“கல்வித் துறையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பணியாற்றி வரும் வித்யா பாரதி அமைப்பினர் பாராட்டுக்குரியவர்கள். 21,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆசிரிய சகோதர சகோதரிகள் கற்பிக்க, சுமார் 30 லட்சத்து 60 ஆயிரம் மாணவச் செல்வங்கள் பயின்று வருகின்றனர். வித்யா பாரதியின் பள்ளிகளில் எந்த நிலையில் பணியாற்றுபவரும் ஏதோ தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக, சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்பவர்கள் இல்லை. அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வியுடன் உயர் நெறிகளையும் நன்னடத்தையையும் வாழ்ந்து காட்டுகின்றனர். இவற்றை கண் எதிரே காணும் மாணவ மாணவியரும் ‘படித்து முடித்து வருங்காலத்தில் ‘நாட்டின் முன்னேற்றத்திற்கு என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும்’ என்ற சங்கல்பத்துடன் வெளியே வருகிறார்கள். அவ்விதமே அவர்களும் நம் நாட்டின் உள்ளேயும் வெளிநாடுகளிலும் அவரவர் துறையில் நல்ல விளைவுகளை உண்டாக்குகின்றனர்” என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் பீஹாரின் சுபோல் மாவட்டத்தின் வீர்பூர் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் கூறினார். பாரதம் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து விஸ்வ குருவாய் விளங்க வேண்டும் என்ற ஆர். எஸ். எஸ் லட்சியத்தை நிறைவேற்றும் விதமாய் வருகின்ற தலைமுறையை உருவாக்கும் சகோதர அமைப்பு வித்யா பாரதி.
“இத்தகைய சாதனைகளை நம்மவர்களால் நிகழ்த்த முடிகிறது என்றால் அதற்கு பாரத மக்கள் அளித்து வரும் மனப்பூர்வமான ஆதரவே முதற் காரணம். நம்முடைய அணுகுமுறையால், செயல்களால், பயன்களால் கவரப் பட்ட பொதுமக்களில் ஒருவர் சிரத்தை எடுத்துக் கொண்டு ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபைக்கு ஒரு கடிதம் எழுதினார்:
‘நீங்கள் பல தொண்டு ஸ்தாபனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறீர்கள். கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் வித்யா பாரதி அமைப்பினை தாங்கள் கவனத்திற் கொள்ளலாமே?” என்று சில புள்ளி விவரங்களையும் அந்த கடிதத்தில் அந்த நல்ல மனிதர் குறிப்பிட்டிருந்தார். ஐ நா சபையினரும் தங்களுக்கே உரிய முறையில் களத்தில் விவரங்களைத் திரட்டி பரிசீலித்து அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டது மிகவும் ஆச்சரியமானது. ‘வித்யா பாரதி அமைப்பு 20 பில்லியன் குழாமில் சேரத் தகுதி வாய்ந்தது மட்டுமல்ல அந்த குழாமில் முதன்மையான இடத்தை வகிக்கவும் கூடும்’ என்பது அவர்கள் கணிப்பு. அது என்ன பில்லியன் குழாம்? (பெட்டிச் செய்தி காண்க). தமிழில்: கிருஷ்ணா