மாணவர்கள் எவற்றை செய்யவேண்டும் எவற்றை செய்யக்கூடாது என்பதை உன்னிப்பாகக் கவனிப்போம்.
விதைக்கும் நேரத்தில் ஊர்சுற்றப்போய்விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளோடு செல்லக்கூடாது என்பதை கிராமத்து பழமொழி. தேர்வு நேரத் தயாரிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்திவரவேண்டும்.
தினந்தோறும் பாடங்களை தவறாமல் படித்து குறிப்பு எழுதிக்கொள்ளவேண்டும். ஏதேனும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்குள்ளாவது தேக்கமடைந்த பாடங்களை படித்து குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் கூறுவது சரியாக புரியவில்லை என்றால் அவர்களிடம் மீண்டும் விளக்கம் கேட்க தயங்கக்கூடாது. தயக்கத்தை தவிர்க்கவேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பரிவர்த்தனை செம்மையாக இருந்தால்தான் படிப்பு சுலமாகும்.
மாணவர்கள் தேவையற்ற துரித உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவேண்டும். எளிமை
யான சத்துணவு வகைகளை பொழுது தவறா
மல் சாப்பிடவேண்டும். குறுகிய கால ஊக்கமளிக்கும் பானங்களை தவிர்க்கவேண்டும். உண்மையிலேயே ஊட்டம் அளிக்கக்கூடிய பானங்களை அருந்தவேண்டும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பதை கவனத்தில் கொண்டு உடல்நலத்தை நன்கு பேணவேண்டும். ஆரோக்கியமே ஆனந்தம் என்பதை உதாசீனப்படுத்தக்கூடாது.
ஒருபுறம் தொலைகாட்சி ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருக்க பாடம்படிப்பது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும். எனவே தனியறையில் அமைதியாக அமர்ந்து நிதானமாக பாடங்களை படிப்பதே சாலச்சிறந்தது. இரவு முழுவதும் படிக்கிறேன் என்று கூறி அதிகப்படியாக உடலை வருத்திக்கொண்டால் தேகநலனும் சிதைந்துவிடும். கல்வியும் பிரகா
சிக்காது. தூக்கத்தை தொடர்ந்து தொலைத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிடும்.
மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையும் இருக்கக்கூடாது. உயர்வு மனப்பான்மையும் இருக்கக்கூடாது. சமன் செய்த சிந்தனை உதவும். உயர்வு மனப்பான்மை மாணவர்களை சீர்குலைத்துவிடும். தாழ்வு மனப்பான்மை படுகுழியில் தள்ளிவிடும்.
எவ்வளவுதான் படித்தாலும் தேர்வுக்கு ஒருவாரம் இருக்கும்போது எல்லாவற்றையும் மறுவாசிப்பு செய்துகொள்ளவேண்டும். குறிப்பு
களை கூர்ந்து கவனத்துடன் படிக்கவேண்டும்.
கடந்தகாலத்தில் எந்தெந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதையும் உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப ஆயத்தமாகவேண்டும். மாதிரித்தேர்வுகளை நடத்தி விடைகளை எழுதவேண்
டும். அதில் ஏற்படக்கூடிய குறைகளை திருத்திக்கொள்ளலாம். இதைப்போல குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறைகளாவது மாதிரித்தேர்வுகளை நடத்திப்பார்ப்பது நல்லது.
தேர்வுக்கு முந்திய நாள் அநாவசிய அலைச்சல்களையும் உளைச்சல்களையும் தவிர்த்துவிடவேண்டும். புத்துணர்ச்சியோடு இருக்கவேண்டும். விளையாடலாம், குறிப்பிட்ட நேரம் உறங்கலாம். ரிலாக்ஸான மனநிலையில் இருக்கவேண்டும்.
