திருப்பரங்குன்றத்தில் முப்பது நாளும் மகாதீபமே!

நூறு ஆண்டுகளாக சட்டப்படி போராடி நீதிமன்ற தீர்ப்பு பெற்றும் ஹிந்துக்கள் பாரம்பரியமாக ஏற்றும் திருக்கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற விடாமல் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு ஹிந்துக்களின் உரிமைகளை காவு கொடுத்து, நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து, பாரத அரசியல் சாஸனத்தை கேள்விக்குறி ஆக்கி வருவது கண்டு சென்ற வாரம் தேசமே அதிர்ந்து போனது.

திருப்பரங்குன்றம் முருகன் தமிழகத்தில் உள்ள சாதாரண ஹிந்துக்களையும் சங்கிகளாக சங்கமிக்க வைத்து வருகிறார் என்பதுதான் கண்கூடான பலன். இங்கே சற்றே வரலாறு:

சிக்கந்தர் என்ற வந்தேறி முகலாய படையெடுப்பாளன் மதுரையை ஆண்ட பாண்டிய தமிழ் மன்னனோடு போராடி தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

அந்த சிக்கந்தரின் சமாதி தற்போது மதுரை கோரிபாளையம் அருகில் உள்ள ஒரு தர்காவில் புதைக்கப்பட்டுள்ளது இதனை தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஆவணங்களே மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சில குழப்பங்களை பயன்படுத்தி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷாவின் சமாதி இருப்பதாக கூறி முஸ்லிம்களின் சிறு பிரிவினர் ஒரு தர்காவை கட்டினர்.

இதனை எதிர்த்து திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் பிரிட்டிஷ் ஆட்சியில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை முடிவில் 1923 ஆகஸ்ட் 23ம்தேதி திருப்பரங்குன்றம் மலை திருக்கோயிலுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் 1926ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முஸ்லிம்களின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக 1930ல் லண்டன் ப்ரீவிகவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது. லார்ட் அட்கின்சன், லார்ட் தாங்கர்டன், லண்டன் ப்ரீவிகவுன்சில் இந்தத் மேல்முறையீட்டை விசாரித்து 1931 மே மாதம் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில் மதுரை கீழமை விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கே சொந்தமானது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

பல நூறாண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஹிந்துக்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தனர். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் 1940களின் தொடக்கத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீப திருவிழாவின் போது தீபமேற்றும் பழங்கால வழிபாடு தடை செய்யப்பட்டது.

இதனால், மலையின் மேல் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய சமூகத்தினர் பட்ஜம் கட்டி, தர்காவை விரிவாக்கினர். அவர்கள் திருப்பரங்குன்றம் மலையை “சிக்கந்தர் மலை” என்று அழைத்து, உச்சியில் இஸ்லாமிய பச்சை பிறை கொடிகளை ஏற்றினர்.

அதை தடுக்கும் பொருட்டு களத்தில் அறவழிப் போராட்டத்தை கையில் எடுத்தது திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன கருப்பதேவர் அவர்கள்.

அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பறக்கவிட்ட அந்த பச்சை நிற கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக, மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றினர்.

நாடு விடுதலையடைந்த சில வருடங்களில் ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் ஆலயங்கள் சென்றது. அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் காலங்கடத்தி வந்தது.

ஹிந்து முன்னணியின் இரண்டாவது மாநிலத் தலைவர் மதுரை வழக்கறிஞர் ராஜகோபால் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை துவக்கினார். மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி 1993ல் பழமுதிர்சோலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற போது அமரர் ராஜகோபால் தலைமையில் சுமார் 50 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை மக்கள் எழுச்சி போராட்டமாக கொண்டு சென்றவர் அமரர் ராஜகோபால் அவர்கள்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் 10.10.1994ல் மதுரையில் வழக்கறிஞர் ராஜகோபாலனை வெட்டிப் படுகொலை செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என 1996 இல் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என 1996 முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தின் போது முருக பக்தர்களை திரட்டி வீரத்துறவி ராமகோபாலன்ஜி தலைமையில் ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தி வந்தது.

இந்த நிலையில் 2024 டிசம்பர் மாதம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா நிர்வாகம் சார்பில் கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளதாக புதியதாக அறிவிப்பு பலகை வைத்தது.

