துபாயில் முதல் தனித்துவமான ஹிந்து கோயில், விஜயதசமியை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துபாய் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கெளரவ விருந்தினராக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான பாரதத் தூதர் சுஞ்சய் சுதிர் கலந்துகொண்டார். எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களுக்காக கோயில் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெபல் அலியில் உள்ள வழிபாட்டு கிராமத்தில் உள்ள குருநானக் தர்பார் குருத்வாரா மற்றும் பல தேவாலயங்களுக்கு மத்தியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஹிந்துக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 2020ம் ஆண்டு கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலில் விநாயகர், கிருஷ்ணர், சிவன் உட்பட 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இது அலங்கரிக்கப்பட்ட தூண்களுடன் முகப்பில் ஹிந்து மற்றும் அரபு வடிவியல் வடிவமைப்புகள் மற்றும் கூரையில் மணிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பும் கோயிலில் நிறுவப்பட்டுள்ளது. பிரதான மண்டபத்தில் மையக் குவிமாடத்தில் 3டி அச்சிடப்பட்ட அழகிய இளஞ்சிவப்பு தாமரை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எந்த நாளிலும் 1,200 பக்தர்கள் வரை தங்க முடியும். பக்தர்களுக்கு தரிசனத்தை எளிதாக்கும் வகையில், கோயிலின் ஆன்லைன் தளங்களில் கியு.ஆர் கோடு அடிப்படையிலான பதிவு மற்றும் தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.