத் தேர்தல் களத்தில் ஒரு
தெளிவு கிடைக்கும். எனவே, வரும் நாட்களில் தொடர்ந்து அரசியல் களத்தை அலச, தினுசு தினுசான வாய்ப்புகள் கிடைக்கும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
சீறும் ஹிந்து, மாறும் சூழல்!
தமிழக அரசின் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஹிந்து தமிழர்களின் மதமான சனாதனத்தை மலேரியா, டெங்கு, கொசு போன்று ஒழிக்க வேண்டும் என்று பேசியது தமிழகத்தின் அனைத்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியது. நாடெங்கும் பேசுபொருளாக இருந்த இந்த விஷயத்திற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்கக்கூட தயாராக இல்லை. அந்த அளவுக்கு ஹிந்துக்களை இழிவுபடுத்தினால், சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை சிந்தாமல், சிதறாமல் திமுகவுக்கு பெற்றுத் தரும் என்ற இருமாப்பில் இருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து, சிறுமியர் முதல் வயதான பாட்டி வரை பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கூட இதற்கு தப்ப முடியவில்லை. தமிழகத்தில் பெருகியுள்ள போதை கலாச்சாரத்தின் விளைவாக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கூட டாஸ்மாக் போதையுடன் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களோடு சண்டையிடும் நிகழ்வுகளை காணுகின்றோம். மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய வன்மத்துடன் நடைபெறும் மோதல்கள் தென்மாவட்டங்களில் படுகொலைகளில் முடிவடைகிறது. கிராமங்கள் வரை தங்கு தடையின்றி கிடைக்கின்ற போதை வஸ்தான கஞ்சா மூலம் மாணவர்களின் மனோ நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவே அவர்களை சுயநினைவற்ற நிலையில் பல கொடூரங்களை செய்யத் தூண்டுகிறது.
ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை அறநிலையத்துறை என்ற பெயரில் அபகரித்துள்ள திராவிட மாடல் அரசு, வழிபாட்டு தலங்களில் கூட, அவர்களது உரிமையை நசுக்குகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டிய அறநிலையத்துறை நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாது என்று பக்தனின் உண்டியல் பணத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடுகிறது. காவல்துறையே சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து விலகி, யார் ஒருவர் ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களோ அவர்களை கைது செய்வதே முதல் கடமையாக கொண்டு செயல்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் இந்த அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம், பேரணி என்று ஜனநாயக ரீதியாக எதை நடத்த அனுமதி கேட்டாலும், அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது. இதன் மூலம் சாமான்யர்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. ஹிந்து இயக்கங்களின் காவடி ஊர்வலம், வேல் யாத்திரை, கந்த ஷஷ்டி கவசம் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகளைக் கூட, கோயிலில் நடத்துவதற்கு தடை என்று காவல்துறையை வைத்து மிரட்டுகின்ற அவலம் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.