ஆனால் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்கள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி கொடுக்கப் போவதாக ஆடு, கோழிகளை பலியிட போவதாக கொண்டு சென்றனர்.

திருச்சி மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல் சமது என்பவர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று சிக்கந்தர் மலை என பேட்டி அளித்து பிரச்சினையை வேண்டுமென்றே பெரிதாக்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி மலையில் உள்ள தர்காவை பார்வையிட போவதாக கூறி அவருடன் சென்றவர்கள் மலை உச்சியில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டனர். இது தமிழக முழுவதும் ஹிந்துக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

குன்றம் காப்போம் என்ற தலைப்பில் ஹிந்து முன்னணி பிப்ரவரி மாதம் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது தமிழகம் முழுவதும் உள்ள ஹிந்து முன்னணி, ஆர் எஸ் எஸ், பாஜக அமைப்பைச் சார்ந்தவர்கள் முருக பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் மதுரைக்கு வருவதை தடுத்து வீட்டிலேயே கைது செய்யப்பட்டனர்.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடத்தலாம் என ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மாலை 4 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையிலும் கூட தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே பழங்காநத்தம் பகுதியில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் ஹிந்துக்கள் அணிதிரண்டு போராட்டம் நடத்தியது பாரதத்தையே திரும்பி பார்க்க வைத்தது.

அதன் பின்பு இந்து முன்னணி சார்பில் ஜூன் மாதம் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அறுபடை வீடு அருட்காட்சியும் நடைபெற்றது சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொடர்பாக தர்கா நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் நீதியரசர்கள் நிஷா பானு நிதியரசர் ஸ்ரீமதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது நீதிபதி ஸ்ரீமதி திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கினார் அதற்கு முரண்பட்டு நீதி அரசர் நிஷா பானு தீர்ப்பளித்தார் இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மூன்றாவது நீதிபதி நீதியரசர் வேல்முருகன் 2025 அக்டோபர் 10 அன்று திருப்பரங்குன்றம் மலை கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கினார்.

பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் மலை திருக்கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்பது உறுதியானது. அன்றைய தினம் ராஜகோபால் அவர்களின் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் மலை உச்சியில் நேரடியாக சென்று ஆய்வு செய்து தீபத்தூணை பார்வையிட்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கடந்த வாரம் தீர்ப்பு வழங்கினார் பல நூறு ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதால் திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர்.

ஆனால் திருக்கோயிலுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து ஹிந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் நிர்வாகமே மேல் முறையீடு செய்தது முருக பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹிந்து விரோத நாத்திக திமுக அரசின் பிடியில் ஆலயங்கள் இருப்பதால் ஹிந்துக்களின் உரிமையை அரசு நசுக்கத் தொடங்கியது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை சிறிதும் மதிக்காமல் தமிழக அரசின் கலெக்டரும், மாவட்ட காவல் ஆணையரும், மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தனர். வழக்கு தொடுத்தவர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என மீண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஊர்ஜிதம் செய்த போதும் தமிழக அரசு காவல்துறையை ஏவி 144 தடை உத்தரவு பிறப்பித்து தீபம் ஏற்றுவதை தடுத்தது.

ஹிந்து சமய அறநிலையத்துறை தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து செய்த மேல்முறையீடு நீதியரசர்கள் ஜி.ஜெயச்சந்திரன் கே.கே. ராமச்சந்திரன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது இரு நீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்த பின்பும் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மலை உச்சியில் தீபம் ஏற்றச் சென்ற வழக்கு தொடுத்தவர்கள் உள்ளிட்ட பலரையும் கைது செய்தது.

நூறு ஆண்டுகளாக சட்டப்படி போராடி நீதிமன்ற தீர்ப்பு பெற்றும் ஹிந்துக்கள் பாரம்பரியமாக ஏற்றும் திருக்கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற விடாமல் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு ஹிந்துக்களின் உரிமைகளை காவு கொடுத்து, நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து, பாரத அரசியல் சாஸனத்தை கேள்விக்குறி ஆக்கி வருவது கண்டு சென்ற வாரம் தேசமே அதிர்ந்து போனது. வரும் டிசம்பர் 12 வெள்ளிக்கிழமைக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்ததால் ஹிந்துக்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கட்டுரையாளர்:கா.குற்றாலநாதன்

வழக்கறிஞர், ஹிந்து முன்னணி மாநில செயலர்