தலைநகர் டெல்லியில் சாலையோர சிற்றுண்டி கடையை கவனித்து வரும் 10 வயது சிறுவன் ஜஸ்ப்ரீத்தின் பின்புலம் குறித்து விளக்கும் வீடியோ நெட்டிசன்கள் பலரையும் நெகிழ செய்துள்ளது. இந்த வீடியோ தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றுள்ளது.
டெல்லியின் திலக் நகர் பகுதியில் கோதுமை ரோல் தயார் செய்யும் சிற்றுண்டி கடையை கவனித்து வருகிறார் ஜஸ்ப்ரீத். அவருக்கு துணையாக அவரின் சகோதரி உள்ளார். மாமாவின் அரவணைப்பில் இந்த பணியை அவர் கவனித்து வருகிறார்.
தந்தையின் மறைவுக்கு பிறகு இந்தக் கடையை கவனித்து வருவதாக ஜஸ்ப்ரீத் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அவரது அம்மா பஞ்சாப் மாநிலத்தில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். முகத்தில் புன்னகையுடன் வாழ்வில் தனது சவாலை அவர் எதிர்கொண்டு வருகிறார். அது நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. இணைய வெளியில் தினந்தோறும் லட்ச கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் அமைந்துள்ளது இது.
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்: “துணிவின் பெயர் ஜஸ்ப்ரீத். அவரது கல்வி எந்த வகையிலும் பாதிக்க கூடாது. அவர் டெல்லியின் திலக் நகரில் இருக்கிறார் என நம்புகிறேன். அவரது தொடர்பு எண்ணை யாரேனும் கொண்டிருந்தால் பகிரவும். அவரது கல்விக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து மஹிந்திரா அறக்கட்டளை குழு முயற்சிக்கும்” என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.