13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் உள்பட 40 பதக்கங்களை வென்றது இந்தியா.
- பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 11.80 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
- உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஜாஷ்னா 1.73 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
- ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷாரே 2.21 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் சேத்தன் பாலசுப்பிரமன்யா 2.16 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், வென்றனர்.
- 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் 3 நிமிடம் 54.18 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அஜீத் குமார் (3 நிமிடம் 57.18 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
- பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கவிதா யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் சண்டா வெள்ளிப்பதக்கமும், சித்ரா பாலாகீஸ் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
தடகள போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியது.
- துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 19 வயது இந்திய வீராங்கனையான மெகுலி கோஷ் 253.3 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 252.9 புள்ளிகள் குவித்ததே நடப்பு உலக சாதனையாக உள்ளது.
- இந்திய வீராங்கனைகள் ஸ்ரீயங்கா சடாங்கி (250.8 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், ஸ்ரேயா அகர்வால் (227.2 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
- தேக்வாண்டோ போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கமும், 3 வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
- டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அணி தங்கப்பதக்கத்தையும் வசப்படுத்தியது.
- கைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 20-25, 25-15, 25-17, 29-27 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது.
- பெண்கள் பிரிவின் இறுதிசுற்றில் இந்திய அணி 25-17, 23-25, 21-25, 25-20, 15-6 என்ற செட் கணக்கில் நேபாள அணியை வீர்த்தி தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தது.
கோகோ விளையாட்டில் இலங்கை ஆடவா், மகளிா் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.
நேபாளம் 23 தங்கம் உள்பட 44 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம் உள்பட 40 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.