தாயினும் மேலான தோழியே! உனது சிறப்புத் தன்மைகளில் இந்தத் தூக்கமும் ஒன்று போல. “தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன்” என்றும் மிகுந்த புகழ் உடையவன் என்றும் சிவனுக்குரிய சின்னங்களான திருநீறு போன்றவற்றை அணிந்தவர்களைக் கண்டாலோ, ஆலயத்தில் ஊதப்படும் கொம்பின் ஒளியைக் கேட்ட மாத்திரத்திலோ ‘சிவ சிவ’ என்று பக்தியோடு விளிப்பாயே ! இறைவனை, “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று பாடும்போது, தீயில் பட்ட மெழுகு போல உருகி உணர்ச்சி வசப்படுவாயே, அந்தச் சிவன் “எனக்குரியவன், என் தலைவன், இனிய அமுதம் போன்றவன் “என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இவற்றையெல்லாம் கேட்டும் உறங்குகின்றாயே, காரணம் என்ன? பெண்களின் நெஞ்சம் இறுகிப் போனதாக இருக்கக் கூடாது. ஆனால் நீயோ, இவ்வளவு சொல்லியும் எழாமல் இருக்கிறாய். தூக்கத்தை பரிசாகக் கருதுகிறாயா எழுந்திரு எம்பாவாய், எனத் தோழியைக் கேட்பதாக மணிவாசகர் பாடுகிறார்.
“தேவர்களே ஆனாலும், ஊனும் உள்ளமும் உருகி உரைத்து வழிபட்டால் மட்டுமே எம்பெருமான் காணக் கிடைப்பான். அவ்வாறிருக்கையில் அவன் அருளாலே அவன் தாள் அடைய முயற்சி செய்யாது சோம்பிக் கிடப்பதால் ஏது பயன்?” என்கிறார் மாணிக்கவாசகர்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி