ஆற்றங்கரை ஓரங்களில் நாகரிகங்கள் உருவாகி இருக்கலாம். ஆனால் அதை செவி வழியாகவோ எழுத்து வடிவிலோ வளர்த்தெடுத்தது செழிப்புறச் செய்தது மொழியாகும். பன்முகத்தன்மை கொண்ட பாரதத்தில் 1,600க்கும் அதிகமான மொழிகள் வழக்கத்தில் உள்ளன.
இத்தகைய மொழிகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், அவரவர் தங்களது தாய்மொழி கல்வியின் அவசியத்தை உணர்ந்து கொள்ளவும் உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி ஐ.நா.,வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவால் அனுசரிக்கப்படுகிறது.
ஒரு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அது கற்றலில் முக்கியத்துவம் பெற வேண்டும், ஒரு சமூகம் அறிவினில் செழிக்க வேண்டும் என்றால் அது தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டுமே தமிழகத்தில் கடந்த 20 வருடங்களாக ஆங்கில கல்வி மோகத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதே வரலாறு.
ஜெகதீஷ் சந்திர போஸ், பி.சி. ராய் போன்றோரின் சாதனைகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி
யடைகிறோம். ஆனால், தாய்மொழி மூலம் நமக்குக் கல்வி போதிக்கப் பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், ராய்களும் தோன்றியிருப்பார்கள் என்கிறார் மகாத்மா காந்தி. ‘‘அறிவியலை நாம் தாய்மொழியில்
தான் கற்பிக்க வேண்டும்” என்கிறார் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் சர் சி.வி.ராமன்.
“தாய்மொழி வழி கல்வி பெறாத மாணவர்கள் பெரும்பாலும் தொடக்க கல்வியிலேயே தோல்வி அடைபவர்களாகவும், பாதியிலேயே படிப்பை கைவிடுபவர்களாகவும் இருக்கிறார்கள்” என்கிறார் கனடாவின் விக்டோரியா பல்கலைக்
கழகத்தின் பேராசிரியர் யெசிகா பால்.
“முதலில் கல்வி என்பது பள்ளியில் தொடங்குவதில்லை. அது மாணவர்களின் வீடுகளில் அவர்களின் தாய்மொழியிலேயே தொடங்குகிறது” என்கிறார் கென்யாவை சேர்ந்த பேராசிரியர் ஏஞ்சலினா கியோகோ.
ஏபிஜே அப்துல் கலாம் உட்பட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் (ISRO) பணி புரியும் 90% அறிவியலாளர்கள் தாய்மொழியில் படித்தவர்களே! என்கிறார் அதன் முன்னால் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை
மேலும் ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும்போதே சில ஆயிரம் வார்த்தைகளை கற்றுக் கொண்டு விடுவதாக கூறுகிறது அறிவியல். நாரதமுனியின் வேத பாடங்களை நாராயணனின் புகழை தன் தாய் லீலாவதியின் கருவில் இருந்தபடியே பிரகலநாதன் கற்றான் என்கிறது ஆன்மீகம். குழந்தை பிறந்தது முதலே தன் தாய் தந்தையின் பேச்சு மொழியிலேயே வார்த்தைகளை பழகுவதாக கூறுகிறது ஆய்வுகள்.
இப்படி கருவில் இருந்து பிறந்தது முதல் உணர்ந்த, கற்ற மொழியை விடுத்து தொடக்கக் கல்வியில் ஒரு குழந்தைக்கு வேறு ஒரு மொழியை திணிப்பது எப்படி சரியாகும். இதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை 2020 தெளிவாகவே கூறுகிறது.
அதாவது உள்ளூர் மொழியிலேயோ, தாய் மொழியிலேயோ ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கப்பட வேண்டும், முடிந்தால் எட்டாவது வரை நீட்டிக்கலாம். . இது அரசு, தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்கிறது தேசிய கல்விக் கொள்கை.