திருப்பணிகள் நிறைவின்றி திருக்குடமுழுக்கு

தென்காசி – பெயரிலேயே தெரியும் புனிதம். சட்டப் புத்தகத்தை மேற்கோளிட்டு தீர்ப்பு வழங்கும் ஒரு நீதிபதியின் வாக்கில் இருந்து, பாவ புண்ணியக் கணக்குகளைச் சொல்லும் கர்ம வினைக் கோட்பாட்டு வாக்கியங்கள் வருகிறதென்றால், அதற்கும் தென்காசியே வித்திட்டிருக்கிறது!

மதுரையில் கோலோச்சிய பாண்டியர்கள், பின்னாளில் தென்காசிப் பாண்டியர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தென்காசி, சரித்திரத்தின் ஏடுகளில் சிறப்பிடம் பெற்றது. அதற்குக் காரணமானவர் மன்னர் பராக்கிரம பாண்டியர். எம் மண்டலமும் கொண்டருளிய  பொன்னி பெருமான் மானகவசன் அரிகேசரி தேவர் என்ற திருநாமமுடைய சடையவர்மன் பராக்கிரம பாண்டிய  மன்னர்  மணிமுடி சூட்டிக் கொண்டு செங்கோல் ஆட்சி செய்த தென்காசி நகர் என்பதே இதன் சிறப்பை விளக்கும்.

வடக்கே காசியில் அன்னியரால் தம் ஆலயம் சிதைவுற்றபோது, தெற்கே தமக்கென ஓர் ஆலயம் எழுப்புமாறு கனவில் கட்டளையிட்ட விஸ்வநாதப் பெருமானின் ஆணையை செயலாக்கிய பராக்கிரம பாண்டியன், பெரும் பாடுபட்டு ஓர் ஆலயம் அமைத்து, தென்காசி எனப் பெயரும் சூட்டினான்.  பொதுமக்களின் சிவ வழிபாட்டுக்காக பெரும் கோயிலெடுத்து, இந்தக் கோயிலைக் காப்போரைக் குவலயம் அறியப் பணிந்து வணங்குவதாய் கல்வெட்டிலும் அறிவித்தான்.

அவனது சிறப்பு வாய்ந்த ஒரு கல்வெட்டு வாசகம் இது… ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன்னாலயத்து வாராததோர் குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்து, அதனை நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன், பாரார் அறியப் பணிந்தேன் பாராக்ரம பாண்டியனே! பக்தர்களுக்காகத் தாம் வகுத்த இந்தக் கோயிலை பக்தர்களே பாதுகாக்க வேண்டும், அந்த பக்தனது பாதத்தை என் தலையில் நான் தாங்குவேன் – என்ற ஆலயத் திருப்பணிக் கருத்தை வலுவாய் நம் மனத்தில் பதியவைத்தவனின் கோயிலில்தான் இப்போது எத்தனை சர்ச்சைகள்! எத்தனை விதிமீறல்கள்!

தென்காசி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தேசித்து அதற்கான வேலைகளில் இறங்கியது அறநிலையத்துறை. அப்போதிருந்து சர்ச்சைகளும் தொடங்கிவிட்டன. கும்பாபிஷேகம் என்பதே நிதி முறைகேட்டுக்கும், அதிகாரத்தில் உள்ளோர் கொள்ளை அடித்தலுக்குமான வழிமுறை ஆகிவிட்ட நாத்திக அரசுகளின் ஆட்சியில், பராக்கிரம பாண்டியனின் திருப்பணி உள்ளத்தை உதாசீனப்படுத்தி, மராமத்துப் பணிகள் முறையாக முழுமையாகச் செய்யாமல், கலசங்களில் நீர் ஊற்றினால் போதும், அதுவே ‘குடமுழுக்கு’ என செயல்பட்டு வருகிறது அறநிலையத் துறை.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் என்பது பொதுவான வழிமுறை. ஆனால் இதற்கு ஆகம பிரமாணம் எதுவுமில்லை. கோயிலில் ஏதாவது பழுது ஏற்பட்டால் திருப்பணிகள் நடத்தி, அதன் பரிகாரமாக பூஜைகளைச் செய்து  கும்பாபிஷேகம் நடத்துவதுதான் வழிமுறை.

ஆனால், கும்பாபிஷேகத்தை  நடத்துவதற்காக திருப்பணி நடப்பது போல் கண்துடைப்பு நாடகம் நடத்தி, பக்தர்களிடம் இருந்து பெருமளவில் நிதியைப் பெற்று முறைகேட்டில் ஈடுபடுவதே இப்போது வழிமுறையாகி விட்டது! இதுதான் தென்காசியில் பிரச்சினை ஆனது. ஏப்ரல் 7ல் கும்பாபிஷேகம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலயத்தில் மிக முக்கியமாக ராஜகோபுரம் பழுது சீரமைக்கப்படாமல், வெறுமனே  பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டது. காற்றின் வீச்சையும் மழையின் வேகத்தையும் தாங்கிக் கொண்டு நிற்கும் கோபுரத்தில் பல இடங்களில் விரிசல், நீர் கசிதல். அதை  முழுமையாக சீரமைக்கவில்லை.

கோபுரத்தின் முதல் ஒன்பது நிலைகளில் மின் பணிகள் பழுது ஒப்புக்கு மேற்கொள்ளப்பட்டது. கோபுரத்தின் கனம் அதிகம் என்றும், அதைத் தாங்கும் வகையில் அடிமானம் இல்லை என்றும் நிபுணர் குழு கூறியது. அதற்கு ஈடாக, கோபுர துவார நிலைகளில்  உள்ள இரும்புக் கதவுகள், இரும்பு சட்டங்களுக்கு பதிலாக பித்தளை, ஸ்டீல் அல்லது கனம் குறைந்த உலோகத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. அதைச் செய்யவில்லை. கோபுரத்தில் பழுதான சுதை வேலைகள் செய்யப்படவில்லை. வெறும் வர்ணம் மட்டுமே பூசப்பட்டது.

அம்மன் சந்நிதி உட்புறம் பாவுகல் அமைத்து விரிசலை சரிசெய்ய கோரியும் செய்யப்படவில்லை. கோயில் மதில் பழுது பார்த்து சீரமைக்கப்படவில்லை. நவீன கட்டுமானங்களை அகற்ற நிபுணர் குழு கொடுத்த அறிக்கையை மதிக்கவில்லை. வெளி பிராகாரத்தில் மண் தோண்டி எடுக்கப்பட்டும் கருங்கல் தளம் அமைக்கப்படவில்லை. இப்படி இன்னும் சில பணிகள். எதுவும் மேற்கொள்ளப்படாமல் கும்பாபிஷேகம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் குரல் கொடுத்தனர்.

இவை எதுவும் செவிமடுக்கப் படாத நிலையில், சிலர் நீதிமன்றத்தை நாடினர்.  தென்காசியைச் சேர்ந்த சிவபாலசுப்பிரமணியன் பிப்.28ல் தாக்கல் செய்த தனிநபர் வழக்கு, மார்ச் 1ல் நம்பிராஜன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, இதில் சேர்த்துக் கொள்ளுமாறு தேவராஜன் பதிவு செய்த வழக்கு என மூன்றையும் சேர்த்து நீதிமன்ற அமர்வு விசாரித்தது. ஆவணங்களைப் பரிசீலித்துவிட்டு, திருப்பணிகள் நிறைவுறாமல் கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், மறுநாள் வேறு வழியின்றி தடையை நீக்கி தீர்ப்பு அளித்தது.

அப்போது ஒரு நீதிபதி சொன்னதுதான், இந்தக் கர்மக் கணக்கெல்லாம். கோயிலில் செய்யும் இந்தப் பாவம் எல்லாம் உங்களுக்குத்தான் சேரும் என்று நெஞ்சார சபித்தார். “அவர்கள் (கோயில் தரப்பினர்) திருப்பணிகளை முறையாக செய்யாமல் ஆகம விதிமீறல்கள் இருப்பின் அவரவர் செய்த பாபத்திற்கு அவரவர் தண்டனை அனுபவிப்பார்கள். கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்ளுவார்” என்று கூறி கும்பாபிஷேகத்துக்கான தடையை நீக்கியிருக்கிறது நீதிமன்றம்!
கும்பாபிஷேகத்தை தடை செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் மனுதாரர்கள் அணுகியிருக்கிறார்கள் என்று கோயில் தரப்பில் சொல்லப்பட்டபோது, “நீங்க செய்யிற எந்தக் கோயில்லயாவது முழுசா வேலைய முடிச்சி கும்பாபிஷேகம் பண்ணிருக்கீங்களா? எல்லா கோயில்லயுமே ஒரே கம்ப்ளைண்ட்ஸ்தான்!” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது! காரணம், கடந்த வருடம் இதே பகுதியில் உள்ள சங்கரன்கோயில் சங்கரநயினார் ஆலய கும்பாபிஷேகத்திலும் இதே பிரச்சினைகள் தான்.

அப்போது, கும்பாபிஷேகம் நடந்து ஆறு மாதத்துக்குள் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை!
திருநெல்வேலி ஆலய குடமுழுக்கின் போதும் இதே போல், கும்பாபிஷேக தேதியை மாற்றி வைத்து, திருப்பணிகளை நடத்தி முடித்துவிட்டு பிறகு வாருங்கள் என்று தருமபுரம் ஆதினம் கண்டிப்புடன் சொன்னது ‘காற்றில்’ பறந்தது! இன்று வரை நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் பக்தர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைதான் இப்போது தென்காசிக்கும் வந்துள்ளது.

இத்தனைக்கும் கோயில் செயல் அலுவலர் முருகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அறநிலையத்துறை தூத்துக்குடி இணை ஆணையருக்கு  யக்ஞ நாராயணன் கமிட்டி விசாரித்து தாக்கல் செய்த அறிக்கையில் ‘கோயில் செயல் அலுவலர் முருகன் அறநிலையத்துறைக்கு அவப்பெயர் தேடித் தரும் வகையிலேயே எல்லாம் செய்திருக்கிறார்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தும், எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும், தவறுகள் தடையின்றித் தொடரவே செய்துள்ளன என்பதும் தென்காசி வாழ் பக்தர்களின் குற்றச்சாட்டு!

நீதிமன்றம் சொன்னது போல் தனக்காக கோயில் அமைக்க மன்னன் கனவில் வந்து கேட்ட, உலகையாளும் அந்த விஸ்வநாதனே செய்தவர்களின் பாவங்களுக்குத் தண்டனை தந்தால்தான் உண்டுபோலும்!
செங்கோட்டை ஸ்ரீராம்.                     F