மெட்ரோ ரயில் நிலையத்திற்கான நிறுத்துமிடத்திற்காக கடந்த பாஜக ஆட்சியில் அரே காலனியில் இடம் ஒதுக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் தூண்டுதலால் அது பிரச்சனையாகியது.
நீதிமன்ற ஒப்புதலுக்கு பிறகு அவை சரி செய்யப்பட்டு கட்டுமானங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கிடையே சிவசேனா கூட்டணி ஆட்சியமைத்தது.
அதன் முதல்வர் உத்தவ் தாக்கரே, தற்போது அந்த நிறுத்துமிடத்தை அரேவில் இருந்து கஞ்சூர் மார்கிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளார். இதற்கு ஏற்கனவே செய்த கட்டுமானங்களும் வீண், 4000 கோடி அதிக செலவாகும்.
ஒரு ரயில் நிலையத்திற்கு தேவையான நிறுத்துமிடத்திற்கு பதில், அங்கு ஒரு விமான நிலையத்திற்கு தேவையான நிறுத்துமிடத்தை அமைப்பதை ஒத்தது இந்த முடிவு. தமிழகத்தில், திமுக புதிய தலைமைச்செயலகம் கட்டியது. அதில் சில பிரச்சனைகள் உள்ளன என்றாலும், அது திமுக கட்டியது என்பதால் அதை மருத்துவமனையாக்கினார் ஜெயலலிதா.
தற்போது நமக்கு ஒரு நல்ல தலைமைச்செயலகம் இல்லை, தரமான மருத்துவமனையும் அமையவில்லை. ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக்கினார் என்பதற்காக, ஜகன்மோகன் ரெட்டி விசாகபட்டிணம், கர்நூலை இணைத்து மூன்று தலைநகரங்களாக்கியுள்ளார்.
இந்த மோசமான மனப்பான்மை அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பல மட்டத்திலும் உள்ளது. தங்களின் சுயலாபம், சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக நடத்தப்படும் இந்த பழிவாங்கும் அரசியலில், அரசியல்வாதிகள் பலனடைகிறார்களே தவிர, பாதிக்கப்படுவதில்லை.
ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை, வரிப்பணம் எல்லாம் வீணாகிறது. இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?