நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கருத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அறிவுலகினரிடையே தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் நோக்குடன் பணிபுரிந்து வரும் ‘தேசிய சிந்தனைப் பேரவை’ பற்றி அறிவோம்…
ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் சிந்தனையாளர்களுக்கான ‘பிரக்ஞா பிரவாஹ்’ கூட்டமைப்பில் தமிழகத்தின் அங்கமாக தேசிய சிந்தனைப் பேரவை திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்க வேண்டிய சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் 1980களில் உருவானது. அப்போதைய ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் பாளாசாகேப் தேவரஸ் ஜி, சுதர்சன் ஜி, தத்தோபந்த் தெங்கடி ஜி ஆகியோரிடையிலான உரையாடல்கள், இதற்கான அமைப்பை உருவாக்க வழிவகுத்தன.
அன்றைய காலகட்டத்தில் நாட்டின் பெருமிதத்திற்கும், அறிவுஜீவிகளுக்கும் தொடர்பற்ற நிலை இருந்தது. இந்நிலையை மாற்ற, தேசிய சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்களின் அணி ஒன்றிணையத் தொடங்கியது. அதற்கு ‘பிரக்ஞா பிரவாஹ்’ என்று பெயரிடப்பட்டது.
பாரதப் பண்பாடு, தத்துவம், கலாச்சாரம், கலை, இலக்கியம், ஆன்மிகம், சமூக அறிவியல் போன்ற துறைகளில் வல்லுநர்கள், அறிவுஜீவிகள், செயல்பாட்டாளர்களிடையே தேசிய சிந்தனையை வலுப்படுத்துவதே இதன் குறிக்கோள். ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது, நூல் வெளியீடு ஆகிய நிகழ்வுகளின் மூலம் இப்பணி நடந்து வருகிறது. கல்வியாளர்களிடையே தேசிய கருத்தாக்கங்களை வலுப்படுத்த, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி ஆய்வுப்பணிகள் நடத்தப்படுகின்றன.
இதன் தேசிய ஒருங்கிணைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். ஜெ.நந்தகுமார் ஜி செயல்படுகிறார். எம்.எஸ்.ரகுநந்தன் ஜி, ஸ்ரீகாந்த் கட்டாரே ஜி ஆகியோர் தேசிய இணை அமைப்பாளர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சார்ந்த சு.விஸ்வநாதன் ஜி, இதன் தென்பாரத அமைப்பாளராக உள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள தனித்தன்மைகளின் அடிப்படையில், தேசிய சிந்தனை அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. உதாரணமாக, கேரளத்தில் “பாரதிய விசார் கேந்திரம்”, தமிழகத்தில் “தேசிய சிந்தனைப் பேரவை”, ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் “பிரக்ஞா பாரதி” போன்ற பெயர்களில் இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.
கல்வியாளர்களை ஒருங்கிணைக்க ‘ஞான சங்கம்’, சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க ‘லோக்மந்தன்’ ஆகிய தேசியக் கருத்தரங்குகளை பிரக்ஞா பிரவாஹ் 2016 முதல் நடத்தி வருகிறது.
‘லோக்மந்தன்’ இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் ஒரு நகரத்தில் நடைபெறும். 2016ல் போபால் (இந்திய மனங்களை காலனி ஆதிக்க மனநிலையிலிருந்து விடுவித்தல்), 2018ல் ராஞ்சி (பாரத போதம் – ஜன கண மன), 2022ல் கௌஹாத்தி (உள்ளூர்ப் பாரம்பரியம்), 2024ல் ஐதராபாத் (உள்ளூர்க் கலாச்சாரத்தைப் போற்றுதல்) ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
அதேசமயம், ‘ஞான சங்கம்’ நிகழ்ச்சி நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நகரங்களில், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெறுகிறது. சென்னையில் 2017ல், ‘தேசத்தை வடிவமைப்பதில் அறிவுஜீவிகளின் பங்கு’ என்ற தலைப்பில் ‘ஞான சங்கம்’ நடந்தது.
