திருப்பதி என்றாலே பெருமாளும், லட்டு பிரசாதமும்தான் உடனே கவனத்துக்கு வரும். அப்படி உலக பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து விட்டதாகவும், சுவைமற்றும் அளவு முன்பைப் போல்இல்லையெனவும் தொலைபேசிமூலம் குறை கேட்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருமலையில் உள்ள வைபவ உற்சவ மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீண்ட காலமாக, பரம்பரை பரம்பரையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மடப்பள்ளியில் லட்டு பிரசாதம் தயாரித்துவரும் ‘வைஷ்ணவ பிராமணர்கள்’ அனைவரும் பங்கேற்றனர். அப்போது, லட்டின் தரம், சுவை,அளவு குறைந்ததாக பக்தர்கள் கூறும் புகார்கள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால், பல நூற்றாண்டுகளாக திருப்பதி லட்டுவின் சுவையும், தரமும் குறைய வாய்ப்பே இல்லை என்றும், அதற்காக முன்னோர்கள் வகுத்த ‘திட்டம்’ எனும் அளவின்படியே, இன்று வரை திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வைஷ்ணவ பிராமணர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
‘திட்டம்’ என்பது அளவாகும். சுமார் 5 ஆயிரம் லட்டு தயாரிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இன்று வரை கடலை மாவு, சர்க்கரை, எண்ணெய், நெய், முந்திரி, உலர் திராட்சை, கற்கண்டு, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்றவை சேர்க்கப்பட்டு, லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இதில் எடையும் கூட குறைய வாய்ப்பில்லை என மடப்பள்ளி வைஷ்ணவ பிராமணர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏழுமலையான் கோயில் இணை அதிகாரி லோகநாதம், பேஷ்கர் ஹரி, மடப்பள்ளி பேஷ்கர் நிவாசுலு ஆகியோர் பங்கேற்றனர்.