தேசபக்தியால் ஒன்றுபட்டோம், தேசம் வாகை சூடியது!

தேசம் என ஒன்று இருந்தால் அதற்கு எதிரிகளிடமிருந்து அச்சுறுத்தலும் இருந்தே தீரும். எல்லையில் பதற்றம் நிலவும். அவ்வப்போது பேச்சுவார்த்தை மூலம், சமரச உடன்படிக்கை மூலம் அமைதி ஏற்படுத்த வழிவகை செய்யப்படும். அதையும் மீறி போர் மேகம் சூழ்ந்தால்? வேறு வழியில்லை. போர்க்களத்தில் குதித்தே ஆகவேண்டும்.

எந்தப் போரிலும் நேரிடையாக பொதுமக்கள் பங்கேற்றதில்லை. அதிகபட்சமாக நம் பங்கு நிதி திரட்டுவதோடு நின்றது. மற்றபடி போர் என்பது ஆயுதங்களுடன் ராணுவ வீரர்கள் மட்டும் பங்கேற்ற நிகழ்வு என்பதோடு நின்றுவிட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ இதிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, எப்படி பொதுமக்களும் போரில் பங்கேற்கின்றனர் என்றெல்லாம் கூர்ந்து கவனித்து  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் விவரித்துள்ளார் எழுத்தாளர் அனுராதா கோயல்.

தேசபக்தியை பறைசாற்றும் விதமாக, ஓரணியில் பாரதியர்கள் அனைவரும் நின்று தேச சேவையில் ஈடுபட்டு வருகிறோம் என்பதை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படியென்ன செய்துவிட்டோம் நாம்?

எதிரி  ட்ரோன்கள் எல்லை நெடுக நமது நகரங்களை குறி வைத்து நெருங்கிய போது தேசத்தின் தென்பகுதி மக்கள்  “எல்லையோர மக்கள் என்ன பாடுபடுகிறார்களோ” என்று கவலை தெரிவிக்க, வடகோடி மக்கள்  நம்மைப் பார்த்து, “நீங்கள்  நம் அனைவருக்குமாக பாரத கலாச்சாரத்தை காப்பாற்றி  வருகிறீர்கள்;  நாங்கள் எல்லையோரம் வசிப்பது எதிரியை ஒரு கை பார்ப்பதற்காக” என்று அன்புடன் பதில் மரியாதை செய்தார்கள்.  தேசம் யுத்த சூழலை எதிர்கொண்ட தருணத்தில்  இத்தகைய தேசிய ஒருமைப்பாட்டு சூழல்   உருவாக நாம் என்ன தவம் செய்தோமோ?

தொடக்கத்தில்  எதிரி பரப்பிவிட்ட பொய் தகவல்களின் வீரியம் பாரதத்தை பலவீனப்
படுத்தி வந்தது. என்ன பொய்யை பரப்புகிறான் எதிரி என்று எப்படித் தெரிந்துகொள்வது? என்ன செய்வது? யோசித்தனர் நம் இளைஞர்கள்.

இங்கு தடைசெய்யப்பட்ட செயலிகள் அவை என்பதால் சமூக வலைதளத்தில் பிரபலமான இளைஞர்கள் சிலர் வெளிநாடு வாழ் பாரதியரைத் தொடர்புகொண்டு நம் எதிரி பரப்பும் பொய் தகவல்களைத் தெரிந்துகொண்டனர். பிறகு சுறுசுறுப்பாக இயங்கி சாட்டிலைட் படங்களை  தரவேற்றி ஒவ்வொரு பொய்யையும் உடைத்து நொறுக்கினர், உண்மை நிலையை உலகறியச் செய்தனர்.

ராணுவத்துக்கு உடனடியாக ஆட்கள் தேவை என்ற செய்தியறிந்து உத்வேகத்துடன், தன்னார்வத்துடன் எத்தனையெத்தனை இளைஞர்கள் சண்டிகர் நோக்கிப் படையெடுத்தனர்!  ஒவ்வொருவரும் பேசும்போது தெரிந்த உள்ளப் பூரிப்பும், எழுச்சியும் நம்மையும் தொற்றிக்கொள்ள வில்லையா? இதைவிடவா தேசபக்தியைக் காட்டிவிட முடியும்! இது மட்டுமல்ல. நம் இளைஞர் சக்தியின் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களில் அதி நவீன ராணுவ தளவாடங்கள் தயாராகி வருவதென்பதும் நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம் .

மொத்தத்தில் இந்த போர் சூழல் நம் ஒற்றுமையின் பலத்தை, நமது தேசபக்தியை உலகுக்கு உணர்த்துவதோடு நமக்கும் கூட அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

இதற்கு காரணமான இளைஞர் சக்தியை நாம் கொண்டாட வேண்டாமா!

இளைய பாரதத்தினாய் வா வா வா

எதிரிலா வலத்தினாய் வா வா வா!!!