தமிழகத்தில் தேசியப் பணி:
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால் இங்கு கடந்த 100 ஆண்டுகளாக தேசநலனுக்கு விரோதமான கருத்துகள் விதைக்கப்பட்டன. அந்த அபாயத்திலிருந்து தமிழகத்தை மீட்க, 1978ல் உருவானது தேசிய சிந்தனைக் கழகம் (தே.சி.க.- தேசிய சிந்தனைப் பேரவையின் முந்தைய வடிவம்). திருச்சி தேசிய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் ஜி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அப்போதைய மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் ஜி ஆகியோரிடையே நிலவிய கருத்துப் பரிமாற்றங்களே தே.சி.க.வின் வித்து.
சிறந்த மேடைப் பேச்சாளரான ராதாகிருஷ்ணன் ஜி, எந்த மேடையைக் கொண்டு தமிழகத்தில் திராவிட விஷம் விதைக்கப்பட்டதோ, அதே மேடையில் தேசியமும், தெய்வீகமும் பின்னிப்பிணைந்த தமிழை மேடையேற்றுவதன் வாயிலாக, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தத் திட்டமிட்டார். அவர்தம் மாணாக்கர்கள் அவரது அடியொற்றி தமிழின் தெய்வீக, தேசியப் பண்புகளை மேடைதோறும் விதைத்தனர்.
பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு (1982) சிறிதுகாலம் செயல்படாமல் இருந்த தேசிய சிந்தனைக் கழகம், 2007 முதல் மீண்டும் செயல்பட்டு வருகிறது.
விவேகானந்தர் 150-வது ஜெயந்தி:
வீரத்துறவி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்கள் 2013 ஜனவரி 12 முதல் 2014 ஜனவரி 12 வரை, நாடு முழுவதும் நடைபெற்றன. அதையொட்டி, பல்வேறு கல்வி நிறுவனங்களில் 25-க்கு மேற்பட்ட கருத்தரங்குகளை தே.சி.க. நடத்தியது. மேலும், ‘விவேகானந்தம் 150 டாட்காம்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, தினசரி சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரைகள், செய்திகள் வெளியிடப்பட்டன.
2014ல், தமிழ் தொண்டாற்றிய மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் 200-வது பிறந்ததின ஆண்டாகும். கடல் கடந்து நமது பண்பாட்டைப் பரப்பிய மன்னன் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது முடிசூடிய ஆண்டுமாகும். அதையொட்டி பல்வேறு நிகழ்வுகளையும், கருத்தரங்குகளையும் தே.சி.க. நடத்தியது.
2017ல், ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை தே.சி.க. நடத்தியது. அதையொட்டி ‘ராமானுஜம் ஆயிரம்’ என்ற இணையதளத்தை ஓராண்டு காலத்துக்கு சிறப்பாக நடத்தியது.
அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டு விழாவையும் (2017−-18), மகாத்மா காந்தியின் 150வது பிறந்த ஆண்டு விழாவையும் (2018−-19) தேசிய சிந்தனைக் கழகம் சிறப்புறக் கொண்டாடியது. 2007−-17 ஆண்டுகளில், பல நூல்களை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டுள்ளது.
தேசிய சிந்தனைப் பேரவை:
2024 ஆம் ஆண்டு வரை ‘தேசிய சிந்தனைக் கழகம்’ என்ற பெயரில் இயங்கிவந்த அமைப்பு, 2025 ஆம் ஆண்டு முதல் ‘தேசிய சிந்தனைப் பேரவை’ என்ற பெயரில், பதிவு செய்யப்பட்ட அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கென மாநிலம் முழுவதிலுமுள்ள தேசிய சிந்தனை கொண்ட மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டக் குழுவும் தங்கள் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பொது நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகின்றன. மாதாந்திரக் கூட்டங்களில் அறிவுப்பூர்வமான விவாதங்கள், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
மூன்று பிரிவுகளில் கவனம்:
தேசிய சிந்தனைப் பேரவையின் சென்னை மாநகரக் குழு, மூன்று பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது :
அ. ஆராய்ச்சித் துறை (விமர்ஷ் சோத்): கலாச்சார மார்க்சியம், கிறிஸ்தவ மதமாற்றம், இஸ்லாமிய பயங்கரவாதம், உலக சந்தை சக்திகள் ஆகிய தலைப்புகளில் தனித்தனியே வல்லுநர்களைக் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன.
ஆ. சமூகப் பிரிவுகள் துறை: யுவா (இளைஞர் சக்தி), மஹிளா (மகளிர் சக்தி), தேசிய தமிழ்ப் பேரவை ஆகிய பிரிவுகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, யுவா பிரிவில் ‘ஹெரிடேஜ் வாக்’ போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய தமிழ்ப்பேரவை சார்பில் தமிழறிஞர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது.
இ. பிரசாரத் துறை: விஜில் ஈவென்ட்ஸ், விஜில் ஃபிலிம்ஸ், விஜில் சமூக ஊடகம் ஆகிய பிரிவுகளில் பிரசாரத்துறை கவனம் செலுத்துகிறது. தேசிய சிந்தனையுள்ள திரைப்படங்கள், ஆவணப் படங்களை எடுக்கத் துணை புரிவது விஜில் ஃபிலிம்ஸ் ஆகும்.
ஆராய்ச்சியாளர்கள் ஜிதேந்திர பஜாஜ், எம்.டி.ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் ஆராய்ச்சிப் பணியின் அடிப்படையில் ‘Timeless India – Resurgent India’ என்ற ஆவணப்படத்தை விஜில் வெளியிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் அமரர் சிவராம்ஜி முயற்சியால், சென்னையில் 1990ல் நிறுவப்பட்ட விழிப்புணர்வு அமைப்பான ‘விஜில்’, தற்போது தேசிய சிந்தனைப் பேரவையின் அங்கமாக இயங்கி வருகிறது.
மூத்த பத்திரிகையாளர்கள் பால்கி சர்மா, ரங்கராஜ் பாண்டே பங்கேற்ற கருத்தரங்கம், கீழடி மோசடிகள் குறித்த ஆய்வரங்கம், இயக்குநர் சீமான் கலந்துகொண்ட மகாகவி பாரதி பிறந்தநாள் விழா ஆகியவை விஜிலின் அண்மைக்காலப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை.
கருத்துருவாக்கங்களே ஆயுதம்:
இன்றைய நவீன உலகில் கருத்தாக்கங்களே பிரதான ஆயுதங்களாக மாறியுள்ளன. கருத்தாக்கங்கள் (Narratives) மூலமாக எந்த ஒரு நாட்டையும் வலுப்படுத்த முடியும்; பலவீனப்படுத்தவும் முடியும். ஒரு நாட்டின் அறிவுலகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டால், அந்த நாட்டை மறைமுகமாக ஆக்கிரமித்து விடலாம் என்பதே சதிகாரர்களின் பாலபாடம்.
தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரிய- திராவிட இனவாதம், பிராமண வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு போன்ற கருத்தாக்கங்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டவையே.
அண்மைக்காலமாக தேசமெங்கும் பரவலாக அறியப்படும் ‘அர்பன் நக்ஸல், ‘ஓக்கிஸம்’ போன்ற சொற்கள், இடதுசாரிச் சிந்தனையின் அராஜக விளைவுகள். எனவே தான், எதிர்மறைச் சிந்தனைகளுக்கு (Negative Narratives) எதிராக, நாட்டு மக்களை ஒன்றிணைக்கும், தேசத்தை வலுப்படுத்தும் நேர்மறையான கருத்தாக்கங்களை (Positive Narratives) பதிவு செய்யும் இலக்குடன், தேசிய சிந்தனைப் பேரவை இயங்கி வருகிறது.
கட்டுரையாளர்:- வ.மு.முரளி
தேசிய சிந்தனைப் பேரவையின் தமிழக அமைப்பாளர்