தேர்வு கூடத்திற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்கு முன்பே சென்றுவிடவேண்டும். இதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவேண்டும். தேர்வுக்கூடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகிவிடும். தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச்செல்லவேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிட்றி பாக்ஸ், ஹால் டிக்கெட் போன்றவற்றை ஞாபகமாக முன்கூட்டியே எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும். தேர்வுக்கூட முகப்பில் சில மாணவர்கள் எதை எதையோ சொல்லக்கூடும். அதில் கவனம் செலுத்தக்கூடாது. எந்தவிதமான குழப்பத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
கொடுக்கப்பட்ட தாளில் தேர்வு எண்ணை தெளிவாக எழுதவேண்டும். வினாக்களுக்குரிய விடைகள் தொடர்பான எண்களையும் குழப்பமில்லாத வகையில் குறிப்பிடவேண்டும். கையெழுத்து தெளிவாக இருப்பது நல்லது. உதாரணமாக நான்கு போடுவது ஏழு போல் தெரியக்கூடாது. முதலில் நன்கு விடை தெரிந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பாசிட்டீவ் மனோபாவத்தை ஊக்குவிக்கும். கூடுமான
வரை வரிசைகிரமமாக பதிலளிப்பது ஆசிரியரின் பார்வையில் சிறந்த அபிப்ராயத்தை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தேர்வுகூடத்தில் அக்கம் பக்கம் திரும்பிப்பார்க்கக் கூடாது. மூன்று மணிநேரம் முடிவதற்கு முன்பே பதில்களை எழுதிவிட்டால் உடனே எழுந்துசென்று விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து
விடக்கூடாது. எளிதிய பதில்களை நிதானமாக மறுபடியும் மனத்துக்குள்ளேயே வாசிக்கவேண்டும். ஏதேனும் விடுபடுதல்கள் அல்லது பிறழ்வுகள் இருந்தால் அவற்றை சரிப்படுத்த வேண்டும். காலக்கெடு முடிவடையும் நேரத்தில் கண்காணிப்பாளரிடம் விடைத்தாளை அளித்துவிட்டு வீட்டுக்கு புறப்படவேண்டும்.
தேர்வை எழுதி முடித்தபிறகு அதுபற்றிய சிந்தனையிலேயே உழன்று கொண்டிருக்கக்கூடாது. ரிசல்ட் நல்லபடியாக வரும் என்ற நம்பிக்கை மாணவர்களை கைவிடாது.
பெற்றோர் டானிக்
மாணவர்களுக்கு பெற்றோர் எந்தெந்த வகையில் உதவ முடியும் என்பதை பார்ப்போம்.
தங்களது வாரிசுகள்தான் என்றபோதிலும் தங்களின் எண்ணங்களை குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கக்கூடாது. குழந்தைகள் பூமிக்கு வருவதற்கு பெற்றோரே காரணம் என்றபோதிலும் அவர்களது சுயமான போக்கை தடுத்து நிறுத்த முற்படக்கூடாது.
மாணவர்களுக்கு கட்டுப்பாடு தேவைதான். ஆனால் கட்டுப்பாடு என்றபெயரில் அவர்களை சித்தரவதை செய்து சிதைத்துவிடக்கூடாது.
தேர்வுகாலங்களில் மாணவர்களின் கவனங்களை சிதறடிக்கக்கூடிய எந்த நடவடிக்கையிலும் பெற்றோர் ஈடுபடக்கூடாது. விருந்து, விழா, எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றை பெற்றோர் தவிர்ப்பது விரும்பத்தக்கது. பெற்றோர் இந்த சின்னஞ்சிறிய தியாகங்களைக் கூட தங்கள் குழந்தைகளுக்காக செய்யாமல், இருந்தால் எப்படி?
ஆசிரியர் டானிக்
தேர்வில் வெற்றியை ஈட்ட உதவுகிறது. முதலில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கவனிப்போம். ஆசிரியர்களையே ரோல் மாடல்களாக கருதும் மாணவர்கள் பலர் உள்ளனர். பாடங்களை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் கேட்கின்ற சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்கவேண்டும். புரிந்துகொள்ளும் திறனும் கிரகிக்கும் ஆற்றலும் மாணவர்க்கு மாணவர் வேறுபடுவது இயல்பு. எனவே சில மாணவர்கள் மறுபடியும் மறுபடியும் சந்தேகம் எழுப்பினாலும்கூட அவர்களது ஐயத்தைப் போக்க ஆசிரியர்கள் வழிவகை செய்யவேண்டும்.
மாணவர்களை தங்களது குழந்தைகளாக ஆசிரியர்கள் பாவிக்கவேண்டும். இந்த மனோபாவம் வலுவடைந்துவிட்டால் மாணவர்களுக்கு உதவுவது ஆசிரியர்களின் கடமையாக மாறிவிடும். மாணவர்களுக்கு பாடத்தில் மட்டும் உதவி செய்யாமல் அவர்களது பன்முகத் திறமைகளையும் பட்டை தீட்ட ஆசிரியர்கள் தேவையானவற்றை தொடர்ந்து செய்துகொடுக்கவேண்டும்.
இன்றைய மாணவர்கள்தான் தேசத்தின் வருங்கால சிற்பிகள் என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கம் அளிக்கவேண்டும். நேர்நிலை சிந்தனை வளர உறுதுணையாக இருக்கவேண்டும். எதிர்நிலை எண்ணம் தலைதூக்காதபடி ஆக்கப்பூர்வ உள்ளீடுகளை அளித்துக்கொண்டே இருக்கவேண்டும்.