பாலிவுட் இயக்குனர் சுதிப்தா சென் இயக்கத்தில் பாரதம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’ குறித்து கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “பயங்ரவாதிகளின் சதி வேலைகளை தோலுரித்துக் காட்டும் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி சினிமா அமைந்திருக்கிறது. பயங்கரவாதிகள் குறித்த உண்மையை எடுத்துக் கூறும் அருமையான திரைப்படம் இது. இப்படத்தைத்தான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் எந்தவொரு படத்தையும் காங்கிரஸ் எதிர்க்கும். வெறும் ஓட்டுக்காக பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் மண்டியிட்டு வருகிறது. பயங்கரவாதத்தாலும், வன்முறையாலும் இந்தியா நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், வாக்கு வங்கிக்காக இதை தடுக்கக் கூட காங்கிரஸ் முன்வரவில்லை. பயங்கரவாதத்தில் இருந்து இந்நாட்டைக் கூட பாதுகாக்க முடியாத காங்கிரஸா, கர்நாடகாவை காக்கப் போகிறது?” என்று கூறினார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நாளின் தொடக்கத்தில் இதை விட வேறு என்ன எங்களுக்கு வேண்டும்? கேரள உயர்நீதிமன்றம் ஒரு அழகான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் பிரதமர் மோடி எங்கள் படம் குறித்து பேசியது மட்டுமின்றி, நாங்கள் படம் முழுக்க அடிக்கோடிட்டு காட்ட விரும்பிய விஷயத்தையே அவரும் பேசியுள்ளார். இப்படம் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான படம் மட்டுமே. இது எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ தவறாக சித்தரிக்கவில்லை. எங்களது இந்த நிலைப்பாட்டை பிரதமரும் நிருபித்திருக்கிறார். எங்களை குறிவைத்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பே பதிலாக அமைந்துள்ளது” என கூறியுள்ளார்.