ஒரு பக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி என்று பன்முக இயற்கை சூழலை கொண்ட தேசம் நம் பாரதம். நதிகள் இணைப்பு ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது குறித்து முதலில் ஆராயப்பட்டது. சுதந்திர பாரதத்தில் 1980ம் ஆண்டுகளில் இதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியாகட்டும், பின்னர் வந்த காங்கிரஸ் அரசுகளாகட்டும், சுயநல சுரண்டல்களைத் தவிர, நாட்டுக்கு நன்மை பயக்கும் எந்த திட்டங்களையும் முன்னெடுத்ததாக சரித்திரம் இல்லை. எனவே இவைகள் பேச்சு வழக்காகவே இருந்து விட்டது.
மாறாக 1999ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க தலைமையில் அமைந்த அடல் பிகாரி வாஜ்பாய் அரசானது இதற்கு புதிய செயல் வடிவம் கொடுத்தது. வடக்கே ஹிமாலயாவின் 14 நதிகளையும், தென்னகத்தில் 16 நதிகளையும் இணைப்பது, இதன் மூலம் கங்கை காவிரி நதிநீர் இணைப்பை சாத்தியமாக்குவதோடு வறட்சி, வெள்ளம் போனற பிரச்சனைகளுக்கு தீர்வை எட்டுவதும் இதன் இலக்கு.
வழக்கம்போல மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் சுற்றுச்சூழலை காரணம் காட்டி இந்த நல்ல திட்டத்தை கிடப்பில் போட்டதை. சமீபத்தில் கென்-–பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உயிர் கொடுத்துள்ளார். அதாவது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளில் இதற்கான அடித்தளமும் அமைக்கப்பட்டு விட்டது.
மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கென்-பெட்வா நதிகளை 221 கி.மீ. நீளக் கால்வாய்களால் இணைப்பதன் மூலம் 13 மாவட்டங்கள், இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள் பயன்பெறும், 11 லட்சம் ஹெக்டர் நிலம் பாசன வசதியும், 65 லட்சம் பேர் குடிநீர் ஆதாரத்தையும் பெறுவார்கள். 77 மீட்டர் உயரமும் 2.12 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்ட, 2800 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட தௌதன் அணை கட்டப்பட்டு, அங்கு அமைக்கப்பட உள்ள நீர் மின்நிலையம் வாயிலாக 103 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
குறிப்பாக உபி.,யின் பந்தேல் கண்ட் பகுதிகள் வறட்சியிலிருந்து மீளும். வருடத்தில் பாதி நாட்களை நீர் சேகரிப்பிலேயே கழிக்கும் தாய்மார்களின் துயர் துடைக்கப்படும். இதன் மூலம் நதி நீர் இணைப்பு திட்டங்கள் உயிர் பெற்றுள்ளது. மேலும் கங்கையும் காவிரியும் இணைக்கப்படும் நாள் என்னாலோ அந்நாளே உண்மையான தேசிய நீரோட்டத்திற்கான நன்னாளாகும்