பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற பாரத வீரர்கள் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது வீரர்கள் மத்தியில் பேசிய மோடி, “உங்களை சந்திப்பதில், நாட்டு மக்களை போல் நானும் பெருமைப்படுகிறேன். அனைவரையும் வரவேற்கிறேன். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், உங்களின் கடின உழைப்பும், சாதனையும் தேசத்திற்கு பெருமை அளிக்கிறது. பாரத விளையாட்டுகளின் பொற்காலம் தற்போது துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில், விளையாட்டு துறையில் பாரதம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளது. காமன்வெல்த்தில் பதக்கங்களை வென்றதுடன் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் பாரதம் நடத்தியுள்ளது. செஸ் போட்டியில் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி சிறப்பாக நாம் செயல்பட்டோம். செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த முறையை விட தற்போது, புதிதாக 4 விளையாட்டுகளில் வெற்றிக்கு வழிவகுத்துள்ளோம். அனைத்து விளையாட்டுகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் திறன் வெளிப்பட்டது. இதன் மூலம் விளையாட்டுத்துறையில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புதிய விளையாட்டுகளில் நமது திறமையை அதிகரிக்க வேண்டும்” என கூறி வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளித்தார்.