உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் கடந்த திங்கட்கிழமை துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது திட்டமிட்ட வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதன் விளைவாக இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பல்திராய் பகுதியில் பாரா பஜார் நகரில் தொடங்கிய அந்த ஊர்வலம், பாபா ஜங்கிலேநாத் மகாதேவ் கோயில் அருகே சென்றது. ஊர்வலம் மிக நீண்டதாக இருந்ததால், பக்தர்களின் வசதிக்காக அருகில் உள்ள மசூதியை ஊர்வலம் சுற்றி செல்ல தீர்மானிக்கப்பட்டது. ஊர்வலம் மசூதியை நெருங்கியபோது மசூதியில் இருந்து வெளியே வந்த சில முஸ்லிம்கள், ஊர்வலத்தில் பாடல்களை இசைப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தினர். அப்போது சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அந்த பகுதிக்கு வந்தனர். ஊர்வலத்தில் வந்த ஹிந்துக்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்தனர். அந்த வன்முறை கூட்டம் பல வாகனங்களையும் தீ வைத்து எரித்தது. காவல் துணைக் கண்காணிப்பாளர் அமரேந்திர பிரசாத் சிங் தலைமையில் உடனடியாக அங்கு வந்த காவலர்கள் இந்த வன்முறையை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஊர்வலத்தை சீர்குலைக்க சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் நபர்கள் அங்கு கூடி வன்முறையை நிகழ்த்தியது, இது தற்செயலானதல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை உணர்த்துகிறது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். காவல்துறை தற்போது இதனை விசாரித்து வருகிறது.