கல்வியில் மாற்றம் இன்றியமையாதது. ஏனெனில் அது புதிய விருப்பங்களையும் அவற்றைத் திருப்தி செய்யும் திறன்களையும் உருவாக்குகிறது. ஒவ்வொரு காலகட்டங்களில் மாணவர் சமுதாயத்தின் தேவைகளுக்கேற்ப கல்வியில் மாற்றம் வந்துகொண்டே இருக்கும். மூன்று தசாப்தங்களாக மாற்றமின்றி இருந்த கல்விக்கொள்கையில் தற்போது வந்துள்ள புதிய கல்விக்கொள்கை, வரவேற்கத்
தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுள்ளது.
அது மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அவர்கள் எப்படி தகவல்களை மனனம் செய்து மதிப்பெண் பெறலாம் என்பதை விடுத்து பாடங்களை புரிந்து கற்றலுக்கான மேன்மைகளை வலியுறுத்தும். அவர்களின் அறிவாற்றல், சமூக சிந்தனை, உடல் நலம் மற்றும் வளர்ச்சி, திறனாய்வு, படைப்பாற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் போன்றவற்றை ஊக்குவிக்கிறது. பொதுவாக, இக்கல்விக்கொள்கை மாணவர்களை 21ம் நூற்றாண்டுக்குத் தயார் செய்கிறது.
மாணவர்க்கு மிகவும் நெகிழ்வான கற்றல் நெறிகளை இக்கல்விக்கொள்கை வழங்குகிறது. அவர் தம் விருப்பங்கள், ஆர்வம், தொழிற் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாடங்களைத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்கிறது. மாணவர்களின் தனித்திறனை ஊக்குவித்து, அவர்கள் தமது ஆர்வம் எதில் உள்ளது என்பதை ஆராய்ந்து, அதற்கான துறையைத் தேர்ந்து எடுக்கவும், அத்துறைகளில் தங்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது பாடத்திட்டத்தின் சுமையைக் குறைப்பதின் மூலம் அத்தியாவசியமான கற்றல் திறன் மற்றும் அதன் பயன்களை வலியுறுத்துகிறது. பாடச்சுமை குறைவதினால் பாடங்களை ஆழ்ந்து படிக்கவும் சரியாகப் புரிந்து கொள்ளவும் உதவுவது அன்றி கற்றல் அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சியுடையதாக ஆக்குகிறது.
21ம் நூற்றாண்டின் திறன்களான திறனாய்வு, தகவல் தொடர்பு, சிக்கல்களுக்கு தீர்வு போன்றவற்றை வளர்க்கவும் மேம்படுத்தவும் இக்கல்விக்கொள்கை மாணவர்களைத் தயார் செய்கிறது. கல்வியில் தொழில் நுட்பத்தை ஒருங்கிணைத்தல், புதுமையான கற்றல் முறைகளை ஊக்குவித்தல், மெய்நிகர் ஆய்வகங்கள் மூலம் சிறந்த திறன்களை வளர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. டிஜிட்டல் கற்றல் முறை மூலம் மாணவர் தம் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் தம் அறிவையும் திறனையும் மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இத்தகையத் திறன்கள் அவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும் அவர்களை எதிர்காலச் சவால்களுக்குத் தயார் செய்கிறது.
இக்கல்விக் கொள்கையானது எல்லோரையும் உள்ளடக்கியதாக, எல்லோருக்கும் சம வாய்ப்பை வழங்குவதாக உள்ளது. பாலின வேறுபாடு, மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை சமூகங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு மாணவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்கிறது. இதற்கான நிதியாதாரங்கள், சிறப்புக் கல்வி மண்டலங்கள், இடை நிற்றல் விகிதங்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் எந்தக் குழந்தையும் பின் தங்கி விடக் கூடாது என்பது இக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சமாகும். சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை பிரதான கல்வி முறைக்கு கொண்டு வருவதை இக் கல்விக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் என்பதான உள்ளடக்கிய கல்வியை (inclusive education) வழங்க வாய்ப்பளிக்கிறது. மாணவர்க்கு சிறப்பான கற்றல் சூழலை உருவாக்கி அவர்களிடையே அன்பு, பரிவு மற்றும் புரிதலை வளர்க்கிறது.
