திராவிட மாடல் ஆட்சி சொல்வது ஒன்று செய்வது வேறு

புதிய ஓய்வூதிய திட்டத்தை (NPS) 2004 ஜனவரி 1 முதல் அவசர சட்டம் மூலம் அமுல்படுத்தியது, அன்றைய மத்திய திமுக கூட்டணி அரசு. ஆனால் தமிழகத்தில் முன் தேதியிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தியது அன்றைய அதிமுக அரசு. ஒரு அவசர சட்டம் ஆறு மாத காலத்தில் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் 10 ஆண்டுகளாக சட்டமாக்கப்படவில்லை. 2013 செப்டம்பர் மாதம் தான், அவசர சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

2004ல் மத்தியில் ஆட்சி மாற்றம், அரசியலிலும் அணி மாற்றங்கள் நடந்தது. 2007ல் தமிழகத்தில் திமுக அரசு, 2003ம் ஆண்டு திட்டத்தை அமுல்படுத்திய அதிமுக அரசு, NPS சட்டப்படி டெல்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (PFRDA) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை, மற்ற மாநிலங்கள் கையெழுத்திட்டன. அதன் பிறகு வந்த திமுக அரசும், அதே நிலையை தற்பொழுது வரை கடைப்பிடித்தது.

PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் பிற மாநில அரசு ஊழியர்களின் சேமிப்புத் தொகைக்கு (40%) ஏற்ப மாதாந்திர ஓய்வூதியம் உண்டு, பணிக்கொடை உண்டு, இறந்த குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்பம் ஊதியம் வழங்காமல் அதிமுக, திமுக அரசு கடந்த 23 ஆண்டுகளாக போட்டி போட்டு அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்றி வந்தனர்.

2003 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributor Pension Scheme) திட்டத்தை அமுல்படுத்தினாலும், 2006 வரை அதிமுக அரசு, அரசு ஊழியர்களிடம் CPS சந்தா பிடித்தம் செய்யவில்லை. 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2009ம் ஆண்டு சந்தா பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட்டது. ஆனால் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதன் விளைவு CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்தினருக்கு எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் தன் பங்களிப்பாக செலுத்திய 10 % பணத்தைக் கூட தர மறுத்து விட்டார்கள். பலர் நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் அரசு ஊழியர் செலுத்திய பங்கீடு 10%, அரசு பங்கீடு 10% அதற்குரிய வட்டியுடன் வழங்க ஆணையிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை அரசு அமுல்படுத்த மறுத்தது மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகுதான் வழங்கினார்கள். 2016 வரை இதே நிலை நீடித்தது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2016 பிப்ரவரி 19 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் CPS தொடர்பாக இரண்டு அறிவிப்புகளை அன்றைய முதல்வர் வெளியிட்டார்.

ஒன்று, CPS ஐ ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை வழங்க வல்லுனர் குழு அமைத்தது. இரண்டு, திட்டத்தில் இறந்த மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு ஊழியர் செலுத்திய பங்கீடு 10%, அரசு பங்கீடு 10 % அதற்குரிய வட்டியுடன் ஒரே தவணையாக வழங்குவது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அன்றைய தமிழக அரசை எதிர்த்து நடைபெற்ற போராட்டக் களத்திற்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அழையா விருந்தாளியாக கலந்து கொண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத்தை வழங்குவோம் என உறுதியளித்தார்.

மேலும் அவர்களது 2021 திமுக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளிலும், 309வது வாக்குறுதியாக “பழைய ஓய்வூதியம் வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்தனர்.

அவர்கள் அளித்த வாக்குறுதிபடி, பழைய ஓய்வூதியம் கொடுக்க வேண்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்டும், எந்த பலனும் இல்லாமல் இருந்தது. இதற்கு இடையில் தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக குழு ஒன்றை அமைத்து, அதன் அறிக்கையை பெற்று ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்து, குழுவும் அமைத்து, காலம் தாழ்த்தி கொண்டே இருந்தது. உடனடியாக பழைய ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அறிவிக்க வேண்டும் என சங்கங்கள் வலியுறுத்தின.

முடிவாக 2026 ஜனவரி 6 அன்று, தொடர் வேலை நிறுத்தப் போராட்டமாக அறிவித்தனர். இதன் விளைவாக தமிழக அரசு உடனடியாக ஓய்வூதிய குழுவின் அறிக்கையைப் பெற்று, கடந்த 2026 ஜனவரி 3 அன்று, தமிழக முதல்வர் தமிழ்நாடு உறுதியான ஓய்வூதிய திட்டம் (TAPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 9 அன்று அரசு ஆணை வெளியிடப்பட்டது.


சந்தேகங்களுக்கு விடையளிக்காத TAPS அரசாணை!

தமிழ்நாடு உறுதியளிக்கும் ஓய்வூதியத் திட்டம் (TAPS) தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அரசாணை முழுமையானது அல்ல, வார்த்தை ஜால நாடகமாக உள்ளது. தமிழக அரசு 3ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்த பல அம்சங்கள் அரசாணையில் உள்ளது. செய்திக் குறிப்பில் விடுபட்ட சில அம்சங்களுக்கு அரசாணையில் விடை உள்ளது.

வெளியிடப்பட்ட அரசாணையில்…

TAPSக்குரிய விரிவான விதிகள், தகுதி, நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தல் நடைமுறைகள் அரசாங்கத்தால் தனித் தனியே அறிவிக்கப்படும் என்றும், மேலும், விதிகள் அறிவிக்கப்பட்டு தேவையான சட்டப்பூர்வ மற்றும் கணக்கியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, பிறகு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டால் தான் இந்தத் திட்டத்தின் பாதிப்புகள் வெளியே தெரியவரும். புதிய திட்டம் துவங்கும் போது, பழைய திட்டத்தில் இருந்து புதிய திட்டத்தில் இணைய விருப்புரிமை கேட்பது தார்மீக ரீதியாகவும், சட்டரீதியாகவும் அரசின் கடமையாகும். தற்போது CPS திட்டத்தில் இருப்பவர்கள், TAPS திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்படுவார்கள்.

ஓய்வு பெறும் போது TAPS திட்டத்தில் பலன்களை பெறுவதா? CPS திட்டத்தில் பலன்களை பெறுவதா? அதாவது TAPS திட்டத்தில் இருந்து வெளியேறும் விருப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இது மோசடித்தனமானது. மத்திய அரசு UPS திட்டத்தை அமல்படுத்திய போது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) இணைவது அல்லது தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) தொடர்வதா? என்ற விருப்புரிமையை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது. அவ்வாறான விருப்புரிமையை வழங்காமல், பணி ஓய்வின் போது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று மட்டும் வழங்கி உள்ளது.

2003 ஏப்ரல் 1க்கு பின்பு பணியில் சேர்ந்து 2026 ஜனவரி 1க்கு முன்னர் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு, பணிக் காலத்திற்கு ஏற்ப “சிறப்புக் கருணை ஓய்வூதியம்” வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கருணை ஓய்வூதியம் எத்தனை ஆண்டு பணிக்கு, எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது அரசாணையில் தெரிவிக்கப்படவில்லை. சிறப்புக் கருணை ஓய்வூதியம் என்ற வாசகம் பணி ஓய்வு பெற்றவர்களை கொச்சைப்படுத்தும் வாசகம் ஆகும்.

TAPS திட்டம் அமுல்படுத்திய பின்பு, தகுதியான பணி காலம் நிறைவு செய்யாமல், ஒய்வு பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ஒய்வூதியம் வழங்கப்படும் என அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது, வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. திமுக அரசு, அரசு ஊழியர், ஆசிரியர்களை பழைய ஓய்வூதியம் வேண்டும் என்று போராடியவர்களை பங்களிப்பு ஓய்வூதியமே பரவாயில்லை என கூறும்படி மோசடியான ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து, தற்காலிகமாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

“தமிழ்நாடு உறுதி அளிக்கும் ஓய்வூதிய திட்டம்” என்பதில் ஓரிரு வரவேற்கக் கூடிய விஷயங்கள் இருந்தாலும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பாதகமே அதிகமாக உள்ளது. எனவே தான் அதனை களையும் பொருட்டும் அல்லது பழைய ஓய்வூதியம் பெறுவது ஒன்றே முழுமையான தீர்வு என்றும், அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் தற்போதைய அரசை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டும், இன்னும் அதிகமானோர் போராட்டக் களத்திற்கு ஆயத்தம் ஆகியும் வருகின்றனர். அரசின் முடிவில் மாற்றம் இருப்பின், அரசு ஊழியர் ஆசிரியர்களின் முடிவிலும் மாற்றம் இருக்கும்.

கட்டுரையாளர்: மாநிலத் துணைத் தலைவர், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு