தேர்வு காலங்கள் தன்னம்பிக்கையைத் தகர்க்காதீர்கள்

பொதுத்தேர்வு எழுதச்செல்லும் மாணவர்கள் நல்ல சந்தோஷமான மனநிலையில் இருப்பது அவசியம். மாணவர்களிடம் மன அழுத்தம் ஏற்படாதவாறு பெற்றோர்களும், உறவினர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

தேர்வு நாட்களிலும் இயல்பான நாட்களில் இருப்பது போலவே நடந்து கொள்ளுங்கள். பரபரப்பான நடவடிக்கைகள் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்.

பெற்றோர்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு பிள்ளைகளோடு அமர்ந்து படிப்பதெல்லாம் ஓவரான விஷயம்தான்.

பெற்றோர்களுக்கு… இரண்டு விதமான பெற்றோர்களால் மாணவர்களுக்குச் சிக்கல் நிகழ்கிறது. அதிகம் படித்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோடு அமர்ந்து படி, படி, என்று படுத்தி எடுக்கிறார்கள். படிக்காத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. நீ படிச்சா படி… படிக்கலேன்னா போ” என்று பேசும் பெற்றோர்களால், நிச்சயமாக மாணவர்களின் மனம் பாதிக்கப்படும்.

வீட்ல ஒரு வேலை பார்க்கறதில்ல… படிக்கறேன்… படிக்கறேன்னு… புத்தகத்தை விரிச்சு வைச்சுகிட்டு உட்கார்ந்திருக்க…” என்று தயவு செய்து உங்கள் பிள்ளைகளை அதட்டாதீர்கள்.

பெரிய க்ளாஸ் வந்துட்டோம்னு கொழுப்பா.. வாயைத் தெறந்து படி” என்று வாய்க்கு வந்தபடி கத்துவது வருத்தத்தையே ஏற்படுத்தும்.

இவன் ஒண்ணும் தேற மாட்டான் சார்”, என்று அடுத்தவர் முன் உங்கள் பிள்ளையைக் கிண்டல் செய்யாதீர்கள்.kalvi

அரையாண்டு, திருப்புதல், தேர்வுகளில் எடுத்த குறைந்த மதிப்பெண்களைச் சொல்லிக்காட்டி, குற்ற உணர்வை உண்டாக்காதீர்கள்.

மாணவர்களுக்கு…

தேர்வுகளுக்கு இடையில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறை இருந்தால், நன்றாகத் திட்டமிட்டு அளவான நேரம் மட்டும் படியுங்கள் கவனச் சிதறல்களோடு, பத்துமணி நேரம் படிப்பதற்குப் பதிலாக மனதை ஒருமுகப்படுத்தி 5 மணி நேரம் படிப்பது மேல்.

வீட்டிலேயே அடைந்து கிடக்காதீர்கள். குறைந்தபட்சம், காய்கறிக் கடைக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வாருங்கள்.

தொலைக்காட்சி பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது, என்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, வெளியுலகத் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். 5 நிமிடமாவது தலைப்புச் செய்திகளைப் பாருங்கள் அல்லது படியுங்கள். தேர்வு தொடர்பான அவசரச் செய்திகள் ஏதேனம் வந்தால் தெரிந்து கொள்ள இது உதவும்.

மதிப்பெண்கள் அவசியம்தான். நல்ல மதிப்பெண் பெற்றால் நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கும். உண்மைதான். ஆனால், அந்த மதிப்பெண் எடுத்தாலும், அதற்கு ஒரு மேற்படிப்பு கிடைக்கும். அந்த படிப்புக்கு ஒரு வேலையும் கிடைக்கும். அதாவது, மதிப்பெண்களுக்கு அப்பாலும் ஒரு மகத்தான வாழ்க்கை இருக்கிறது. மாணவர்களே, நீங்கள் அடுத்த மாணவர்களைப் பார்த்து என்ன இந்த எக்ஸாம்ல… செண்டமா? என்று நக்கல் தெறிக்கும் தொனியில் பேசாதீர்கள்.

தொட்டதற்கெல்லாம் அடுத்த மாணவர்களோடு உங்கள் ஒப்பிட்டுக் கொள்ளாமல் இருங்கள். நீங்களாகவே, சில பாடங்களையும் பகுதிகளையும், கடினம் என்று முடிவு செய்து கொண்டு, கடவுே! அந்தக் கேள்வி மட்டும் வரவே கூடாது” என்று வேண்டிக் கொண்டிருப்பதெல்லாம் கூடாது. மாறாக, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு பிடித்த கடவுளை இஷ்ட தெய்வத்தை, வணங்கிவிட்டு புத்துணர்ச்சியோடு தேர்வுக்குச் செல்லுங்கள்.

இந்தக் கேள்வி கண்டிப்பா வருமாண்டா… மச்சி… நீ மனப்பாடம் பண்ணிட்டியா! என்று யாரையும் பதற்றப்படுத்தாதீர்கள்.

தேர்வு அறை வரை சென்று படித்துக்கொண்டிருக்காதீர்கள். தேர்வுக்கு அரை மணிநேரம் முன்னதாக, ரிலாக்ஸ் ஆகி விடுங்கள்.

உங்களுக்குப் பொதுத்தேர்வு எழுதும் உறவினர்கள் யாராவது இருந்தால், தினமும் அவர்களுக்குத் தொலைபேசியில் பேசியோ, வாழ்த்துச் செய்தி அனுப்பியோ டார்ச்சர் பண்ணாமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியம்.

பெற்றோர்களே, ‘நீ நல்ல மார்க் எடுப்ப… நல்ல படிப்ப… என்று நம்பிதான் நான் இருக்கேன். ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் எடுத்துடு தாயி…’ என்று தமிழ்ப்படம் ரேஞ்சுக்கு கிளைமாக்ஸ் சீன் கிரியேட் பண்ணாதீர்கள். பாவம்! பிள்ளைகள், பயந்து விடுவார்கள்.

அடிச்சு ஆடு தம்பி.. என்ன வந்தாலும் வாழ்க்கையில் ஜெயிச்சுடலாம்… என்று தட்டிக்கொடுத்து தேர்வுக்கு அனுப்புங்கள் தங்கமாக ஜொலிப்பார்கள்!

வாழ்த்துகள்.