தேசத் துரோகிகளுக்கு இடமில்லை தேசபக்தியுள்ள மாணவர்களின் தெம்பு!

லைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இதுநாள் வரை இடதுசாரி சிந்தனையாளர்களின் கூடாரமாகவும் தேசம், தேசியத்திற்கு எதிரான கருத்துகளை விதைப்பதில் முன்னணி மையமாகவும் இருந்துள்ளது. சமீப காலமாக தங்கள் வேர்களை இழந்து வரும் நக்ஸல் அமைப்புகள், பயங்கரவாத பின்னணியை கொண்ட பல அமைப்புகள் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் உலா வந்துள்ளனர். இதுநாள் வரை காங்கிரஸ், கம்யூனிச கட்சிகளின் ஆதரவாளர்கள் இங்கு பேராசிரியர்களாவும் ஆராய்ச்சி மாணவர்களாகவும் பெருமளவில் கொட்டமடித்து வந்த நிலையை, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி தகர்த்தெறிந்தது. ஜே.என்.யூ. மாணவர் பேரவை தேர்தலில் ஏபிவிபியின் சார்பாக போட்டியிட்டவர் இணைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்ற தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி அப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி தூக்கு தண்டனை வழங்கி அது நிறைவேற்றப்பட்டது. ஒரு பயங்கரவாதியை தியாகி போல் சித்தரித்து – ஜவஹர்லால் நேரு பல்கலையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் அரசை விமர்சித்தும் அப்சல் குருவிற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பல்கலை கழக வளாகத்தினுள் அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்ச்சியை – அதனை மீறி நடத்தியதுடன் பயங்கரவாதத்திற்கு துணை நின்ற அப்சல் குரு ஆதரவு கோஷங்களை எழுப்பியவர்களை கண்டித்து ஏபிவிபி குரல் எழுப்பியதை தொடர்ந்து அங்கு மோதல் சூழல் ஏற்பட்டது.abvb-jnu

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் கண்டித்து ஏபிவிபி மாணவர்கள் கண்டன பேரணி நடத்தினர். இதன் விளைவாகவும் பாஜக எம்பி மகேஷ் கிரி புகாரின் பேரில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்னையா குமார் தேசவிரோத சட்டப் பிரிவில் கைது செய்யப்பட்டார். போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த இடைக்கால அறிக்கையின் படி, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 8 மாணவர்களுக்கு தற்காலிக தடை விதித்தது. பல்கலை கழக நிர்வாகம். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவின் மகள் அபராஜிதாவும் அடக்கம்.

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வரும் தீவிரவாத கும்பலை சார்ந்த சிலர், குறிப்பாக உமர் காலித் என்ற ஆராய்ச்சி மாணவரும் பனோஜ்ஸ்தான லாஹிரி என்ற பேராசிரியரும் நக்ஸலைட் மாணவர் அமைப்பான டிஎஸ்யூவின் துணையுடன் கடந்த 2010 முதல் பல்வேறு – தேச விரோத நிகழ்ச்சிகளை ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடத்திவந்துள்ளனர். இவர்களுக்கு இதுவரை மாணவர் சங்கப் பொறுப்புகளில் இருந்த இடதுசாரிகள் ஆதரவு அளித்து மேலும், இடது சாரி சிந்தனையாளர்களின் அரசியல் களமாக நிகழ்ந்து வந்த இப்பல்கலை மாணவர்கள் அரசின் குறைபாடுகளை விமர்சிப்பது, அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பது போன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தி வந்தனர். உளவுத்துறை தகவல் தந்தபோதும் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முந்தைய காங்கிரஸ் அரசு தயங்கியது. காவல்துறை அத்தகைய நடவடிக்கை எடுத்தால் பெரும் மாணவர் போராட்டத்தை சந்திக்க வேண்டும் என்பதால் தயங்கி தயங்கி தள்ளிப்போட்டு வந்துள்ளது.

தற்போது தேசிய சிந்தனை மிக்க மாணவர்கள் – பேராசிரியர்கள் சிலர் அப்பல்கலையில் இடம் பெற்றதன் காரணமாக, தேசவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம். மாணவர் தலைவர் கைது! அதனை தொடர்ந்து அப்சல் குருவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய கூட்டத்தை ஏற்பாடு செய்த பேராசிரியர் எஸ்ஏஆர் கிலானியும் கைது என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் திட்டமிட்ட ரீதியில், வகுப்புவாதம், சாதிப் பிளவுகள், தேச விரோத செயல்களை செய்ய தூண்டுதல் போன்றவற்றை நடத்தி, மத்திய அரசுக்கு எதிரான ஒரு கருத்தை திணிக்க எதிர்கட்சிகள், நக்ஸல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதன் வெளிப்பாடே ரோஹித் வெமுலா தற்கொலை தேசிய செய்தியானது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது, பாஜக அரசு, ஏபிவிபியினர் என்ற பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. ஊடகங்கள் துணையுடன், இந்த தேசத்தில் மாணவர்களுக்கு பேச்சுரிமை இல்லை என்ற எண்ணத்தை விதைக்க முயன்றார்கள்.

மோடியின் நல்லாட்சி காரணமாக பாரதத்தில் ஏற்படும் வளர்ச்சி குறித்து மக்கள் அறியாதவண்ணம் அவர்களை திசை திருப்ப தொடர்ந்து இம்மாதிரியான தேச விரோத கூட்டங்களை நடத்தி அதன் மூலம் பத்திரிகையாளர்களை ஈர்த்து நாட்டில் சகிப்பு தன்மை இல்லை, பேச்சுரிமை இல்லை என்ற பொய் செய்திகளை பரப்புகின்றனர்.

தேச விரோதிகளுக்கு ஆதரவான செயல்பாடுகளையோ தேச விரோதம் சார்ந்த பேச்சுகளை பேச்சுரிமையாகவும் ஏற்றுக்கொள்வதையோ தேசம் ஏற்காது என்பதையே ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

(கட்டுரையாளர்

மாணவர் சக்தி மாத இதழ் ஆசிரியர்)