பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி மக்களிடையே மகத்தான ஆதரவை பெற்றுள்ளதுடன் சர்வதேச அளவிலும் செல்வாக்குடன் வீறுநடை போட்டு வருகிறது. இது தேச விரோத சக்திகளுக்கு உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உறுத்தல் உக்கிரமாகி விட்டதால் தேச விரோத சக்திகள் மோடியின் ஆட்சிக்கு எவ்வகையிலாவது கலங்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
தேச விரோத சக்திகள் எடுத்த விஷமத்தனமான அஸ்திரங்கள் யாவும் முறித்து எறியப்பட்டு விட்டன. இப்போது கடைசியாக ஒளரங்கசீப் சமாதி அரசியலை தேச விரோத சக்திகள் முன்னெடுத்துள்ளன.
மார்ச் மாதம் 17ம் தேதி இரவு நாக்பூரில் உள்ள மகால் பகுதியில் ஒளரங்கசீப் சமாதி விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இது கல்வீச்சாக மாறியது. போலீசார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீசார் இரவு முழுவதும் முழு வீச்சில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 80 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்வாலி, கணேஷ்பேட், லக்கட் கஞ்ச், பச் பயோலி, சாந்திநகர், சக்கர்தாரா, நந்தன் வன், இமாம்வாடா, யசோதரா நகர், கபில் நகர் ஆகிய பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கலவரத்தில் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 34 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் 5 பேர் காயமடைந்தனர்.
ஒளரங்கசீப் சமாதி அரசியல் மகாராஷ்ட்ராவுக்கு அப்பாலும் பரவியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஒளரங்கசீப்பின் அடுக்கடுக்கான அட்டூழியங்களை பட்டியலிட வேண்டியது அவசியம். இதை துல்லியமாக உள்வாங்கிக் கொண்டாலே ஒளரங்சீப் நிந்திக்கப்பட வேண்டிய, நிராகரிக்கப்பட வேண்டிய நபர் என்பது புலனாகி விடும்.
ஒளரங்சீப்பின் வரலாற்றை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் ஒளரங்சீப் நாமா, ரதோட் ரீகியாத், மாசீர் இ ஆலம்கிரி, அகம் இ ஆலம்கிரி உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் உள்ளன. ஜகாங்கீரைப் போல ஒளரங்கசீப்பும் கடுமையான ஹிந்து துவேசி. 1644ல் குஜராத் சுபேதாராக ஒளரங்கசீப் செயல்பட்டார். வீதிகளில் பூஜிக்கப்பட்டு வந்த ஆலயங்களையும், விக்கிரகங்களையும் ஒளரங்கசீப் தகர்த்தெறிந்தார். ஹோலி பண்டிகை கொண்டாடக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தினார். பொது இடங்களில் விளக்கேற்ற தடை விதித்தார்.
ஆனால் ராஜா ஜஸ்வந்த் சிங் குஜராத் சுபேதாராக இருந்த காலகட்டத்தில் ஹிந்துக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். அவரது ஆட்சி காலத்தின் போது கோயில்கள் புனரமைக்கப்பட்டன. ஒளரங்கசீப்புக்கு சிம்ம சொப்பனமாக ராஜா ஜஸ்வந்த் சிங் விளங்கினார். சிந்தாமணி கோயில், சகஸ்பூர் என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. இது ஒளரங்கசீப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கோயிலுக்குள் பசுவை கொன்று மாமிசத்தை வீசி எறிந்தார்கள். கோயிலின் புனிதத்தை பாழாக்கினார்கள். இதை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த இடம் மசூதியாக மாற்றப்பட்டு விட்டது. இதைப்போல எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும். மதுரா, டெல்லி, வாரணாசி, சித்தூர், உதைப்பூர், பந்தர்பூர் உள்ளிட்ட பல இடங்களில் எண்ணற்ற ஆலயங்கள் ஒளரங்கசீப் ஆட்சியில் தரைமட்டமாக்கப்பட்டன.
ஹிந்து குருகுலங்கள் யாவற்றையும் ஒளரங்கசீப் இழுத்து மூடினார். ஞானக் கருவூலங்களாக விளங்கிய ஏட்டுச் சுவடிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. குருக்கள் பலர் கொல்லப்பட்டனர். குருகுல கல்விக்குப் பதிலாக முஸ்லிம் கல்வியை ஒளரங்கசீப் புகுத்தினார். பல ஊர்களின் பெயர்களை மாற்றினார். மதுராவின் பெயர் இஸ்லாமாபாத் ஆனது. வாரணாசியின் பெயர் முகமதாபாத்தானது. மதமாற்றத்தை ஒளரங்கசீப் ஊக்குவித்தார். இஸ்லாமைத் தழுவாத மருத்துவர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அரியணை மோகத்தால் உடன் பிறந்தவர்கள் அனைவரையும் கொன்றவர்தான் ஒளரங்கசீப்.
கலங்கத்தின் மொத்த உருவமான ஒளரங்கசீப்பை முதன்மைப்படுத்தி அரசியல் செய்ய முற்படுவது அயோக்கியத்தனமே. இந்த நாசகார வேலையில் ஈடுபட்டுள்ள தேச விரோத சக்திகளை களையெடுக்கும் பணியில் மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். அவரது வெற்றி தேச விரோத சக்திகளுக்கு சம்மட்டி அடியாக அமையும் என்பது திண்ணம்.
கட்டுரையாளர் : உதவி பேராசிரியை
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி