திட்டமிட்டதை விட பிரமாண்டமாக இருக்கும் ராமர் கோவில்!

அயோத்தியில், ஏற்கனவே திட்டமிட்டதை விட, புதிய வடிவமைப்பில், பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, வரும், 5ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், இக்கோவிலை வடிவமைத்த, கட்டடவியல் வல்லுனர், சந்திரகாந்த் சோம்புரா, 77, கூறியதாவது: நாங்கள் பரம்பரையாக, கோவில்களை வடிவமைத்து, கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். என் தாத்தா, பிரபாஷங்கர் சோம்புரா, குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற, சோமநாதர் கோவிலை வடிவமைத்து, அதன் மறுகட்டுமான பணிகளை மேற்கொண்டார்.

வாய்ப்பு

அதுபோன்ற பெருமை, அயோத்தியில், பிரமாண்ட மான ராமர் கோவிலை வடிவமைத்து கட்டும் பணி மூலம் எனக்கு கிடைத்துள்ளது.மறைந்த, விஷ்வ இந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால், 30 ஆண்டுகளுக்கு முன், ராமர் கோவிலை வடிவமைக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. அதனால், கோவில் நிலத்தை அளவெடுக்கக் கூட என்னை அனுமதிக்கவில்லை.

என் காலடி மூலமாகவே, நிலத்தை அளந்து, கோவிலின் வடிவமைப்பை உருவாக்கினேன். வட இந்திய கோவில்களை பின்பற்றி, ‘நாகரா’ கட்டடக் கலையில், இரு குவி மாடங்களுடன் கோவிலை வடிவமைத்தேன். கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வந்த உடன், கோவில் இரு மடங்கு பெரிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

ஒன்று, நிலப் பற்றாக்குறை பிரச்னையில் தீர்வு ஏற்பட்டதால், கோவிலை விஸ்தரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்து, ராமரை தரிசிக்க, நாள்தோறும் ஏராளமான பக்தர் கள் வருவர் என்பதால், அதற்கேற்ப வசதிகளையும் அதிகரிக்க வேண்டி உள்ளது.

ஒப்புதல்

அதனால், ஏற்கனவே, இரண்டு குவி மாடங்கள் உள்ள கோவிலின் வடிவமைப்பு, ஐந்து குவி மாடங்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவில் கோபுரத்தின் உயரமும், முன்னர் திட்டமிட்டதை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. என் மகன், ஆஷிஷ் உருவாக்கிய, ராமர் கோவிலின் பிரமாண்ட புதிய வடிவமைப்பிற்கு, ராமர் கோவில் அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து விடும்.என் வாழ்நாளில் பல கோவில்களை கட்டியுள்ளேன். ஆனால், ராமர் பிறந்த இடத்தில், அவருக்காக கோவில் கட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, நான் பெற்ற பெறும் பேறாக கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.