தேசியக் கல்விக் கொள்கை ஆரம்ப நிலையில் இருந்தே தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அத்தியாவசியமான திறன்களை மாணவர்க்கு பள்ளிக் கல்வியிலேயே வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறது. மாணவர் பட்டம் பெறும் போது வேலைக்கான முழுத்திறன் உள்ளதை இது உறுதி செய்யும். இதன் மூலம் வேலையின்மை தீரும். புதிதாக மாற்றப்பட்டுள்ள பள்ளிக் கல்வி அமைப்பு முறை மாணவரின் பலவகைத் தேர்வுகளின் அழுத்தத்தைக் குறைத்து, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கற்றல் மீது அவர்களின் கவனத்தை திருப்பும்.
பாரம்பரியமாக நமது கல்வி முறையில் உள்ள அறிவியல், வணிகம், மனித வளம் போன்ற துறைகளுக்கு அப்பால் மாறுபட்ட பல்வேறு துறைகளை இக் கல்விக் கொள்கை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின் பொழுது போக்குகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் துறைகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது. மேலும் கல்வியைச் சர்வதேச மயமாக்கி சர்வ தேச ஒத்துழைப்பினை வேண்டுகிறது. உலகளவில் இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு நம் மாணவர்களை தயார் செய்கிறது. இதன் மூலம் நம் மாணவர் வெளி நாடுகளில் படிக்கவும் வெளிநாட்டவர் நம் கல்வி நிலையங்களில் கல்வி பயிலவும் இக் கொள்கை திட்டமிடுகிறது.
புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் ஒரு பாடத்தில் முதல் வருடம் அல்லது இரண்டாம் வருடத்தின் முடிவில் சான்றிதழ் பெறலாம். இந்த விதிகள் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் மற்றும் படிப்பைப் பொறுத்து மாறுபடும். தேவையான பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று முதல் அல்லது இரண்டாம் ஆண்டை வெற்றிகரமாக முடித்தால் அதற்கான சான்றிதழ் அல்லது சமமான அங்கீகாரம் கிடைக்கும். அது பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகக் கருதப்படும். இதன் மூலம் மாணவர் வேலையில் சேரலாம். இந்த அணுகுமுறை பல நன்மைகளை வழங்குகிறது. மாணவர்கள் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக் கொள்வது மற்றும் முழு பட்டப்படிப்பில் ஈடுபடாமல் குறிப்பிட்ட திறன்கள் மற்றும் தகுதிகளை பெறமுடியும். இது மாணவர்கள் பல்வேறு நிலைகளில் கல்வித் திட்டங்களில் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கிறது.
வலுவான ஆராய்ச்சிக்கான சூழலை வளர்க்கும் தேசிய அறக்கட்டளையை அமைக்க இக் கல்விக் கொள்கை முன்மொழிகிறது. இதன் மூலம் நம் மாணவர்கள் தம் உயர்கல்வியில் வலுவான ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க முடியும். உலகளாவிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை அவர்கள் உருவாக்க முடியும். சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்பு உள்ளதால் நாம் உலகளாவிய தளங்களை அணுக முடியும். இது நம் மாணவர்களின் கல்வி அனுபவம் மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்தை மேம்படுத்தும்.
தேசியக் கல்விக் கொள்கை நாடு முழுவதும் செயல் படுத்தப் படுவதால் மாணவர் வளர்ச்சியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது. நம் மாணவர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றவும், நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயனளிக்கவும் இது உதவும். பாரதத்தின் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய இக்கல்விக் கொள்கை மிகவும் அவசியமாகும்.